இடுகை இடப்பட்ட நாள்:
30 AUG 2020 2:58PM by PIB Chennai
நாட்டின் மிகச் சிறந்த ஹாக்கி விளையாட்டு வீரரும் ஹாக்கியின் அடையாளமாகவும் விளங்கிய மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்த தினமான சனிக்கிழமை 29 ஆகஸ்ட் 2020 அன்று தேசிய விளையாட்டுக்கள் தினமாகக் கொண்டாடப்பட்டது.
தற்போது நிலவி வரும் பல்வேறு சவால்களுக்கு இடையிலும் சென்னை ஐஐடி-யில் உள்ள கேந்திரிய வித்யாலயா தேசிய விளையாட்டு தினத்தை பெரும் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் கொண்டாடியது.
வித்யாலயாவின் முதல்வர் டாக்டர்.எம்.மாணிக்கசாமி தனது உரையில் குழந்தைகளின் வாழ்வில் விளையாட்டுக்களின் முக்கியத்துவம் குறித்தும், பல்வேறு விளையாட்டுகளில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் திறன் பெறும் வகையில் அவர்களை எப்படி ஈடுபடுத்துவது என்றும் வலியுறுத்தினார். ஒருவர் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற தேவையில்லை அதற்கு மாறாக ஒருவர் வீட்டிலேயே எளிய முறையிலான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல்திறனுடனும், பாதுகாப்பாகவும் இருக்கமுடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தியக் கிரிக்கெட் குழுவின் முன்னாள் கேப்டனும், தேர்ந்தெடுப்புக் குழுவின் முன்னாள் தலைவருமான திரு.கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஊக்கவுரை ஆற்றினார். விளையாட்டுக் கல்வி என்பது தோல்வியை புன்னகையுடன் எதிர்கொள்ளவும், வெற்றியை அடக்கத்துடன் ஏற்றுக்கொள்ளவும் மாணவர்களைப் பயிற்றுவிக்கிறது என்று குறிப்பிட்ட திரு ஸ்ரீகாந்த் புத்துணர்ச்சி பெறவும் பொழுது போக்கவும் ஆரோக்கியமான வழிமுறைகளாக விளையாட்டுக்கள் இருக்கின்றன என்றும் குறிப்பிட்டார். நியாய உணர்வு, குழுவாகச் செயல்படுதல், சமமாக மதித்தல், ஒழுக்கம், அனைவரையும் உள்ளடக்குதல், விடாமுயற்சி மற்றும் மரியாதை போன்ற விழுமியங்களை விளையாட்டு கற்றுத் தருகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஹாக்கி வீரரான மேஜர் தியான் சந்த் அவர்களின் வாழ்க்கை குறித்த குறும்படமும் நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது. கேந்திரிய வித்யாலயா மாணவர்கள் தயாரித்திருந்த போஸ்டர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிகழ்ச்சியின் நேரடி ஒலிபரப்பை https://youtu.be/ypMxeFwg4ns. என்ற யு-டியூப் இணைப்பில் காணலாம்:
*********