வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் செய்த பல்வேறு அறிவிப்புகள்

Posted On: 21 SEP 2020 5:03PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல், கீழ்க்கண்ட தகவல்களை அளித்தார்.

மின் வர்த்தகமும் மின் சந்தையும் பல்வேறு நிறுவனங்களுக்கு வாய்ப்புகளைத் திறந்து விடுவதால், அவர்களுக்கு அவை நன்மை பயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், மின் வணிக நிறுவனங்களால் தங்களது தொழில் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் சங்கங்களிடம் இருந்து அரசுக்கு தகவல்கள் வந்துள்ளன.

மின் வணிக நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கக் கூடிய ஒழுங்குமுறை சூழலை உருவாக்குவதற்காக தேசிய வரைவு மின் வணிக திட்டம் 2019 பிப்ரவரி 23 அன்று பொதுத்தளத்தில் வைக்கப்பட்டது.

சமீபத்தில் நுகர்வோரின் நலனை காப்பதற்காக 2020 ஜூலை 23 அன்று நுகர்வோர் பாதுகாப்பு (மின்வணிக விதிகள்) 2020 அறிவிக்கப்பட்டன.

வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் தலைமை இயக்குநர் அலுவலகம் அளித்துள்ள தகவலின் படி 2018-19-இல் $330.08 பில்லியனாக இருந்த ஏற்றுமதி, 2019-20-இல் $313.36 பில்லியனாக இருந்தது.

தமிழ்நாட்டில் தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில ஏற்றுமதி ஊக்குவிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதோடு, 37 மாவட்டங்களில் மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 2018-19-இல் $30525.91 மில்லியனாக இருந்த ஏற்றுமதி, 2019-20-இல் $30014.55 மில்லியனாக இருந்தது.

புது நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) வணிக முத்திரையை (டிரேட் மார்க்) பெறுவதை ஊக்குவிப்பதற்காக, டிரேட்மார்க் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கான சட்டப்பூர்வ கட்டணங்களில் 50 சதவீத சலுகையை தொழில்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறை வழங்குகிறது.

தொழில்களை ஊக்குவிப்பது அரசின் தொடர் முன்னுரிமையாக உள்ளது. பல்வேறு துறைகளில் துணிச்சலான சீர்திருத்தங்களுடன் தற்சார்பு இந்தியா தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மத்திய முதலீட்டு ஒப்புதல் மையம் அமைக்கப்பட்டுள்ளது, உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது மற்றும் படிப்படியான தயாரிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முதலீடுகளை அதிகப்படுத்தவும், புதுமைகளை ஊக்குவிக்கவும், உலகத் தரம்வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்கவும் மற்றும் இந்தியாவை உற்பத்தி, வடிவமைப்பு மற்றும் புதுமைகளுக்கான மையமாக ஆக்கவும் மேக் இன் இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது மேக் இன் இந்தியா 2.0-இன் கீழ் 27 துறைகளில் கவனம் செலுத்தப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தியை பெருக்குவதற்காக ஏற்கனவே உள்ள திட்டங்களைத் தவிர, பல்வேறு புதிய திட்டங்களையும் அரசு சமீபத்தில் அறிவித்தது.

பெரும்பாலான துறைகளில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும் நிலையில், சுதந்திரமான மற்றும் வெளிப்படையான கொள்கை ஒன்றை அரசு பின்பற்றுகிறது.

உலகிலேயே மிகவும் சுதந்திரமான நேரடி அந்நிய முதலீட்டு கொள்கைகளை கொண்டுள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவில், பல்வேறு துறைகளில் தானியங்கி முறையில் 100% அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப் படுகிறது.

 

***********



(Release ID: 1657611) Visitor Counter : 153


Read this release in: English , Manipuri , Tamil