சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

கொள்ளை நோய் பரவும் காலத்தில் நேர்மறை சிந்தனைகளை உருவாக்குவது மன அழுத்தம் இல்லாத வாழ்வுக்கு உதவியாக இருக்கும் உளவியல் துறை

Posted On: 31 JUL 2020 6:55PM by PIB Chennai
  • உதவிப் பேராசிரியர் டாக்டர் டி.வி. நித்யானந்தன்

``தற்போதைய நோய்த் தொற்று சூழ்நிலையில் ஒட்டுமொத்த உலகமே பெரிய மாற்றத்துக்கு ஆளாகியுள்ளது. இருந்தபோதிலும் இதன் மூலம் நடந்துள்ள நேர்மறை விளைவுகளைப் பற்றி யோசித்துப் பார்த்தால், மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க முடியும்'' என்று பெரியார் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் டி.வி. நித்யானந்தன் கூறினார். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் மையம் மற்றும் சேலத்தில் உள்ள மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் ஆகியவை இணைந்து இன்று நடத்திய இணையவழி கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.

கோவிட்-19 பாதிப்பு சூழ்நிலையில் மன ஆரோக்கியத்தைப் பராமரிப்பது என்ற தலைப்பில் பேசிய அவர், மன ஆரோக்கியத்தைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். நோய்த் தொற்று சூழ்நிலையால் ஏற்பட்ட நேர்மறை விளைவுகளை அறிந்து கொள்வது அதற்கு அவசியமாகிறது. வாழ்க்கை பற்றியும், மக்களின் சிந்தனை பற்றியும் இந்தச் சூழ்நிலை ஒரு தெளிவை ஏற்படுத்தியுள்ளது. முடக்கநிலை அமல் காரணமாக, மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் நிறைய நேரத்தை செலவிட்டனர். அதற்கு முந்தைய காலக்கட்டத்தில் அந்தப் பழக்கத்தை அவர்கள் மறந்திருந்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.

``இன்றைக்கு நாம் செய்யும் எல்லாமே டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் சாத்தியமாகியுள்ளன. ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு எளிதான ஒரு நடைமுறையை செயல்படுத்துவதற்கும் கூட தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், தேவையான சமயங்களில் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப தகவமைப்பு செய்து கொள்ள வேண்டியது அவசியம்'' என்று அவர் கூறினார்.

நோய்த் தொற்று காரணமாக உருவாகியுள்ள புதிய வாழ்க்கை நியதி என்பது பழைய வாழ்க்கை நியதியில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது என்றார் அவர். ``முந்தைய மாதங்களில் டிஜிட்டல் சாதனங்களின் திரைகளில் குழந்தைகள் நேரத்தை செலவிடுதலுக்குக் கட்டுப்பாடுகள் இருந்தன. அதனால் வெளியில் சென்று விளையாடும்படி பெற்றோர்கள் கூறினர். ஆனால், இப்போது, குழந்தைகளை வெளியில் செல்ல வேண்டாம் என்று நாம் கூறுகிறோம். 4 வயதான குழந்தைகளுக்கும் கூட ஆன்லைன் மூலம் கற்பித்தல் நடக்கிறது. அவர்களை வீட்டிலேயே இருந்து செல்போன் பயன்படுத்தும்படியும், வீடியோ கேம்கள் விளையாடுமாறும் கூறுகிறோம்'' என்று அவர் கூறினார்.

புதிய வாழ்க்கை நியதிகளுக்கு எப்படி மாறிக் கொள்வது என்பதற்கான வழிகாட்டுதல்களை அளிக்கும் சில புத்தகங்களைப் படிக்குமாறு மக்களை அவர் கேட்டுக் கொண்டார். டான் பிரவுன் எழுதிய Origin புத்தகம், சீர்திருத்த வழியில் இறைவனைப் பற்றிப் பேசுகிறது. அறிவியல் மற்றும் உலகின் எதிர்காலம் பற்றி பேசுகிறது. கால் நியூபோர்ட் எழுதிய Digital Minimalism புத்தகம், மாறிவரும் உலகில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வாழ்வதில் எப்படி கவனம் செலுத்துவது என விவரிக்கிறது. கால் நியூபோர்ட்டின் Deep Work என்ற மற்றொரு புத்தகம், சிதறல் இல்லாமல் ஒருமித்த கவனம் செலுத்தும் திறன் பற்றியும், குறைவான நேரத்தில் அதிகமான விஷயங்களை எப்படி சாதிப்பது என்பது குறித்தும் விவரிக்கிறது என்று அவர் கூறினார்.

