சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

தேசிய கல்விக் கொள்கை 2020 டிஜிட்டல் அறிவுசார் தளங்களை ஆதரிக்கிறது.


இணைய வழிக் கல்வி பொதுமுடக்கத்தின் போது கல்வி நிறுவனங்களுக்கு வரமாக உருவெடுத்துள்ளது.

Posted On: 03 AUG 2020 6:02PM by PIB Chennai

கோவிட் 19 பெருந்தொற்று காலவரையற்ற மூடலை நோக்கி கல்வி நிலையங்களைத் தள்ளியுள்ளது. மத்திய அரசால் சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2020 நாட்டின் கல்வி அமைப்பை வலுப்படுத்துவதற்கான பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. தொலைதூர இடங்களில் இருக்கும் மாணவர்களின் கற்றலுக்கான இணைய வழி மற்றும் தொலைதூரக் கல்வி பெரிதும் மேம்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்த அம்சங்களில் ஒன்றாகும்.

 

தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துகளையும், அபாயங்களையும் ஒத்துக்கொள்ளும் அதே நேரத்தில், அதன் நல்ல விஷயங்களைப் பயன்படுத்திக் கொள்ள தேசிய கல்விக் கொள்கை 2020 முக்கியத்துவம் அளிக்கிறது. இணைய வழி மற்றும் தொலைதூரக் கல்வியின் பலன்களை அறிந்துகொள்ள மாதிரிப் படிப்புகளை அது பரிந்துரைத்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக இணைய வழிக்கல்வி ஏற்கனவே பிரபலமடைந்து வருகிறது. பொறியியல் மாணவர்களுக்கு தொழில்நுட்பத்துடன் நல்ல பரிச்சயம் இருப்பதாலும், கிட்டத்தட்ட அனைவருமே மடிக்கணினிகள் அல்லது திறன்பேசிகளை வைத்திருப்பதாலும், அவர்களுக்கு இணையவழி வகுப்புகள் நடத்துவது மற்றவர்களோடு ஒப்பிடுகையில் எளிதானதாகும்.

 

ஸ்வயம், திக்ஷா போன்ற ஏற்கனவே இருக்கும் தகுந்த மின்-கற்றல் தளங்களில் முதலீடு செய்வதை தேசிய கல்விக்கொள்கை பரிந்துரைக்கிறது. ஆசிரியர்களுடன் மாணவர்கள் கலந்துரையாடக் கூடிய இருவழிக் காணொளி இணையவழி வகுப்புகளை நடத்துவதற்கு அவர்களது சொந்த அமைப்பை பல கல்வி நிறுவனங்கள் ஏற்கனவே நிறுவியுள்ளன. திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில், பவர் பாயிண்ட் விளக்கக்காட்சிகள், விரிவுரைக் குறிப்புகள் போன்ற கல்வித் தளவாடங்கள் அந்த நிறுவனத்தின் இணையதளமான studymaterial.nitt.edu-இல் மாணவர்களின் நலன் கருதி பதிவேற்றம் செய்யப்படுவதாக அதன் இயக்குநர் டாக்டர் .மினி ஷாஜி தாமஸ் கூறுகிறார். நாட்டின் பல்வேறு இடங்களிலும் மற்றும் வெளிநாடுகளிலும் இருக்கும் மாணவர்கள் தங்களது அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிச் சான்றுகளைப் பயன்படுத்திப் பாடங்களைப் பயில்கின்றனர். காணொளிக் காட்சி மூலம் இணைய வழி விரிவுரைகளை ஆசிரியர்கள் நடத்துகின்றனர். இணைய வழி வகுப்புகளுக்காக கூகிள் டிரைவ், கூகிள் வகுப்பறை, மின்னஞ்சல் மற்றும் வாட்ஸாப் ஆகியவற்றை திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் பயன்படுத்துகிறது. இந்தியா மற்றும் உலகமெங்கும் இருக்கக் கூடிய பொறியியல் மாணவர்களின் தேவைகளை தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சி, திட்டமிட்டுள்ள படிப்புகள் பூர்த்தி செய்யும். உலகத் தரம் வாய்ந்த காணொளிகளைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ள இந்தக் கல்வி நிறுவனம், தேசிய தொழில்நுட்ப நிறுவன அமைப்பிலுள்ள ஆசிரியர்களின் நிபுணத்துவத்தை இதற்காகப் பயன்படுத்திக் கொள்ளும். அரசால் தொடங்கப்பட்டுள்ள ஸ்வயம் திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திருச்சிராப்பள்ளி, தேசிய தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். டிஜிட்டல் புரட்சியால் இதுவரை தொடப்படாமல் இருக்கும் மற்றும் அறிவுசார் பொருளாதாரத்தின் பிரதான நீரோடையில் இணைந்து கொள்ள முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கான டிஜிட்டல் இடைவெளிக்கு ஒரு பாலமாக இருக்க ஸ்வயம் விரும்புகிறது.

