சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

அரசின் வேலைவாய்ப்பு முனையம், நிறுவனங்கள் மற்றும் வேலை தேடுவோருக்கு ஒரு வரப்பிரசாதம்: ஏ. லதா, பிராந்திய இணை இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, கோவை

Posted On: 04 AUG 2020 6:57PM by PIB Chennai

``நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள இந்தச் சூழ்நிலையில், மாநில அரசின் வேலைவாய்ப்பு இணையதளம் tnprivatejobs.tn.gov.in தொழில் நிறுவனங்களுக்கும், வேலை தேடுவோருக்குமான தளமாக உள்ளது.  வேலை தேடுவோர் இதில் பதிவு செய்து கொண்டு, தங்களுக்கு உரிய நிறுவனத்தைத் தேர்வு செய்து கொள்ள வசதியாக இந்த முனையம் இருக்கிறது'' என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கோவை பிராந்திய இணை இயக்குநர் ஏ. லதா கூறினார். தொழில் திறன் வளர்ச்சி – குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனக் கடன்கள் என்ற தலைப்பில், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சேலம், மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இணையவழிப் பயிலரங்கில் பங்கேற்றுப் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த மாதம் தொடங்கப்பட்ட இந்த இணையதளத்தில் வேலை தேடும் சுமார் 39 ஆயிரம் பேர்  பதிவு செய்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார். ``பதிவு செய்துள்ளவர்களை விட, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிவிட்டதால், தொழில் துறையினருக்கு வேலைக்கு நிறைய ஆட்கள் தேவைப்படுகிறார்கள். தங்களுக்கு அருகில் உள்ள பகுதியிலேயே வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு சாத்தியம் இருப்பதால், வேலை தேடுவோருக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்'' என்றும் லதா கூறினார்.

வேலை வாய்ப்பு ஆலோசனை நிறுவனங்களின் தலையீடு காரணமாக எழக் கூடிய பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, உண்மையிலேயே வேலை தேடும் நிறுவனங்கள் மட்டுமே இந்த முனையத்தில் பதிவு செய்ய தமிழக அரசு அனுமதிக்கிறது. நம்பகத்தன்மையை உறுதி செய்ய, தொழிற்சாலை குறித்த அனைத்து விவரங்களையும் முறையாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

மாநிலத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இயங்கி வந்தாலும், 766 நிறுவனங்கள் மட்டுமே இதில் பதிவு செய்துள்ளன. மீதியுள்ள நிறுவனங்களும், தங்களுக்குப் பொருத்தமான தொழிலாளர்களைத் தேர்வு செய்ய இந்த முனையத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று லதா கேட்டுக் கொண்டார். மேலும், தமிழகத்தில் வாழாத தமிழர்களுக்கான தொழில் திறன் பயிற்சிகளையும் வேலைவாய்ப்புத் துறை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். மக்களின் நலன்களுக்குத் தேவையான, சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுக்கிறது என்றும், இப்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் நிதி உதவி அளிக்கவும் முயற்சிகள் செய்யப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

சேலம் மாவட்டத் தொழில் மையத்தின் மேலாளர் திரு. டி. சிவக்குமார் பேசியபோது, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனக் கடன்கள் தொடர்பாக உள்ள பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசுத் திட்டங்களைப் பட்டியலிட்டார். வேலையில்லாத இளைஞர் வேலைவாய்ப்பு உருவாக்கல் திட்டத்தின் கீழ் உற்பத்தித் துறைக்கு ரூ.10 லட்சம் ஒதுக்கப்படுகிறது. சேவைத் துறை தொழிலுக்கு ரூ.5 லட்சம் ஒதுக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 45 வயதுக்கு உள்பட்டவர்கள் (சிறப்புப் பிரிவு) மற்றும் 35 வயதுக்கு உள்பட்டவர்கள் (பொது) இந்தக் கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கல் திட்டம் (PMEGP) என்ற மத்திய அரசின் திட்டத்தின் மூலம் உற்பத்தித் துறைக்கு ரூ.25 லட்சமும், சேவைத் துறை தொழிலுக்கு ரூ.10 லட்சமும் அளிக்கப்படுகிறது. நகர்ப்புறத்தில் 25 சதவீதமும், ஊரகப் பகுதிக்கு 35 சதவீதமும் மானியமாக அளிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

