சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

முதியவர்களுக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் அளித்தால் உளவியல் தொடர்பான சிக்கல்கள் குறையும்: சமூகவியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் பி. சேதுராஜகுமார்

Posted On: 24 AUG 2020 7:07PM by PIB Chennai

முதியவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.அவர்களுக்கு உணர்வு ரீதியில் ஆதரவு அளித்து, தார்மிக ரீதியில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம்'' என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக சமூகவியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் பி. சேதுராஜகுமார் கூறினார். தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கள மக்கள் தொடர்புப் பிரிவின் சேலம் பிரிவும், பத்திரிகைத் தகவல் மையத்தின் சென்னை பிரிவும் இணைந்து நடத்திய இணையவழிப் பயிலரங்கில் பங்கேற்றுப் பேசியபோது அவர் இந்தக் கருத்தை வலியுறுத்தினார்.

``கோவிட்- 19 காலத்தில் முதியவர்களைக் கவனித்தல்'' என்ற தலைப்பில் உரையாற்றிய டாக்டர் சேதுராஜகுமார், இளைஞர்கள் போக்கு காரணமாகவும், சமூகத்தின் போக்கு காரணமாகவும் முதியவர்களுக்கு சமூக அங்கீகாரம் குறைந்து வருகிறது என்று கூறினார். ``இந்தியாவில், முதியவர்களுக்கு உடல் ரீதியிலான தொந்தரவுகள் மட்டுமின்றி, பொருளாதாரப் பிரச்சினைகளும் உள்ளன. குறிப்பாக வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்கள், மாற்றுத் திறனாளிகள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். மேலும், தனிமைப்படுத்தப்படுதல், தாழ்வு மனப்பான்மை, தலைமுறை இடைவெளி போன்ற சமூகக் காரணங்கள், மரியாதைக் குறைவு ஆகியவை மூத்த குடிமக்கள் எதிர்கொள்ளும் சாதாரண பிரச்சினைகளாக உள்ளன'' என்று கூறினார்.

நோய்த் தொற்று சூழ்நிலையில் முதியவர்கள் தங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். ``குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழிப்பது, வயது முதிர்வு தொடர்பான பிரச்சினைகளைக் குறைக்கும். சமையல், தோட்டம் பராமரித்தல் போன்ற வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால் நேரம் இனிமையாகக் கழியும். ' என்று அவர் குறிப்பிட்டார். டிஜிட்டல் காலம் வந்துவிட்ட நிலையில், அருகில் இருப்பவர்கள் மற்றும் தொலைவில் இருக்கும் நேசத்துக்கு உரியவர்களுடன் விடியோ கால்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் தொடர்பு கொள்ளலாம், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தலாம் என்று அவர் யோசனை தெரிவித்தார். முடக்கநிலை அமல் காரணமாக நேரில் சந்திக்க முடியாத நிலையில், இந்தத் தொடர்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவர்.

பரபரப்பான செய்திகள் மற்றும் வதந்திகளில் இருந்து மூத்த குடிமக்கள் விலகி இருக்க வேண்டும் என்று டாக்டர் சேதுராஜகுமார் கேட்டுக் கொண்டார். அவை பதற்றத்தை அதிகரிக்கும் என அவர் எச்சரித்தார். சரியான உணவு சாப்பிட வேண்டியதும் அவசியம் என்றார் அவர். நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதற்கு நிறைய காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிட வேண்டும், அசைவ உணவுகளைக் குறைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வீட்டில் இருப்பவர்கள் முதியவர்கள் விஷயத்தில் நடந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றிக் குறிப்பிட்ட அவர், முதியவர்கள் குழந்தைகளைப் போன்றவர்கள் என்றும், குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதைப் போல, முதியவர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டியது முக்கியம் என்றும் தெரிவித்தார். முதியவர்களை உடல் ரீதியாகவோ வார்த்தைகளாலோ துன்புறுத்துவதை ஊக்குவிக்கக் கூடாது. துயரத்தில் இருக்கும் மூத்த குடிமக்கள் 1091 அல்லது 1291 என்ற ஹெல்ப்லைன் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். முதியவர்களின் உடல்நலப் பிரச்சினைகள், அவற்றைக் கையாள்வது பற்றி குடும்பத்தினர் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். மூத்த குடிமக்களைப் பொருத்த வரையில், உடல் ரீதியில் மட்டுமின்றி, மன ஆரோக்கியத்துக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சேலம், பெரியார் பல்கலைக்கழக சமூகவியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் எம். ஜெயசீலன், குடும்ப உறவுகள் பற்றிப் பேசினார். மேற்கத்தியக் கலாச்சாரத்தைப் போல அல்லாமல், இந்தியாவில் ஒரு குடும்பம் என்பது, கல்வி நிலையத்தைப் போல கருதப்படுகிறது. ``இந்தியாவின் அடையாளமே குடும்ப அமைப்பு முறைதான். அமைப்பு ரீதியில் அது பெரியதாகத் தோன்றாவிட்டாலும், செயல்பாட்டு ரீதியில் கூட்டு இயக்கமாக இருக்கிறது. குடும்ப உறுப்பினர்களைக் கலந்து ஆலோசித்து தான் எந்த முடிவும் எடுக்கிறார்கள் என்பது இதற்கு உதாரணமாக உள்ளது'' என்றார் அவர்.

