சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ரூ. 40 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருளை கைப்பற்றியது சென்னை விமானநிலைய சுங்கத்துறை. ஒருவர் கைது
Posted On:
09 SEP 2020 3:10PM by PIB Chennai
போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த உளவுத் தகவல் அடிப்படையில், சென்னை விமான நிலைய கூரியர் முனையத்தில், ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இரண்டு பார்சல்களை இடைமறித்து சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.
ஒரு பார்சலை திறந்த போது, முதுகுவலிக்கு பயன்படுத்தப்படும் 8 இடுப்பு பட்டைகள் இருந்தன. அவைகள் வழக்கத்துக்கு மாறாக அதிக எடையுடன் இருந்தன. அதை அறுத்து சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது, 3 பிளாஸ்டிக் பைகளில் வெள்ளை கிரிஸ்டலைன்’ போதைப் பொருள் பொடிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 2 கிலோ வெள்ளை கிரிஸ்டலைன், அடங்கிய 24 பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டன. 2வது பார்சலில், 2 பரிசு கோப்பைகள் இருந்தன. அதுவும் வழக்கத்துக்கு மாறாக அதிக எடையுடன் இருந்தது. அதன் அடிப்பகுதியை பிரித்து பார்த்தபோது, 1 கிலோ எடையுடன் கூடிய 2 பிளாஸ்டிக் பைகளில் கிரிஸ்டலைன் பொடி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இவை போதைப் பொருள் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் பறிமுதல் செய்யப்பட்ட 4 கிலோ, போதைப் பொருளின் மதிப்பு ரூ.40 லட்சம்.
இது தொடர்பாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை தொடர்ந்து நடக்கிறது என்று சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை ஆணையர் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
(Release ID: 1652613)