சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
இ-சஞ்சீவனி ஓபிடி ஆலோசனையில் தமிழகம் முதலிடம்
Posted On:
20 AUG 2020 2:52PM by PIB Chennai
கோவிட்-19 பெருந்தொற்று தொலைமருத்துவ ஆலோசனை, தொலைமருந்துகளுக்குப் புதிய வழிகளைத் திறந்துவிட்டுள்ளது. ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடியாத இந்த சிக்கலான சமயத்தில், டிஜிட்டல் இந்தியா பிரச்சாரத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தேவைப்படுபவர்களுக்கு அத்தியாவசிய மருத்துவ கவனிப்பு வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, மத்திய சுகாதார அமைச்சகம், தங்கள் வீட்டு வரவேற்பரையில் இருந்தவாறு இணையத்தின் மூலம் மருத்துவர்களைக் கலந்தாலோசிக்கும், இ-சஞ்சீவனி ஓபிடி என்னும் வெளி நோயாளிகள் ஆலோசனை வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. வீடுகளில் பாதுகாப்பாக இருக்கவேண்டிய கட்டாயத்தில், மருத்துவரிடம் மருத்துவ ஆலோசனைகளைப் பெற வேண்டிய நிலையில் இருப்பவர்களிடையே இது உடனடி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை மாநிலங்கள் இடையே, தமிழகம் இ-சஞ்சீவனி ஓபிடி ஆலோசனைகளில் 56,000-க்கும் மேற்பட்ட அழைப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும், இ-சஞ்சீவனியில், 2 லட்சத்துக்கும் அதிகமான ஆலோசனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது. சிறந்த இணையதள இணைப்பு அல்லது கணினி சேவை மையம் உள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு குறிப்பாக ஊரகப்பகுதி நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.
இ-சஞ்சீவனி சேவைக்கு, கூகுள் குரோம் அல்லது யாகூ சர்ச்-இல் https://www.esanjeevaniopd.in நுழையவேண்டும். மருத்துவ ஆலோசனைக்குப் பின்வரும் வகையில் படிப்படியாக பின்பற்ற வேண்டும். 1.நோயாளி பதிவுப் பொத்தானை கிளிக் செய்து, மொபைல் எண்ணைக் குறிப்பிடவேண்டும். குறுந்தகவல் மூலம் ஒரு முறை கடவுச்சொல்லை அனுப்ப ஓடிபி பொத்தானை கிளிக் செய்யவேண்டும். 2. கடவுச்சொல்லை நோயாளி பதிவு உரையாடலில் குறிப்பிட்டு ஓ.கே கொடுக்க வேண்டும். நோயாளி பதிவு மற்றும் டோக்கன் உருவாக்கம் உரையாடல் திரையில் பளிச்சிடும். 3. சிவப்பு நட்சத்திரக் குறியுடன் உள்ள இடங்களில் தேவையான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யவேண்டும். 4. எக்ஸ்ரே, ரத்தம், கொழுப்பு, சிறுநீர்ப் பரிசோதனை முடிவுகள் உள்ளிட்டவை இருந்தால், அவை பற்றிய அனைத்து ஆவணங்களையும் பதிவேற்ற வேண்டும். 5. நோயாளி ஐடி மற்றும் டோக்கன் பொத்தானை கிளிக் செய்யவும். 6. பின்னர் உள்நுழைவு செய்து, மெய்நிகர் ஆலோசனை அறையில் வரிசையில் காத்திருக்கவும். 7. உங்கள் நேரம் வரும் வரை காத்திருந்து, மருத்துவர் வந்ததும், கால் நவ் பொத்தானை கிளிக் செய்யவும். 8. கால் நவ் பொத்தானை கிளிக் செய்து, உரையாடலைத் தொடங்குவதற்கு ஏதுவாக, மடிக்கணினியில் கேமரா மற்றும் மைக்ரோ போனையோ, அல்லது ஸ்மார்ட் போன் மூலமாகவோ அணுகவும். 9. அனுமதி/ ஏற்பு ஆகியவற்றை கிளிக்கவும்.10. உங்கள் அழைப்புக்கு மருத்துவர் பதில் அளித்தவுடன், மைக்ரோபோன் உதவியுடன் கலந்துரையாடவும். மருத்துவர் வெற்றிகரமாக தனது மதிப்பீட்டை நிறைவு செய்ததும், தொலை மருத்துவ அமர்வு முடிவுக்கு வரும். அதன் பின்னர் மருந்துச்சீட்டு மருத்துவரால் வழங்கப்படும். உங்கள் மருந்துச் சீட்டுக்கான இணைப்பை, பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் போனில் காணலாம். 11. பிரிண்ட் பொத்தானை கிளிக் செய்து, உங்கள் மருந்து சீட்டைப் பிரிண்ட் செய்து ஆவணமாகப் பயன்படுத்தலாம்.
