சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

‘ கற்பி, ஊக்கப்படுத்து, ஒளியூட்டு’ என்னும் மையக்கருத்துடன் புதிய கல்வி கொள்கை 2020 வெளியிடப்பட்டுள்ளது.


2030 –க்குள் பள்ளிக் கல்வியில் 100 சதவீத பதிவை நோக்கமாக கொண்டுள்ளது.

8-ம் வகுப்பு வரை உள்ளூர் மொழியில் கற்பிக்க வலியுறுத்தல்.

Posted On: 31 JUL 2020 7:04PM by PIB Chennai

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கை 2020 , கல்விக்கான புதிய வழிகளையும், இந்தியாவில் அனைவருக்கும் அறிவு புகட்டுவதையும் ஆரம்பித்து வைத்துள்ளது. பள்ளி நிலைக்கு முன்பிலிருந்து இடைநிலை வரை, அனைவருக்கும் கல்வியை புதிய கல்வி கொள்கை 2020 உறுதி செய்கிறது. இந்தக் கொள்கை , அனைத்து கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் போன்றவர்களால் பரவலாக வரவேற்கப்பட்டுள்ளது. அரசு ஏற்கனவே, கல்வி உரிமை, சமக்ர சிக்சா அபியான் ஆகியவற்றை அமல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களின் கீழ், பள்ளிக் கட்டமைப்பு அடிப்படை வசதிகளுடன், இடைநின்ற மாணவர்களை திரும்பக் கொண்டு வந்து மேம்படுத்தப்பட்டுள்ளது. இடை நின்ற மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சமூகப்பணியாளர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுமார் 2 கோடி இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக் கல்விக்கு கொண்டு வருவதை புதிய கல்வி கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2030 –ஆம் ஆண்டுக்குள் பள்ளிக் கல்வியில் 100 சதவீதப் பதிவை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

10 பிளஸ் 2 பள்ளி கல்வி முறை என்ற அடிப்படையில் அநேகமாக புரட்சிகரமான மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது. தற்போதைய முறைக்குப் பதிலாக 5+3+3+4 என்ற பாடத்திட்ட அமைப்பை முறையே 3-8, 8-11, 11-14, 14-18 என்ற வயதுக்கு ஏற்ற விதத்தில் ஏற்படுத்த  புதிய கல்வி கொள்கை 2020 உத்தேசித்துள்ளது. 3 முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பள்ளி கல்வி முறைக்கு இது கொண்டு வரும். புதிய கல்வி முறை 12 ஆண்டுகள் பள்ளிக் கல்வியையும், மூன்று ஆண்டுகள் பள்ளிக்கு முந்தைய கல்வியையும் கொண்டிருக்கும். மாணவர்கள் பாடங்களைத் தேர்வு செய்வதற்கான நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கப்படும். கலை மற்றும் அறிவியலுக்கு இடையிலும், பாடத்திட்டத்துக்கும், கூடுதல் நடவடிக்கைகளுக்கும் இடையிலும், தொழில் மற்றும் கல்வி நீரோட்டத்திற்குமிடையிலும் கடுமையான பிரிப்பு இராது.

