சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

சுகாதாரச் சேவைகளை அனைவருக்கும் உறுதிசெய்ய தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தை பிரதமர் அறிவித்தார்

Posted On: 18 AUG 2020 10:35AM by PIB Chennai

சுதந்திர தினத்தன்று தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் குறித்து மாண்புமிகு பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு நாட்டிலுள்ள அனைத்து மக்களும் அணுகக்கூடிய மருத்துவச் சேவைகள் பற்றிய நம்பிக்கையை அதிகரித்துள்ளது. லட்சக்கணக்கானோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால், மருத்துவமனைகளையும், மருத்துவ அலுவலர்களையும் கோவிட்- 19 பெருந்தொற்று மிகுந்த அழுத்தத்துக்குள்ளாக்கியது. ஆனால், மருத்துவ சமூகம் இந்தச் சவாலை உறுதியுடன் எதிர்கொண்டு இறப்பு விகிதத்தை வெகுவாகக் குறைத்ததால், பல வளர்ந்த நாடுகளை விட இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. தரம் வாய்ந்த சுகாதாரச் சேவையை அளிக்கும் முயற்சியில் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம்- ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி, நாட்டின் கிட்டத்தட்ட பாதி மக்கள் தொகைக்கு இலவச சுகாதாரச் சேவையை வழங்குகிறது. தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் சுகாதாரத் துறையில் ஒரு புதிய புரட்சியை உண்டாக்கும் என்று பிரதமர் தற்போது அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு இந்தியருக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும். ஒவ்வொரு பரிசோதனை, ஒவ்வொரு நோய், சந்தித்த மருத்துவர்கள், எடுத்துக் கொண்ட மருந்துகள் மற்றும் நோயறிதல் குறித்த தகவல்களை இந்த சுகாதாரக் கணக்கு கொண்டிருக்கும். எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய வகையிலும், எளிதாக அணுகக்கூடிய வகையிலும் இந்தத் தகவல்கள் இருப்பதால், நோயாளி வேறு இடத்துக்கு மாறி இன்னொரு மருத்துவரைப் பார்த்தாலும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முழுமையான மற்றும் தன்னார்வ சுகாதார சேவைத் திட்டமாக  தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் இருப்பதால் மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றை இணைத்து, டிஜிட்டல் சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்கும். ஆதார் மற்றும் கைபேசி எண் ஆகிய தகவல்களைக் கொண்டு உருவாக்கப்படும் சுகாதார அடையாள அட்டை ஒவ்வொருவருக்கும் பிரத்யேக அடையாள எண்ணை வழங்கும். சுகாதார அடையாள எண், டிஜிமருத்துவர், தொலைதூர மருத்துவம், மின்-மருந்தகம், சுகாதாரச் சேவைப் பதிவகம் மற்றும் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்பட்ட தனிப்பட்ட மருத்துவக் கோப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் இருக்கும்.

நிறைய நோயாளிகளுக்கு இந்த சுகாதார அட்டை முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று திருச்சிராப்பள்ளியை சேர்ந்த திருமதி. ஜெய்கீதா கூறுகிறார். சுகாதார சேவை அமைப்பில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும், பிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறுகிறார். ஏழைகளுக்கு நல்ல மருத்துவச் சேவை கிடைக்காததால், எய்ம்ஸ் போன்ற மருத்துவ நிறுவனங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறுவப்படவேண்டியது அவசியம். இதனால், தரமான மருத்துவச் சேவைக்காக கிராமத்தினர் அதிகம் பயணம் செய்ய வேண்டியது இருக்காது.

 

அரசால் செயல்படுத்தப்படும் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்கள், மின்-சஞ்சீவனி, மக்கள் மருந்தகங்கள் ஆகியவை உத்தரவாதமளிக்கப்பட்ட சுகாதாரச் சேவையைப் பயனாளிகள் பெற உதவுகின்றன. பிரதமரால் 2018-இல் தொடங்கி வைக்கப்பட்ட சுகாதார உறுதியளிப்புத் திட்டமான பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டம் குறிப்பாக கோவிட்-19 காலகட்டத்தில் மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனை அனுமதிகளுக்காக ஒரு குடும்பத்துக்கு வருடத்துக்கு ரூ 5 லட்சம் சுகாதாரக் காப்பீட்டை பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டம் அளிப்பதால், உலகத்திலேயே மிகப் பெரிய சுகாதார உறுதியளிப்புத் திட்டமாக இது இருக்கக்கூடும். மத்திய மற்றும் மாநில அரசுகளிடையே இந்தத் திட்டம் பங்கிட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில், பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டம்-முதல் அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் சில குறிப்பிட்ட நோய்களுக்கு பணமில்லா மருத்துவமனை அனுமதி வசதியை அளித்து, ஒரு குடும்பத்துக்கு ஒரு வருடத்துக்கு ரூ 5 லட்சம் வரை காப்பீட்டை வழங்குகிறது.

 

குறிப்பாக பெருந்தொற்று ஒன்றின் பரவலின் போது சுகாதார சேவைத் துறை மிகவும் முக்கியமானதாகும். தொலை-ஆலோசனையின் மூலம் ஏழை மற்றும் கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவைகள் கிடைக்குமாறு அரசு செய்துள்ளது. மக்களால் மருத்துவமனைகளுக்கு செல்லமுடியாமல் இருப்பதாலும், மருத்துவர்கள் கோவிட்- 19 நோயாளிகளைக் கையாண்டுக் கொண்டிருப்பதாலும், கோவிட்- 19 பொதுமுடக்கத்தின் போது மின்சஞ்சீவனி திட்டம் பிரபலமடைந்து வருகிறது. நோயாளிகளின் முந்தைய மருத்துவ வரலாறு கிடைப்பதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க டிஜிட்டல் சுகாதார அட்டைகள் மருத்துவர்களுக்கு உதவும். இது நமது நாட்டின் மருத்துவ சேவை அமைப்பில் புரட்சியை உண்டாக்கி, ஏழைகள் மற்றும் பின்தங்கியோருக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

டிஜிட்டல் சுகாதாரச் சூழலியலை உருவாக்க மக்களுடன் கைகோர்த்தல்


மருத்துவக் காப்பீட்டு அட்டையுடன் திருமதி. ஜெய்கீதா


(Release ID: 1646598) Visitor Counter : 641