சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

முகமில்லா மதிப்பீடு முறை வரி செலுத்துவோர் துன்புறுத்தப்படுவதற்கு முடிவு கட்டுகிறது: திரு. எம். எல். கர்மாகர், முதன்மைத் தலைமை வருமான வரி ஆணையர், தமிழ்நாடு & புதுச்சேரி.

Posted On: 03 AUG 2020 8:00PM by PIB Chennai

"முகமில்லா கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு முறையை நோக்கி வருமான வரித் துறை நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்தப் புதுமையான திட்டம் வரி செலுத்துவோர் மற்றும் வருமான வரித் துறைக்கு நன்மை பயக்கும். துன்புறுத்தல்கள் இருக்காது, வழக்குகள் மற்றும் இடையீடுகள் குறையும். இது ஒரு சிறந்த திட்டம் என்பதால், இந்தப் புதிய திட்டத்தின் கீழ் வருமான வரி தகவல்களைத் தாக்கல் செய்து பயனடையுமாறு அனைத்து வரி செலுத்துவோரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்," என்று திரு. எம். எல். கர்மாகர், முதன்மைத் தலைமை வருமான வரி ஆணையர், தமிழ்நாடு & புதுச்சேரி, கூறினார்.

 

வருமான வரித் துறை அறிமுகப்படுத்தியுள்ள முகமில்லா மதிப்பீடு திட்டத்தை குறித்து விளக்குவதற்காக பத்திரிகை தகவல் அலுவலகம், சென்னை, இன்று நடத்திய மெய்நிகர் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். திருமதி. ஜஹன்செப் அக்தெர், இவப, வருமான வரித் துறை முதன்மை ஆணையார், பிராந்திய மதிப்பீட்டு மையம், இந்த திட்டத்தைப் பற்றி விளக்கியதோடு, நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். திரு. குருபாபு பலராமன், இயக்குநர், பத்திரிகை தகவல் அலுவலகம், சென்னை, நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.

 

அதிக வெளிப்படைத்தன்மை, அதிக செயல்திறன் மற்றும் பொறுப்புக்கூறலுக்காக புதிய முறை வடிவமைக்கப்பட்டுள்ளதாக திரு. கர்மாகர் தெரிவித்தார். "வரிசெலுத்துவோர் மற்றும் வரி அலுவலர்களுக்கிடையேயான இடையீட்டை இந்தத் திட்டம் நீக்கியிருக்கிறது. வருமான வரி அலுவலகத்துக்கு வரி செலுத்துபவர்கள் நேரில் வரத் தேவையில்லை. வீட்டில் அமர்ந்தவாறே வருமான வரித் தகவல்களை அவர்கள் சமர்ப்பிக்கலாம். தன்னிச்சையான முறை மூலம் தகவல் பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவின் துணையோடு அலுவலர்கள் அவற்றை ஆய்வு செய்வார்கள்," என்று அவர் கூறினார்.

 

முந்தைய முறையில் பல விஷயங்கள் மதிப்பீட்டு அலுவலரின் முடிவின் கீழ் இருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். "அதை நாங்கள் முழுவதுமான மாற்றியமைத்துள்ளோம். பிராந்திய முறைக்கு மாற்றாக, மாறிக் கொண்டே இருக்கும் முறையை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்," என்று அவர் கூறினார்.

 

 

"இலக்கு சார்ந்த, சுதந்திரமான, நியாயமான மற்றும் சரியான மதிப்பீடுகள் இனி இருக்கும்," என்று கூறிய அவர், புதிய முறையின் கீழ் வாரத்துக்கு குறைந்தபட்சம் 5,000 மதிப்பீடுகளாவது செய்யப்படும் என்றும், அக்டோபர் இறுதிக்குள் 58,000 மதிப்பீடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். புதிய மதிப்பீட்டு செயல்முறை வழக்குகளை குறைத்து, ஒரு சிக்கலைத் தீர்த்து வைப்பதற்கான கால அளவையும் குறைக்கும் என்றார் அவர்.

 

"முந்தைய முறையில், ஒரு வருமான வரி தாக்கலானது அதே பிராந்தியத்தில் உள்ள அலுவலரிடம் செல்லும். ஆனால் தற்போது, மதிப்பீட்டுக்காக அது எங்கு செல்லும் என்பதை நிரலாக்கல் முடிவு செய்யும். இதன் மூலம், முழு அநாமதேயத் தன்மை இருக்கும்," என்று திரு. கர்மாகர் கூறினார்.