தேசிய கல்விக் கொள்கையில் உள்ள இணையவழி மற்றும் தொலைதூரக் கல்வி குறித்த பரிந்துரைகள் வரவேற்கத்தக்க ஒன்று என்று தஞ்சாவூரை சேர்ந்த திருமதி. ஜெய்கீதா ரவி கூறுகிறார். குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நடத்தப்படும் இணையவழி வகுப்புகள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் என்று அவர் கூறுகிறார். இணையவழி வகுப்புகள் மூலம் கற்கும் பள்ளி மாணவர்கள் கல்லூரியில் இணையவழி வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு எளிதாக உணர்வதாக அவர் குறிப்பிடுகிறார். கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடியை எதிர்கொள்ள தொழில்நுட்பம் உதவி இருப்பதாகவும், ஆனால் இது சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளையும் சென்றடைய வேண்டும் என்றும் அவர் கூறினார். இணையவழி கல்விக்கு தேசிய கல்விக் கொள்கை அளித்துள்ள முக்கியத்துவத்தை டாக்டர். உதயபானு. ஆர், மூத்த உதவிப் பேராசிரியர், தடயவியல் மருத்துவம், நச்சுஇயல் துறை, அரசு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி, பாராட்டியுள்ளார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையே உடனடி உரையாடலுக்கான பாரம்பரிய வகுப்பறையின் பலன்களை இணையவழி வகுப்புகள் வழங்குவதாகவும், அதே சமயம், பயணம் மற்றும் நேரடித் தொடர்பு போன்ற ஆபத்துகள் இல்லாததால் அனைவரின் பாதுகாப்பையும் அது உறுதி செய்வதாகவும் அவர் கூறினார். நிர்ணயிக்கப்பட்ட எந்த நேரத்திலும் வகுப்புகளை நடத்தலாம் என்பதால், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நேரத்தின் வசதியை இது வழங்குவதாக அவர் தெரிவித்தார். மேலும், யாருக்காவது உடல்நிலை சிறிது சரியில்லாமல் இருந்தாலும், அவர்கள் மூலம் நோய் மற்றவர்களுக்கு பரவாது என்பதால், அவர்கள் பாடங்களை தவறவிடாமல் இணையவழி வகுப்புகளில் பங்குபெறலாம். பள்ளி அல்லது கல்லூரியின் வளங்களை குறைவான அளவிலேயே இது பயன்படுத்திக் கொள்வதால், பள்ளி மற்றும் கல்லூரியின் பரமாரிப்புச் செலவுகள் குறைகின்றன. ஆரம்பப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரியும் திருமதி. உமா பாலகோபால், தனது மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளைத் தான் நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார். காணொளி வகுப்பகளை பெற்றோர்களுக்குத் தான் அனுப்புவதாகவும், அவர்கள் அவற்றை மாணவர்களுக்குக் காட்டுவதாகவும் கூறினார். ஆனால் உயர் வகுப்புகளுக்கு உரையாடலுடன் கூடிய வகுப்புகள் தேவை என்பதால், அவற்றுக்கு இணையத் தொடர்புடன் கூடிய பிரத்யேகத் திறன் பேசிகள் அல்லது மடிக்கணினிகள் தேவைப்படுகின்றன. நல்ல இணையவழி கற்பிப்பாளராகத் திகழ்வதற்கு ஆசிரியர்களுக்கும், சிறப்புப் பயிற்சி தேவைப்படுகிறது. மாணவர்கள் ஆசிரியர்களுக்கு முன்னால் அமர்ந்திருப்பதாக அவர்கள் எண்ணிக்கொண்டு, பாடங்களை எவ்வளவு சுவாரசியமாக முடியுமோ அவ்வளவு சுவாரசியமாக நடத்த வேண்டும். மாணவர்களின் குடும்ப உறுப்பினர்களது ஒத்துழைப்பும் இதற்கு முக்கியம். இணையவழி வகுப்புகளில் மாணவர்கள் கவனம் செலுத்த அவர்கள் உதவ வேண்டும்.

 

உலகத்தரம் வாய்ந்த கல்வியைக் கற்று மாணவர்கள் சிறந்து விளங்கவும், தேசம் மாபெரும் உயரங்களைத் தொட்டு வளர்ச்சியடையவும் புதிய கல்விக் கொள்கை கட்டாயம் வழி வகுக்கும்.



(Release ID: 1643192) Visitor Counter : 81