சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

உணவு தானிய விளைச்சலில் சாதனை நிகழ்த்துவதை உறுதி செய்ய அரிசி உற்பத்தியைத் தீவிரப்படுத்தும் திட்டம்

வேளாண்மைக் கட்டமைப்புகளை மேம்படுத்த ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதியுதவித் திட்டங்களை அறிவித்தார் பிரதமர்

Posted On: 17 AUG 2020 11:17AM by PIB Chennai

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக, முடக்கநிலைக் காலத்தில் சிரமத்துக்கு ஆளாக இருக்கும் நபர்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு விவசாயிகள் மற்றும் வேளாண்மைத் துறைக்கு ஏற்பட்டுள்ளது. வேளாண்மையை தற்சார்பாக ஆக்கியதற்காக, அண்மையில் தனது உரையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டுகள் தெரிவித்தார். இந்தியக் குடிமக்களுக்கு போதிய உணவு தானியங்களை உற்பத்தி செய்வதோடு மட்டுமல்லாமல், உதவி தேவைப்படும் நிலையில் உள்ள மற்ற நாட்டு மக்களுக்கும் சேர்ந்து விவசாயிகள் உணவு தானியங்கள் உற்பத்தி செய்வதாகப் பிரதமர் கூறினார். கொரோனா நோய்த் தொற்றுக் காலத்திலும், வேளாண்மைக் கட்டமைப்புகளை மேம்படுத்த ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவித் திட்டங்களுக்கு அரசு அனுமதி அளித்திருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த வேளாண்மைக் கட்டமைப்பு நிதியம் இந்த நிதியாண்டு தொடங்கி 2029 வரையில் பத்தாண்டு காலத்துக்கு அமலில் இருக்கும். இத் திட்டத்தின் கீழ், வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் ஆண்டுக்கு 3 சதவீத வட்டி சலுகையிலும், கடன் உத்தரவாதம் இல்லாமல் ரூ.2 கோடி வரையிலும் கடன்கள் அளிக்கும். விவசாயிகள், மார்க்கெட்டிங் கூட்டுறவு சங்கங்கள், வேளாண் உற்பத்தி அமைப்புகள் (எப்.பி.ஓ.க்கள்), சுய உதவிக் குழுக்கள், கூட்டுப் பொறுப்பேற்புக் குழுக்கள் (ஜே.எல்.ஜி.), பன்முகப் பயன்பாட்டுக் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளிட்டோருக்கு இதன் மூலம் கடன் வழங்கப்படும்.

மணச்சநல்லூர் நெல் வயலில் விவசாயி உடன் வேளாண்மைத் துறை அதிகாரிகள்

நீரில் கரையும் உரங்கள் மற்றும் மண் உரங்களை தேவைக்கேற்ப அதிக அளவுக்குப் பயன்படுத்த விவசாயிகளுக்குத் தொழில்நுட்ப உதவி தேவைப்படுகிறது. தமிழகத்தில் தீவிர நெல் சாகுபடி முறை வெற்றிகரமாக அமல் செய்யப்பட்டு வருகிறது. 2020-21 ஆம் ஆண்டில் தீவிர நெல் சாகுபடி திட்டம் 27.18 லட்சம் ஏக்கர் அளவுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளதாக மாநில  அரசு தெரிவித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தொடர்ந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும் நிலையில், தமிழகத்தில் உணவுதானிய உற்பத்தி அதிகரித்து செப்டம்பருக்குள் 28 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற இலக்கு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீவிர நெல் சாகுபடிக்கு நாற்றங்காலில் பயிர்களை வளர்த்து பின்னர், வயலில் நடவு செய்ய வேண்டும் என்று வேளாண்மை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். திருச்சியில் விவசாயிகளுக்கு இதுதொடர்பான நிபுணர் ஆலோசனைகளும், தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருப்பதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர். மண்ணில் வேர்கள் ஆழமாக இறங்கிவிடாமல் தவிர்ப்பதற்காக, பயன்படுத்திய பாலிதீன் சாக்குப் பைகளை அல்லது பிளாஸ்டிக் தாள்களை  விரித்து நாற்றங்கால் உருவாக்கலாம் என்று அவர்கள் கூறினர். நடவு செய்வதற்கேற்ற உயரத்தை 15 நாட்களில் எட்டியதும், பயிர்களை வயலுக்கு மாற்றி நடவு செய்திட வேண்டும்.

தீவிர நெல் சாகுபடியில் மணச்சநல்லூர் வயல்

கோவிட்-19 நோய் பாதிப்புச் சூழ்நிலையிலும் திருச்சி பகுதியில் வயல்களை நேரில் பார்வையிட்டு, வேளாண் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருவதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர். மணச்சநல்லூர் வேங்கன்குடி கிராமத்தில் குறுவை சாகுபடி வயல்களை வேளாண்மைத் துறை இணை இயக்குநர் திருமதி சாந்தி நேரில் ஆய்வு செய்தார். வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் தாகூர், வேளாண் அதிகாரி உமா மகேஸ்வரி, வேளாண் அதிகாரிகள் பார்த்திபன், பாஸ்கர் ஆகியோர் விவசாயிகளிடம் கலந்துரையாடி, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கேட்டறிந்தனர். பிரதமரின் கிரிஷி சிஞ்சாயி திட்டத்தின் கீழ் கூடுதல் நீர் மேலாண்மைக்காக திருச்சி மாவட்டத்துக்கு ரூ.7 கோடி வழங்கப்பட்டிருப்பதாக புல்லம்பாடி உதவி இயக்குநர் திரு. மோகன் தெரிவித்தார். திருச்சி மாவட்டத்தில், குறிப்பாக புள்ளம்பாடி ஒன்றிய விவசாயிகள் இத் திட்டத்தில் தீவிரமாக இணைந்துள்ளனர். வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ஒன்றியத்திற்கு வந்து பணிகளை ஆய்வு செய்து, கூடுதல் நீர் மேலாண்மைச் செயல்பாட்டில் நல்ல நிதி முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும் என்றும், வாராந்திரச் செயல்திட்டத்தை உருவாக்கிக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் யோசனைகள் கூறியதாகவும் மோகன் தெரிவித்தார். திருச்சி ஆலம்பாடி கிராமத்தில் இயந்திரம் மூலம் நடைபெறும் குறுவை நாற்று நடவுப் பணிகளையும் இணை இயக்குநர் பார்வையிட்டார். திருச்சி மாவட்டத்தில் பல விவசாயிகள்  தீவிர நெல் சாகுபடித் திட்டத்தில் சாகுபடிப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இத் திட்டம் நல்ல பயன் தருவதாகவும், குறைந்த செலவு பிடிப்பதாக உள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.



(Release ID: 1646375) Visitor Counter : 124