முடக்கநிலை காரணமாக, பெண்களுக்கு பணி அழுத்தம் அதிகரிப்பு, அலுவல் வேலை மற்றும் வீட்டு வேலைகளுக்கு நேரத்தை ஒதுக்கீடு செய்தல், குடும்பத்தினரிடையே கருத்து வேறுபாடு, தூங்கும் நேரத்தின் போக்கு மாற்றம், சமூகத் தனிமைப்படுத்தலால் ஏற்படும் அழுத்தம் என குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு சவால்கள் பற்றி அவர் குறிப்பிட்டார்.

``இருந்தபோதிலும், முடக்கநிலை காரணமாக நமக்கு நிறைய புதிய வாய்ப்புகளும் கிடைத்துளளன. குடும்ப உறுப்பினர்களை மீண்டும் ஒன்று சேர வைத்துள்ளது. நம் குடும்பத்தினருடன் நிறைய நேரத்தை நல்ல முறையில் செலவிட வாய்ப்பு கிடைத்துள்ளது'' என்றார் அவர். நம் குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிடும் வாய்ப்பை இந்த முடக்கநிலை கொடுத்திருக்கிறது. அப்போது நாம் அதிகமாகப் பேசி, ஒருவருடைய விருப்பு, வெறுப்புகளைப் புரிந்து கொள்ள முடிகிறது என்று அவர் கூறினார். வீட்டிலேயே சமைத்த ஆரோக்கியமான உணவுக்கு முன்னுரிமை கிடைப்பதால் உடலும், மனமும் புத்துணர்வு பெறுகின்றன. நமக்கு எது பிடிக்கும் என்பதையும், நமது நேரத்தை எப்படி ஆக்கபூர்வமாக செலவிடலாம் என்பதையும் புரிந்து கொள்வதன் மூலம், நம்மை சுயபரிசோதனை செய்து கொள்ளத் தொடங்கி இருக்கிறோம் என்று அவர் விவரித்தார்.

``குடும்பத்தினரின் தகுதிகளை அறிந்து, அவர்களுக்கான இடத்தை அளிக்க வேண்டியது முக்கியம். நாம் பிடிவாதம் கொண்டவர்களாக, கோபம் கொண்டவர்களாக இருக்கலாம். ஒட்டுமொத்தமாக குடும்பத்தின் பிணைப்புகளை இந்த முடக்கநிலைக் காலம் பலப்படுத்தியுள்ளது'' என்று அவர் கூறினார்.

பத்திரிகைத் தகவல் மையத்தின் சென்னை பிரிவு இயக்குநர் திரு. குருபாபு பலராமன் அறிமுக உரையாற்றினார். வீட்டில் உள்ள முதியவர்கள் மதிப்புமிக்கவர்கள் என்று அவர் கூறினார். தொழில் நிபுணர்களின் இடத்தை இன்னொருவரால் நிரப்பிவிடுவதைப் போல, குடும்பத்தில் ஒருவருடைய பங்களிப்பை இன்னொருவரால் நிரப்பிவிட முடியாது என்றார் அவர். முடக்கநிலை காலத்தில் நமக்கு நிறைய சவால்கள் ஏற்பட்டுள்ளன என்றாலும், மனித மாண்புகளை, உறவின் முக்கியத்துவத்தை அது நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். சிக்கல்கள் மிகுந்த சூழ்நிலையில் நம்மைக் காப்பாற்றும் சீட் பெல்ட் போன்றது குடும்ப அமைப்பு முறை என்று அவர் கூறினார்.

மக்கள் தொடர்பு அலுவலக சென்னைப் பிரிவு உதவி இயக்குநர் திரு. காமராஜ் வரவேற்புரை ஆற்றினார். மனித சமுதாயத்திற்கு பெரிய சவால்களை நோய்த் தொற்றுச் சூழல் உருவாக்கியுள்ளதாக அவர் கூறினார். இந்தியாவின் மரபுகள் பற்றியும், இந்தியாவில் குடும்ப அமைப்புகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் பற்றியும் உலக மதங்களின் மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையை அவர் நினைவுகூர்ந்தார். அதற்குப் பிந்தைய காலத்தில் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துக்கு மிகுந்த மரியாதை கிடைத்தது. மேற்கத்திய கலாச்சாரத்தைப் போல அல்லாமல், இந்தியாவில் குடும்ப அமைப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது, அதுதான் நமது அடையாளமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

சேலத்தில் உள்ள கள மக்கள் தொடர்பு பிரிவின் கள விளம்பர அலுவலர் திரு. எஸ். முரளி நன்றி கூறினார்.

 

==========



(Release ID: 1648270) Visitor Counter : 331


Read this release in: English