சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட 11.7 லட்சம் இந்தியர்களை வந்தேபாரத் இயக்கம் தாய்நாட்டுக்குத் திரும்ப அழைத்து வந்தது

வீடு திரும்பிய வேலையில்லாத் தொழிலாளர்களுக்காக சிறப்பு திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது

Posted On: 25 AUG 2020 6:01PM by PIB Chennai

கோவிட்-19 பெருந்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் நிறைய இந்தியர்கள் வெளிநாடுகளில் சிக்கித்தவித்தனர். பெருந்தொற்றுக் காலத்தில் குடும்பத்துடன் தாய்நாட்டில் இருக்க பலரும், குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்தவர்கள், விரும்பியதால் அவர்கள் கவலைக்குள்ளானார்கள். பல தொழிலாளர்கள் வேலைகளையும் இழந்ததால், அவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்ப வந்தேபாரத் இயக்கம் உதவியது.

 

வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இந்தியர்களைத் தாயகம் அழைத்து வரவும், இந்தியாவில் சிக்கித்தவிக்கும் இதர நாட்டினரை அவர்களது நாடுகளுக்கு அனுப்பவும் வந்தேபாரத் இயக்கம் மத்திய அரசால் மே 7 அன்று தொடங்கப்பட்டது. வந்தேபாரத் இயக்கத்தின் ஆறாவது கட்டம் செப்டம்பர் 1 அன்று தொடங்கி அக்டோபர் 24 வரை தொடரும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆகஸ்டு 1 அன்று தொடங்கிய ஐந்தாவது கட்டம் ஆகஸ்டு 31 அன்று முடிவடையும். ஷார்ஜா, அபுதாபி, துபாய், பாங்காக், கொழும்பு, தரேஸ் சலாம் மற்றும் ரியாத் போன்ற இடங்களில் இருந்து 766-க்கும் அதிகமான விமானங்கள் இந்திய நகரங்களுக்குத் திட்டமிடப்பட்டிருக்கின்றன. வந்தேபாரத் இயக்கத்தின் கீழ்கோவிட்-19 பெருந்தொற்று காரணத்தால் பல்வேறு நாடுகளில் சிக்கித் தவித்த 11.70 லட்சம்  இந்தியர்கள் இந்த வருடம் மே 6-இல் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர். அதே போல், இந்தியாவில் சிக்கித் தவித்த 1.66 லட்சம் இதர நாட்டினர் அவர்களது நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திங்களன்று திருச்சியில் இருந்து துபாய்க்கு 158 பயணிகளை வந்தேபாரத் இயக்கத்தின் கீழ் அழைத்துச் சென்றது

 

முதல் கட்ட வந்தே பாரத் இயக்கத்தின் கீழ் மே 7-ஆம் தேதி தொடங்கி மே 17ஆம் தேதி வரை 84 விமானங்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், பிலிப்பின்ஸ், சவுதி அரேபியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கு இயக்கப்பட்டன.மே 16-ஆம் தேதி தொடங்கிய இரண்டாம் கட்ட வந்தே பாரத் இயக்கப் பணி ஜூன் 13-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது. ஜூன் 10 முதல் ஜூன் 22 வரையிலான மூன்றாம் கட்டப் பணியில் 130 விமானங்கள் இயக்கப்பட்டன. அதில் சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். ஜூலை 1ஆம் தேதி நான்காம் கட்டப்பணி தொடங்கியது. வந்தே பாரத் இயக்கத்தின் ஐந்தாவது கட்டத்தில், திருச்சிராப்பள்ளிக்கும், சிங்கப்பூருக்கும் இடையே ஆகஸ்டு 25, 26, 28, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்குகிறது. திருச்சி-குவைத் மார்க்கத்தில் திரும்ப அழைத்து வரும் விமானம் ஒன்றையும் ஆகஸ்டு 29 அன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வந்தே பாரத் இயக்கத்தின் கீழ் இயக்குகிறது. சனிக்கிழமை காலை 11.05 மணிக்கு திருச்சியில் இருந்து கிளம்பும் இந்த சிறப்பு விமானம், பிற்பகல் 1.55 மணி அளவில் குவைத்தை சென்றடையும். எதிர் திசையில், குவைத்தில் இருந்து பிற்பகல் 2.55 மணிக்கு கிளம்பும் இந்த விமானம், திருச்சியை இரவு 10.40 மணிக்கு வந்தடையும்.

 

மேலும், வந்தே பாரத்தின் ஆறாவது கட்டத்தின் கீழ், செப்டம்பர் 2 மற்றும் 3 அன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரசால் விமானங்கள் இயக்கப்படும். இந்த நாட்களில், சிங்கப்பூரில் இருந்து மாலை 7 மணிக்கு கிளம்பும் இந்த விமானம், திருச்சிராப்பள்ளியை இரவு 8.45 மணிக்கு வந்தடையும். திருச்சிராப்பள்ளியைத் தவிர, சென்னை, மதுரை, ஹைதரபாத், விஜயவாடா, பெங்களூரு, கொச்சி  ஆகிய நகரங்களுக்கும் சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வந்தே பாரத்தின் கீழ் இயக்குகிறது. வந்தே பாரத் இயக்கத்தின் கீழ் 120-க்கும் அதிகமான விமானங்களை கையாண்டுள்ள திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம், பல்வேறு நாடுகளில் சிக்கித் தவித்த 20,000-க்கும் அதிகமான பயணிகளை தாயகத்துக்கு அழைத்து வந்துள்ளது. திருச்சி மற்றும் கோலாலம்பூர், சிங்கப்பூர், துபாய், அபு தாபி, ஷார்ஜா, தோஹா, ரியாத், தம்மம் மற்றும் ஜெட்டாவுக்கு இடையே சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. வளைகுடா பகுதியில் தொடர்ந்து தங்கிப் பணிபுரியும் இந்தியர்கள் பலர் உள்ளனர். வளைகுடா நாடு ஒன்றில் கட்டுமானப் பொறியாளராகப் பணியாற்றும் திரு சுதி, கட்டுமானப் பணிகள் பெரிய தடைகளின்றி தொடர்வதாக கூறுகிறார். கோவிட்-19 பெருந்தொற்று செய்திகளால் ஆரம்பத்தில் பயம் இருந்ததாகவும், இதனால் பல தொழிலாளர்கள் இந்தியாவுக்குத் திரும்பியதாகவும் தெரிவிக்கும் அவர், நிலைமை தற்போது சகஜமாக இருப்பதாகக் கூறுகிறார். வளைகுடா நாடுகளில் இருந்து பல இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ள நிலையில், பிரதமரின் தற்சார்பு திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவதற்கு அரசு அவர்களுக்கு உதவுகிறது. தங்களது குடும்பங்களுக்காக வெளிநாடுகளில் உழைத்த இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதை வந்தே பாரத் இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. நாடு திரும்பிய பணியாளர்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக வியாபாரம் அல்லது தொழிலைத் தொடங்க அரசு தற்போது கடன் உதவியை வழங்கி வருகிறது.

 

 

 

 

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்

 

Screenshot_20200825-132632

 

 

Trichy Kuwait

 

திருச்சிராப்பள்ளி -  குவைத்

 

***


(Release ID: 1648537) Visitor Counter : 164