சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தேசிய தோட்டக்கலை இயக்கம் சிறிய விவசாயிகளுக்கு ஓர் வரம்
தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், தமிழகத்திற்கு 172.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு
प्रविष्टि तिथि:
17 OCT 2020 4:51PM by PIB Chennai
உணவு தானியங்களின் உற்பத்தி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலக உணவு தினம் அக்டோபர் 16ஆம் தேதி கொண்டாடப்பட்டது. நமது விவசாயிகள், தங்களது கடும் உழைப்பினால் ஊட்டச்சத்து மிக்க உணவு தானியங்களை நாட்டிற்கு அளித்து வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கும் பணியில் விவசாயிகள், விஞ்ஞானிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஊட்டச்சத்து மிக்க தோட்டத்தை உருவாக்கும் பிரச்சாரத்தில், இரும்பு, ஜிங்க் உள்ளிட்ட ஊட்டச்சத்து மிக்க பயிர்கள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. இந்திய விவசாயிகளின் கடும் உழைப்பினால் கொவிட்-19 பரவல் காலகட்டத்திலும் உணவு தானிய உற்பத்தி கடந்த ஆண்டைவிட அதிகரித்த சாதனை படைத்து இருப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
மத்திய அரசின் திட்டமான ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சிக்கான இயக்கத்தின் மூலம் தோட்டக்கலைத் துறையின் பழங்கள், காய்கறிகள், கிழங்குப் பயிர்கள், காளான், மசாலா பொருட்கள், மலர்கள், தேங்காய், முந்திரி, கொக்கோ மற்றும் மூங்கில் உள்ளிட்டவை மேம்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் தோட்டக்கலை வளர்ச்சிக்காக மத்திய அரசு 60 சதவிகித நிதியை ஒதுக்கி உள்ளது. தேசிய தோட்டக்கலை வாரியம் மற்றும் தேங்காய் மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட முகமைகளின் உதவியுடன் மத்திய அரசு 100 சதவிகித நிதியை இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், தமிழகத்திற்கு 172.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சொட்டுநீர் பாசனம் உள்ளிட்ட பல்வேறுத் திட்டங்களை ஊக்குவிப்பதற்காக தமிழக விவசாயிகளுக்கு அரசு முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் அருங்கல் கிராமத்தில் வசிக்கும் திரு செல்வம் என்ற விவசாயி 95498 ரூபாய் அரசு மானியத்துடன் நீர்ப் பாசனத்தைப் பயன்படுத்தி ஒரு ஏக்கர் நிலத்தில் தோட்டக்கலை பூச்செடிகளை வளர்த்து வருகிறார். மேலும் 50 சென்ட் விளைநிலத்தில் அவர் மிளகாயையும் பயிரிட்டு வருகிறார். திரு பூமாலை என்பவர்,1.12 லட்சம் ரூபாய் அரசு மானிய உதவியுடன் சொட்டு நீர் போன்ற பாசனத்தைப் பயன்படுத்தி தக்காளி மற்றும் சோளத்தை பயிர் செய்கிறார். கல்லக்குடி காட்டூர் கிராமத்தில் 50 சதவீத மானியமான 3.50 லட்சம் ரூபாய் செலவில் தக்காளி பயிரிடப்படுகிறது. இது குறித்து அரியலூர் ஆட்சியர் திருமதி இரத்தினா விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
அரியலூரில் இந்த வருடம் 54 கோடி ரூபாய் செலவில் 7200 ஹெக்டர் நிலத்தில் சொட்டு நீர் போன்ற பாசனம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 9 கோடி ரூபாய் செலவில் 2 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் தோட்டக்கலைப் பயிர்களைப் பயிரிடுவதற்காக விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூபாய் 2500 ஊக்கத்தொகையாக வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 22.2 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் அரியலூரில் கத்திரிக்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய், மிளகாய், பாகற்காய், புடலங்காய் மற்றும் பூசணிக்காய் பயிரிடப்பட்டுள்ளன.
தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் காய்கறிகள் பயிரிடுதலைப் பாதுகாப்பதற்காக நகரங்களின் அருகில் தொகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்தத் தொகுப்புகளில் காய்கறிகளை பாதுகாப்பதற்கான குளிர்சாதன வசதி மற்றும் அவற்றை சந்தைப்படுத்துவதற்குத் தேவையான வாகனங்கள் மற்றும் வசதிகள் அளிக்கப்படும். கொவிட்-19 பரவலால் ஏற்பட்டுள்ள ஊரடங்கின்போது உணவு தானியம் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து வேளாண் துறையில் தற்சார்பு அடைய வழிவகை செய்துள்ளது. தேசத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரும்பாடு படும் விவசாயிகளின் நலனுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
**********************


(रिलीज़ आईडी: 1665493)
आगंतुक पटल : 383
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English