ஷோசனா ஜூபோஃப் எழுதிய The Age of surveillance Capitalism புத்தகம், நமது அந்தரங்கத் தகவல்கள் எதிர்காலத்தில் வெறும் விற்பனைப் பொருளாக மாறிவிடும் என்பதால், தொழில்நுட்ப காலத்தில் தனிப்பட்ட தகவல்களில் ரகசியத்தன்மை என்பது இருக்காது என்பதை நினைவுபடுத்துவதாக உள்ளது. அதேசமயத்தில், நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்ற வழிமுறைகளையும் அந்தப் புத்தகம் விளக்குகிறது. ``திரையைப் பார்த்துக் கொண்டிருக்கும்''  கேம்கள், சமூக ஊடகம் போன்றவற்றில் ஈடுபாடு மூலம் பலரை ஒன்று சேர்ப்பது மற்றும் எல்லைகளை நிர்ணயித்துக் கொள்வதில் பெற்றோர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை சோனியா லிவிங்ஸ்டோன் மற்றும் அலிசியா பிளம்-ராஸ் எழுதிய  Parenting for a Digital future புத்தகம் விளக்குகிறது என்று அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு சூழ்நிலையில் குடும்ப உறவுகள் என்ற தலைப்பில் சேலம் மெகர் மைன்ட் கேர் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர். மெகர் உரையாற்றினார். 15 ஆண்டுகளாக மருத்துவத் துறையில் உள்ள டாக்டர். மெகர், மன அழுத்தம் காரணமாகத்தான் 99 சதவீத ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படுகின்றன என்று தெரிவித்தார். பல்வேறு வீட்டுப் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் சமயத்தில் தான் நிறைய நோயாளிகளுக்கு காய்ச்சல், வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுகின்றன என்பதை தன் அனுபவத்தில் பார்த்து வருவதாக அந்தப் பெண் மருத்துவர் தெரிவித்தார்.

எதிர்மறை எண்ணங்களை வெற்றி கொள்வதற்கு, ஆக்கபூர்வ சிந்தனைகளை அதிகரித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் முடக்கநிலை காலத்தில் தங்களுடைய அனுபவங்களையும், மன அழுத்த சூழ்நிலைகள் குறித்தும் மாணவர்கள் தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். எதிர்காலத்தில் தங்களுக்கு எது நடக்க வேண்டும் என்பது குறித்து ஆக்கபூர்வ சிந்தனைகளை அதிகரித்துக் கொண்டால், எதிர்மறை சிந்தனைகள் அடிபட்டுப் போய்விடும் என்று டாக்டர் மெகர் யோசனை கூறினார்.

``பிரச்சினைகளின் அடிப்படையில் இல்லாமல், தேவைகளின் அடிப்படையில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். பல்வேறு தேவைகள் குறித்து ஒரு டைரி பராமரிப்பது அவசியம். குடும்பம் அல்லது சமூகப் பிரச்சினைகளால் எப்போது எதிர்மறை சிந்தனை தோன்றினாலும், அதுபற்றி சிந்திப்பதை விட்டுவிட்டு, அதை எப்படி நேர்மறையானதாக மாற்றலாம் என யோசிக்க வேண்டும்'' என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மனதை தளர்வாக்கும் பயிற்சிகளை சொல்லிக் கொடுத்து, உணர்வுகளையும், மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்துவதற்கு டாக்டர் மெகர் உதவினார். நமது கோபம், மன அழுத்தம், அச்சத்தைக் கட்டுப்படுத்த கற்றுக் கொண்டால், எல்லோராலும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று அவர் கூறினார்.

முன்னதாக பத்திரிகை தகவல் மைய தென் மண்டலத் தலைமை இயக்குநர் திரு. வெங்கடேஸ்வரா வரவேற்புரை ஆற்றினார். இணையவழி நிகழ்ச்சிக்கு நல்ல தலைப்பைத் தேர்வு செய்திருப்பதாக அவர் பாராட்டு தெரிவித்தார். இது தனித்துவமான தலைப்பாக இருப்பதுடன், இந்த சமயத்துக்குத் தேவையான தலைப்பாக இருக்கிறது என அவர் பாராட்டினார்.

மண்டல மக்கள் தொடர்பு அலுவலக சென்னை இணை இயக்குநர் திரு. காமராஜ் அறிமுக உரையாற்றினார். இந்தச் சூழ்நிலை பெரியவர்களுக்கு மட்டுமின்றி, குழந்தைகளுக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது, மாணவர்களுக்கு கல்வி மற்றும் ஆன்லைன் வகுப்புகள் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். அவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு இந்த இணையவழி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். கோவிட் பாதிப்புக்கு எதிராக முன்களத்தில் நின்று போராடுபவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையிலும் இந்த நிகழ்ச்சி இருப்பதாக அவர் கூறினார்.

சேலத்தில் உள்ள மண்டல மக்கள் தொடர்பு அலுவலக கள விளம்பர அலுவலர் திரு. எஸ். முரளி நன்றி கூறினார்.

 



(Release ID: 1642646) Visitor Counter : 246


Read this release in: English