 

இன்னும் சோதனை வடிவில் இருக்கும் முகமில்லா மதிப்பீட்டு முறையின் முதல் கட்டத்தில் இது வரை 8,000 தாக்கல்களை வருமான வரித் துறை மதிப்பீடு செய்து முடித்துள்ளதாகவும், அதில் சென்னை மையம் 1900 மதிப்பீடுகளை செய்துள்ளதாகவும் திருமதி. ஜஹன்செப் அக்தெர் தெரிவித்தார்.

 

புதிய முறை புத்துணர்ச்சியூட்டும் தேநீர் (TEA) போன்றது என்று குறிப்பிட்ட அவர், வெளிப்படைத்தன்மை ('T'ransparency), செயல்திறன் ('E'fficiency) மற்றும் பொறுப்புக்கூறலை ('A'ccountability) அது உறுதி செய்வதாக அவர் கூறினார். "நேரடி இடையீட்டை நீக்கியதன் மூலம் வரி செலுத்துவோரின் வாழ்க்கையை நாங்கள் எளிதாக்கியுள்ளோம். சமநிலை மற்றும் நீதி ஆகியவை புதிய முறையின் ஒரு அங்கமாகும், தகவல்களை சார்ந்தே அது செயல்படுகிறது," என்றார் அவர்.

 

வருமான வரித் தாக்கல்களை சமர்ப்பிப்பதில் வரி செலுத்துவோர் சிறந்த முறையில் வழிநடத்தப்படுவார்கள் என்று கூறிய அவர், தாக்கல்களில் தவறுகள் இருப்பதைப் பற்றி இனிமேல் அவர்கள் கவலைப்பட வேண்டாம் என்று தெரிவித்தார். வரி செலுத்துவோரின் பணப் பரிவர்த்தனைத் தகவல்கள் பல்வேறு இடங்களில் இருந்து வருமான வரித் துறைக்கு வருவதாகவும், அவை புதிய அமைப்பில் சேமிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். "தெரியாமல் ஏதாவது தவறு நேர்ந்தால் கூட அதை எங்களால் சுட்டிக்காட்ட முடியும். வரி ஏய்ப்பையும் எங்களால் சுலபமாக கண்டுபிடித்து விட முடியும். வரி செலுத்துவோரைத் துன்புறுத்தாமல், முறையான, தவறுகள் இல்லாத தாக்கல்களை இந்தப் புதிய முறை வரும் காலங்களில் உறுதி செய்யும் என நான் நம்புகிறேன். ஏனென்றால், அவர்களின் பணத்தில் தான் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. அவர்களின் சுமையை குறைப்பது எங்களது முன்னுரிமை. புதிய முறையின் மீது நான் மிகவும் நம்பிக்கையோடு உள்ளேன்," என்று அவர் தெரிவித்தார்.

 

"அனைத்து தாக்கல்களிலும், அதிக மதிப்பீடு அல்லது வரி செலுத்துவோர்/வரி பணியாளரின் துன்புறுத்தல்கள் குறித்த குறைகள் கிட்டத்தட்ட இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டன," என்று அவர் கூறினார். நோட்டீஸ்கள் அல்லது புதிய தகவல்களுக்காக தங்களின் மின்-தாக்கல் கணக்குகள் அல்லது மின்னஞ்சல் முகவரிகளை பார்க்குமாறு வரி செலுத்துவோர் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

"கடந்த காலங்களில், கண்காணிக்கப்படும் வழக்குகளின் மதிப்பீட்டு செயல்பாடுகளின் போது, வரி செலுத்துவோர் வருமான வரி அலுவலகத்துக்கு பல முறை வர வேண்டியது இருக்கும். ஆனால், புதிய முறையின் கீழ், அவர்கள் எங்களது அலுவலகத்துக்கு வர வேண்டிய தேவை முற்றிலுமாக இல்லை," என்று திருமதி. ஜஹன்செப் அக்தெர் கூறினார்.

 

***

 

 

 

 

 



(Release ID: 1643245) Visitor Counter : 132


Read this release in: English