திருச்சியைச் சேர்ந்த எஸ்பிஓஏ மெட்ரிகுலேசன் மற்றும் மேல்நிலைப் பள்ளியின் மூத்த அறிவியல் ஆசிரியர் திருமதி ஆனந்தி, மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கை மாணவர்களின் உளவியலில் கவனம் செலுத்துகிறது என்று கூறியுள்ளார். புதிய கல்வி முறையான 5+3+3+4 , மாணவர்கள் 8-ஆம் வகுப்பிலிருந்தே தங்களுக்கு விருப்பமான பாடங்களைத் தேர்வு செய்வதற்கு உதவுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். ஒரு மாணவர் அறிவியல் பாடத்தை விரும்புகிறார் என்றால், அந்த மாணவரோ, மாணவியோ சிறிய பாடமாக இசையைத் தேர்வு செய்யலாம் என அவர் கூறினார்மாணவர்களுக்கு தங்கள் இணைப்புப் பாடங்களை தேர்வு செய்யும் நெகிழிவுத் தன்மையை அரசு எடுத்துள்ள முக்கியமான முடிவாகும் என்று அவர் கூறினார்இரண்டு பருவத் தேர்வுகள் நடத்துவதை வரவேற்றுள்ள அவர், இது தேர்வு அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கும் என கூறினார். வாரியத் தேர்வு மற்றும் முன்னேற்ற தேர்வு ஆகியவற்றை ஒரே கல்வியாண்டில் எழுத முடியும். மாணவர்கள் எந்தவித மன அழுத்தமுமின்றி பாடம் கற்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாணவர்கள் விஞ்ஞானியாகவோ, ஆசிரியராகவோ, எந்தத் தொழிலாக இருந்தாலும், தாங்கள் விரும்புவதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை அளிப்பதால், புதிய கல்விக் கொள்கையை வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

3,5,8-ஆம் வகுப்புகளுக்கான பள்ளித் தேர்வுகளைப்  பள்ளிகளிலேயே  நடத்த புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. வாரியத் தேர்வுகள் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு முழுமையான மேம்பாட்டு வடிவமைப்புடன் நடத்தப்படும். புதிய தேசிய மதிப்பீட்டு மையம் , பராக் (:திறன் மதிப்பீடு , ஆய்வு மற்றும் முழுமையான மேம்பாட்டுக்கான அறிவு பகுப்பாய்வு) – நிலையான அமைப்பாக ஏற்படுத்த இது பரிந்துரைக்கிறது.

2035-ஆம் ஆண்டுக்குள் உயர் கல்வியில் மொத்த பதிவு விகிதத்தை 50 சதவீதமாக அதிகரிக்க புதிய கல்வி கொள்கை 2020 நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக புதிதாக உயர் கல்வியில் 3.5 கோடி இடங்களை அதிகரிக்க இது இலக்கு நிர்ணயித்துள்ளது. இளநிலை பட்டக் கல்வி, 3 அல்லது 4 ஆண்டுகளாக , பல்முனை வெளியேறும் வாய்ப்புகளுடன், அந்தக் காலகட்டத்திற்குள் உரிய சான்றிதழ் பெறும் வகையில் உத்தேசக் கொள்கை இருப்பது புரட்சிகரமான மாற்றமாகும். நான்கு ஆண்டு படிப்பை ஒரு மாணவரால் நிறைவு செய்ய முடியாவிட்டாலும், ஓராண்டு நிறைவில் சான்றிதழும், இரண்டு ஆண்டுகள் முடிவில் மேம்பாட்டு டிப்ளமோவும், மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் பட்டமும், நான்கு ஆண்டு முடிவில் இளநிலைப் பட்டத்துடன் ஆராய்ச்சி சான்றிதழும் வழங்கப்படும். ராஜபாளையத்தில் உள்ள கல்லூரி ஒன்றின் தமிழ்த் துறை தலைவர் டாக்டர். வி.கலாவதி, புதிய கல்விக் கொள்கை ஆராய்ச்சி மீதான ஆழ்ந்த விருப்பத்தைப் பெறும் வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்கும் என்று கூறியுள்ளார். ஒரே கல்வி முறையில், மாணவர்கள் வரவேற்பு உள்ள தங்கள் விருப்பத்துக்கு ஏற்ற பாடங்களையும் கற்கும் வாய்ப்பை பெறுவார்கள். ஒன்றுக்கொன்று தொடர்புடைய அறிவியல், கலை, கலாச்சாரப் பாடங்கள் இணைப்பால் மாணவர்கள் கற்றலை அனுபவித்து விருப்பத்துடன் மேற்கொள்வார்கள் என்று அவர் கூறினார். புதிய கல்விக் கொள்கை அனைத்து வயதினரும் படிக்கும் வகையில்கல்வியை உறுதிப்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார். தரமான கல்வியை இந்தியாவிலேயே தர முடியும் என்பதால், மாணவர்கள் வெளிநாடுகளுக்குப் படிப்புக்காகச் செல்ல வேண்டிய அவசியம் இராது என்று அவர் சுட்டிக்காடினார். நாடு கல்வியிலும் , அது தொடர்பான ஆராய்ச்சியிலும் முன்னேற்றம் பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்ற நிபுணர் திரு. என். ரவிச்சந்திரன் , தேசிய கல்விக் கொள்கையில் , 6-ஆம் வகுப்பில் இருந்தே திறன் சார்ந்த படிப்பு சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். ஒவ்வொரு குழந்தையும் குறைந்தது ஒரு தொழிலைக் கற்றுக்கொள்வது சிறந்தது என அவர் கூறினார். பாடத்திட்டத்தில் , தொழில், கல்வி, கூடுதல் நடவடிக்கைகள் ஆகியவற்றில் பிரிவு இராது என்பது வரவேற்கத்தக்கதாகும்மாணவர்கள் தங்கள் முக்கிய பாடத்துடன், இவற்றைத் தேர்வு செய்து படிக்க முடியும். உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவை  தீவிர ஆராய்ச்சி- பல்கலைக்கழகங்கள் என்ற நிலையிலிருந்து, தீவிர கற்பித்தல் பல்கலைக்கழகங்களாக , தன்னாட்சி அதிகாரத்துடன் மாறும் என அவர் சுட்டிக்காட்டினார். தரமான கல்வி என்ற வளர்ந்து வரும் தேவையைச் சமாளிக்க, இந்தக் கொள்கை, பொது மற்றும் தனியார் முதலீட்டை கல்வித்துறையில் அதிகரிக்கும். இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும். எனவே, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை 2020 அனைத்து அம்சங்களிலும் வரவேற்கத்தக்கது என்றும், இதன் பயனாக, நமது நாடு வரும் ஆண்டுகளில், தீவிரமான மாற்றங்களையும், மேம்பாட்டையும் காணும் என்றும் அவர் கூறியுள்ளார்.

