மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
கொவிட் தொற்று சமயத்தில் மாணவர்களுக்கு இ-கல்வி: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தகவல்
Posted On:
17 SEP 2020 5:54PM by PIB Chennai
மத்திய கல்வி அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:
கொவிட்-19 தொற்று நேரத்தில் பள்ளிமாணவர்களின் கல்வியை உறுதி செய்ய மத்திய கல்வி அமைச்சகம் பல நடவடிக்கைகள் எடுத்தது.
பிரதமரின் இ-வித்யா திட்டம் மூலம் டிஜிட்டல்/ஆன்லைன் மூலம் கல்வி கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
நாடு முழுவதும் 1 முதல் 12 வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்காக ‘திக்ஷா’ என்ற டிஜிட்டல் தேசிய தளம் உருவாக்கப்பட்டது. இவற்றை இணையதளம் மற்றும் கைபேசி செயலி மூலம் அணுக முடியும். இதன் மூலம் ஏராளமான பாடத்திட்டங்களையும், புத்தகங்களையும், க்யூ.ஆர் குறியீடு மூலம் பெற முடியும். இது பள்ளி கல்விக்கான ஒரே நாடு, ஒரே டிஜிட்டல் தளம்.
கடந்த ஏப்ரல் வித்யாதான் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் இ-கல்விக்கான பங்களிப்பு/நன்கொடை அனுமதிக்கப்பட்டன.
இணைய இணைப்பு இல்லாதவர்கள் டி.வி. மூலம் ஸ்வயம் பிரபா டிடிஎச் சேனல்கள் உதவின. உயர்தர கல்வி நிகழ்ச்சிகளை 32 சேனல்கள் ஒளிபரப்பின.
ஸ்வயம் இணையதளத்தில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 92 பாடத்திட்டங்கள் தொடங்கப்பட்டன. இதில் 1.5 கோடி மாணவர்கள் பதிவு செய்து பயனடைந்தனர்.
ஆன்லைன் வசதியை பயன்படுத்த முடியாத தொலைதூர மாணவர்களுக்கு, ரேடியோ மூலம் கல்வி கற்பிக்கப்பட்டது. 289 ரேடியோ நிலையங்கள் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பாடங்களை ஒலிபரப்பின. சிக்ஷாவாணி என்ற ‘பாட் காஸ்ட்’ மூலம் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் ஆடியோ மூலம் வழங்கப்பட்டன.
காது கேளாத மாணவர்களுக்கு ஒரு டிடிஎச் சேனல் கல்வி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது. கண் தெரியாத மற்றும் காது கேளாத மாணவர்களுக்கு பாடங்கள் டிஜிட்டல் வழியில் இணையதளம் மூலமாக வழங்கப்பட்டன.
இவை தவிர இ-பாடசாலை, இ-முதுநிலை பாடசாலை, மெய்நிகர் ஆய்வகங்கள், தேசிய டிஜிட்டல் நூலகம் போன்ற தளங்களும் மாணவர்களின் கல்விக்கு பெரிதும் உதவின.
தேசிய கல்வி கொள்கையில், குழந்தைகள் எப்படி கற்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது அறிவை மட்டும் வளர்க்காமல், மாணவர்களின் பண்பையும் வளர்க்கும் விதத்திலும், 21-ம் நூற்றாண்டு திறமைகளுக்கு ஏற்ற வகையில் மாணவர்களை தயார்படுத்தும் நோக்கத்திலும் தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை, சர்வதேச தரத்துக்கு உயர்த்துவதில் அரசு உறுதியாக உள்ளது. இதற்காக பல்கலை மானியக் குழு 10 பொது துறை மற்றும் 10 தனியார் கல்வி நிறுவனங்களை புகழ்பெற்ற நிறுவனங்களாக அறிவித்துள்ளது.
உலகின் தலைசிறந்த 500 கல்வி நிறுவனங்களுக்குள், இந்திய உயர்கல்வி நிறுவனங்களை கொண்டு வருவதுதான் இதன் நோக்கம். இந்திய உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தை உயர்த்த மத்திய அரசு இன்னும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் கூறினார்.
**************
(Release ID: 1656048)
Visitor Counter : 127