``தங்கள் தொழிலுக்கு ரூ.25 லட்சத்துக்கும் மேலான தொகை தேவைப்படுவோர், தமிழக அரசின் புதிய தொழில்முனைவோர் - மற்றும் - நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தைப் (NEEDS) பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் ரூ.5 கோடி வரை நிதியுதவி அளிக்கப்படுகிறது. முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு மட்டுமே இத் திட்டம் பொருந்தும். பட்டப் படிப்பு / டிப்ளமோ / ஐ.டி.ஐ. படித்தவர்கள் இத் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்யலாம். சிறப்புப் பிரிவினருக்கு 45 வயதும், பொதுப் பிரிவினருக்கு 35 வயதும் தகுதிக்கான வயது வரம்புகளாக இருக்கும். 25 சதவீதம் அல்லது ரூ.30 லட்சம் இதில் எது குறைவாக இருக்கிறதோ அந்தத் தொகை மானியமாக அளிக்கப்படும்'' என்று திரு. சிவக்குமார் கூறினார்.

மேலே குறிப்பிட்ட அனைத்துத் திட்டங்களுக்கும் ஆன்லைன் மூலம் இலவசமாக கடன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். அடிப்படை ஆவணங்கள் மட்டுமே இதற்குத் தேவைப்படும். கடன் விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு அனுப்பப்படும். வங்கி ஒப்புதல் அளித்துவிட்டால், அதற்கான மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மாநில அரசின் easybusiness.tn.gov.in/ என்ற ஒற்றைச்சாளர இணைய வசதியின் சிறப்பம்சங்களை திரு. சிவக்குமார் விளக்கினார். பல்வேறு அதிகாரப்பூர்வ அமைப்புகளிடம் இருந்து, சட்டபூர்வ ஒப்புதல்கள் பெறுவதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்கும் வகையில், தேவையான ஆவணங்களை ஆன்லைனில் சமர்ப்பித்தால் அனைத்து துறைகளின் அனுமதிகளையும் பெறும் வகையில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் வி. கார்த்திகேயன், தொழில் திறன் மேம்பாட்டுக் கல்வியில் தங்கள் கல்லூரியில் முக்கியத்துவம் அளிக்கப்படுவது பற்றி விளக்கினார். ``முடக்கநிலை அமல் காலத்தில், Python, C++, Tally  போன்ற திறன் சார்ந்த கல்விகளை ஆன்லைன் மூலம் பயில்வதில் மாணவர்கள் ஆர்வம் காட்டினர். இந்த ஆன்லைன் பாடத் திட்டங்கள் வெற்றிகரமாக அமைந்ததை அடுத்து, செய்முறைப் பயிற்சிகள் அளிப்பதற்காக, மெய்நிகர் ஆய்வகங்களையும், வகுப்பறைகளையும் உருவாக்க கல்லூரி திட்டமிட்டுள்ளது'' என்று அவர் தெரிவித்தார்.

சேலம் ஜென்னிஸ் கல்வி அறக்கட்டளையின் நிர்வாகி டாக்டர் கே. கர்லின் எபே, தொழில் திறன் பயிற்சிகளின் முக்கியத்துவம் பற்றிப் பேசினார்.

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்துப் பேசிய சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இணை இயக்குநர் திரு. ஜே. காமராஜ், இப்போதைய நிதி நெருக்கடி சூழலில் ஏழைகள் மற்றும் கீழ்த்தட்டு மக்களை கை தூக்கி விடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருவதாகக் கூறினார். மத்திய அரசின் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சாமானிய மக்கள், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்டோர் பயன் பெறுவர் என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக சேலம் மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கள விளம்பர அலுவலர் திரு. எஸ். முரளி வரவேற்றார். சேலம் மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கள விளம்பர உதவி அலுவலர் திரு. பி.டி. பழனியப்பன் நன்றி கூறினார்.



(Release ID: 1643342) Visitor Counter : 311


Read this release in: English