சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

கொரோனாவின் போது தொழிலாளர்களின் குறைகளை களைவதில் மத்திய தொழிலாளர் துறையின் சென்னை மண்டலம் முதலிடம்

Posted On: 13 NOV 2020 2:32PM by PIB Chennai

இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தொழிலாளர் துறையில் நாடு முழுவதும் 20 மண்டலங்கள் இருக்கின்றன. இவற்றில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சென்னை மண்டலத்தில் வருகின்றன. வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், அணுசக்தி மையங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், தொலைதொடர்பு அமைப்புகள், சுரங்கங்கள், சிமெண்ட் நிறுவனங்கள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களின் குறைகளை மத்திய தொழிலாளர் துறை கையாள்கிறது.

கொரோனா தொற்றின் போது தொழிலாளர்களின் பல்வேறு குறைகளை கையாள்வதற்காக 20 மெய்நிகர் கட்டுப்பாட்டு மையங்களை இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அமைத்தது. தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலமாக தங்களது குறைகளை இந்தக் கட்டுப்பாட்டு அறைகளுக்கு தெரிவிக்க தொழிலாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஒவ்வொரு கட்டுப்பாட்டு அறைக்கும் ஒரு துணை தலைமை தொழிலாளர் ஆணையர் (மத்திய) தலைமையேற்றார்.

 

மேற்கண்ட 20 கட்டுப்பாட்டு மையங்கள் ஏப்ரல் 2020-இல் இருந்து சுமார் 16,000 குறைகளை பெற்றுக் கொண்டு, பரிசீலித்து, கையாண்டு, தீர்த்து வைத்தது. சென்னை மண்டலம் மட்டுமே 2,700 குறைகளைக் கையாண்டது.

மேலும், தமிழக அரசின் ஆதரவோடு, 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்ட 635 டன் நிவாரணப் பொருட்கள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பணியிடங்களில் சிக்கித்தவித்த 37,337 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.  பொது முடக்கத்தின் போது தொழிலாளர்களுக்கு இந்தளவு சிறப்பான சேவை வேறு எந்த மண்டலத்திலும் வழங்கப்படவில்லை. துணை தலைமை தொழிலாளர் ஆணையர் (மத்திய), தமிழ்நாடு மற்றும் பதுச்சேரி, திரு வி முத்து மாணிக்கம் தலைமையில், பணியாளர்களுக்கு அவர்களின் பணியிடங்களிலேயே இவை வழங்கப்பட்டன.

மேற்கண்ட சேவைகளுக்காக, இந்தியாவிலேயே சிறந்த மண்டலம் சென்னை  என்று தலைமை தொழிலாளர் ஆணையர் (மத்திய), புதுதில்லி, திரு டி பி எஸ் நெகியால் அறிவிக்கபட்டது. சென்னை மண்டலம் முதல் பரிசை வென்ற நிலையில், கொல்கத்தா மற்றும் கொச்சின் மண்டலங்கள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை பெற்றன.

2020 நவம்பர் 11 அன்று புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணையமைச்சர் திரு சந்தோஷ் குமார் கங்க்வார், பெருந்தொற்றின் போது தொழிலாளர்களுக்கு சிறப்பான சேவையை ஆற்றியதற்காக துணை தலைமை தொழிலாளர் ஆணையர் (மத்திய), தமிழ்நாடு மற்றும் பதுச்சேரி, திரு வி முத்து மாணிக்கத்தை கவுரவித்தார்.

இந்திய அரசின் செயலாளர் திரு அபூர்வ சந்திரா, தலைமை தொழிலாளர் ஆணையர் (மத்திய), திரு டி பி எஸ் நெகி, இந்திய அரசின் கூடுதல் செயலாளர்   திருமதி அனுராதா பிரசாத், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளர் அரசுக் காப்பீட்டு நிறுவனத்தின் மூத்த அலுவலர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேற்கண்ட தகவல்கள், திரு வி முத்து மாணிக்கம்துணை தலைமை தொழிலாளர் ஆணையர் (மத்திய), தமிழ்நாடு மற்றும் பதுச்சேரி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், ஐந்தாவது மாடி, சாஸ்திரி பவன், சென்னை-600 006 வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**********************



(Release ID: 1672649) Visitor Counter : 98


Read this release in: English