தமிழகத்தில் இ-சஞ்சீவனி ஓபிடி நேரம் வருமாறு; பொது ஓபிடி தினசரி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை. ஆனடி-ரெட்ரோவைரல் சிகிச்சை (ஏஆர்டி) ஓபிடி- திங்கள் முதல் சனி வரை – காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, டிபி மருந்து ஓபிடி- திங்கள் முதல் சனி வரை - காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம் ஓபிடி- திங்கள் முதல் வெள்ளி வரை- காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை. இ-சஞ்சீவனி பதிவு மிகவும் எளிதாக இருப்பதால் அதற்கு வரவேற்பு காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நோயாளி பதிவு, டோக்கன் உருவாக்கம், வரிசை மேலாண்மை, மருத்துவருடன் காணொளிக் காட்சி ஆலோசனை, இ-மருந்து சீட்டு ஆகியவை முக்கிய வழிமுறைகளாகும். இது முற்றிலும் இலவசச் சேவை என்றும், மாநிலச் சேவை மருத்துவர்களிடமும் ஆலோசனை பெறலாம் என்றும் மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். திருச்சியைச் சேர்ந்த திருமதி சாந்தி, இ-சஞ்சீவனி குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றார். நோய்த்தொற்று பரவும் வாய்ப்பு உள்ளதால், தற்போது மருத்துவமனைகளுக்குச் செல்வது மிகவும் அபாயமாகும். மருத்துவ சிகிச்சை தொடர்பான ஐயங்களுக்கு விளக்கம் பெறுவதற்கு தொலை ஆலோசனை, அபாயமில்லாத அளவில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அவசரம் என்றால் மட்டுமே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். அந்த வகையில், இது, குறிப்பாக வயது முதிர்ந்த நோயாளிகளுக்கு ஆரம்ப முதலுதவிக்கு உதவிகரமாக இருக்கும்.
2 லட்சத்துக்கும் அதிகமான ஓபிடி ஆலோசனைகளுடன் இ-சஞ்சீவனி இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாகி வருகிறது. கோவிட்-19 பரவி வரும் சூழலில், குறிப்பாக மருத்துவமனைகளை எளிதில் அணுகமுடியாத நோயாளிகளுக்கு டெலிகன்சல்டன்சி என்னும் தொலை மருத்துவ ஆலோசனை அதிகப் பயனுள்ளதாக மாறும் வாய்ப்பு உள்ளது. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் பயன் இ-சஞ்சீவனி மற்றும் இதர சேவைகள் மூலம் தரமான சுகாதாரக் கவனிப்பைப் பெற்றுத் தந்துள்ளது. இதன் மூலம், கோவிட் நோய்த்தொற்று காலத்தில் அணுக சிரமம் உள்ள லட்சக்கணக்கானோரின் கனவு நனவாகியுள்ளது.

இசஞ்சீவனி பதிவு

இசஞ்சீவனி ஒபிடி
(Release ID: 1651258)
Visitor Counter : 271