சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

பிரதமரின் உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிப்போம் என்ற சூளுரை உள்ளூர் பொருட்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும்: திரு ஆர். ராமமூர்த்தி, தலைவர், கொடிசியா

Posted On: 13 NOV 2020 7:03PM by PIB Chennai

இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் சென்னை ஆகியவை இணைந்து உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிப்போம்என்ற தலைப்பிலான இணைய கருத்தரங்கை இன்று நடத்தியது. பண்டிகைக் காலத்தில் உள்ளூர் பொருட்களை மக்கள் வாங்குவதற்கு அவர்களைத் தூண்டும் நோக்கத்தில் இந்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

கோயம்புத்தூரில் உள்ள கொடிசியாவின் தலைவர் திரு ஆர் ராமமூர்த்தி பேசுகையில், நம் நாடு தற்சார்பு அடைவதற்கு உற்பத்தித் துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதற்கு உற்பத்தியின் திறனை வலுப்படுத்த திறன் மேம்பாட்டு பயிற்சியை வழங்குவது அவசியம் என்று அவர் தெரிவித்தார். வாகனத் துறையை எடுத்துக் காட்டிய அவர், இந்தத் துறையில் பெரும்பாலான பொருட்கள் உள்நாட்டிலேயே தயாராவதைப் போல பிற துறைகளும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். பிரதமரின் உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிப்போம் என்ற சூளுரையைப் பாராட்டிய அவர், இதன்மூலம் உள்ளூர் பொருட்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.

மத்திய அரசு வகுத்துத் தந்துள்ள பாதையில் மாநில அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது. விரைவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை உருவாகக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் அப்படி ஒரு அலை எழுந்தாலும் நமது தொழில்துறை பெரும் பாதிப்பை சந்திக்காது. ஏனெனில் தற்போதைய பெருந்தொற்றுக் காலம் தொழிற்சாலைகளை எப்படி இயக்குவது என்பதை நமக்குக் கற்றுத் தந்துள்ளதுஎன்று அவர் தெரிவித்தார். உற்பத்தித் துறையில் இந்தியாவிற்கு போதிய தகுதிகள் இருப்பினும் உள்கட்டமைப்பு தொழில்நுட்பம் மற்றும் திறன் சார்ந்த ஆதரவின் மூலம் நம்மால் இலக்கை அடைய முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஊரகப் பகுதிகள் வளர்ச்சி அடைவதுடன் மக்களின் மனநிலையும் மாற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதில் கலந்து கொண்டு பேசிய மூத்த பத்திரிக்கையாளர் திரு வெங்கடேஷ், கொரோனா தொற்று பெரும் சவால்களை அளித்துள்ள அதேவேளையில் நாடு முழுவதும் மக்களுக்கு பல்வேறு வாய்ப்புகளையும் இது வழங்கியுள்ளது. வெளிநாட்டு பொருட்கள் மீது இருந்த ஈர்ப்பும் ஆர்வமும் குறைந்து உள்நாட்டு பொருட்களின் மீது மக்களுக்கு தற்போது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிப்போம் என்ற பிரச்சாரத்தின் மூலம் நாட்டின் ஏற்றுமதிக்கோ, அல்லது வெளிநாட்டு பொருட்களை நாம் வாங்குவதற்கும் தடை விதிக்கப்படவில்லை. உள்ளூர் பொருட்களின் தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதும்உள்ளூர் சந்தையை ஊக்குவித்து அதன் மூலம் தன்னிறைவு அடைவதுமே இதன் நோக்கம்”, என்று அவர் குறிப்பிட்டார். மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு சலுகைகளையும் திட்டங்களை அறிவித்து வருவதைக் குறிப்பிட்டுப் பாராட்டிய அவர் இதன் மூலம் சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் புதிய யதார்த்தத்திற்குத் தங்களை மாற்றிக் கொண்டுள்ளதாகக் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய சிறுமுகை தேசிய கைத்தறி பயிற்சியாளர் திரு காரப்பன், இளைஞர்கள் கைத்தறித் துறையில் ஈடுபட வேண்டும் என்றும் தற்போது 40 வயதுக்குக் குறைவானோர் இந்தத் துறையில் யாரும் இல்லை என்று கூறினார்.

கைத்தறித் துறையில் போதிய திறன் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் இந்தத் துறை குறித்த தகவல்கள் பாடத் திட்டங்களிலும் இடம் பெறவேண்டும் என்றும் இதன் மூலம் இளைஞர்கள் மற்றும் சாமானிய மக்களுக்கு கைத்தறித் துறை குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தலைமை உரை வழங்கிய மத்திய தகவல்  ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் தென் மண்டல தலைமை இயக்குநர் திரு எஸ். வெங்கடேஷ்வர், இந்தியா பாரம்பரியமாக தன்னிறைவு அடைந்த நாடு என்றும் எனினும் மேல்நாட்டு கலாச்சாரத்தின் தாக்கம் காரணமாக அந்நிய நாட்டுப் பொருட்களுக்கு முக்கியத்துவம் தரத் துவங்கினார்கள் என்றும் கூறினார். பட்டு, பருத்தி, களிமண் மற்றும் உலோகங்களின் தயாரிப்பில் நாம் சிறந்து விளங்குகிறோம்.  தமிழ்நாடு, மதுரை தஞ்சாவூர், மலைக் குகை போன்ற கோவில் கட்டமைப்புகள், உணவு வகைகள், காஞ்சிபுரம் பட்டு போன்ற துணி வகைகள், தோல் பொருட்கள், கலை, கட்டிடம் மற்றும் கலாச்சாரத்திற்கு தமிழகம் பெயர் பெற்றுள்ளது”, என்று அவர் குறிப்பிட்டார். இந்த பெரும் தொற்று காலம் நமது பலத்தை அறிந்து நாம் செயல்படுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அறிமுக உரை நிகழ்த்திய சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் கூடுதல் தலைமை இயக்குநர் திரு மா. அண்ணாதுரை, உள்நாட்டு தொழில் துறையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு வாய்ப்புகளை அதிகப்படுத்தி அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாகக் கூறினார்.

முன்னதாக சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இணை இயக்குநர் திரு ஜே. காமராஜ் வரவேற்புரையும் நன்றியுரையும் வழங்கினார்.

**********************



(Release ID: 1672754) Visitor Counter : 53


Read this release in: English