புதிய கல்விக் கொள்கையில், தாய் மொழிக்கும், உள்ளூர் மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 5-ஆம் வகுப்பு வரையிலும், முன்னுரிமை அடிப்படையில் 8-ஆம் வகுப்பு வரையிலும் பயிற்று மொழி, தாய் மொழியாக இருக்கலாம் என புதிய கொள்கை கூறுகிறது. இது, ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களால், குறிப்பாக கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களால் வரவேற்கப்படுகிறது. திருச்சியைச் சேர்ந்த சுந்தரம் என்ற மாணவர், தமிழ் போன்ற உள்ளூர் மொழிகளில் கற்பிப்பது பாடங்களை முறையாகப் புரிந்து கொள்ள உதவும் என்று கூறியுள்ளார். பெரும்பாலான தனியார் பள்ளிகளில், ஆங்கிலம் பயிற்று மொழியாக உள்ளது, இதனால், குறிப்பாக கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடங்களைப் புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது.

கல்வி என்பது அறிவுப் பாதைக்கு ஒளியேற்றுவதுடன், நாட்டின் முன்னேற்றத்தில் தவிர்க்க முடியாத அம்சமாக உள்ளது. கல்விக் கொள்கை, காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டியதாகும். புதிய கல்விக் கொள்கையில், ஆன்லைன் கல்விக்கும் இடமுள்ளது என்பதில் வியப்பில்லை. கோவிட் -19 தொற்று முடக்கம் ஆன்லைன் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது. கல்வி முறையில் ஆன்லைன் தேர்வுகளுக்கும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய கல்விக் கொள்கை , அனைவருக்கும் கல்வி என்பதை உறுதி செய்து , நிச்சயம் முன்னேற்றத்தை நோக்கிய பாதையை காண்பிக்கும் என்பதில் ஐயமில்லை. -

 



(Release ID: 1642641) Visitor Counter : 292


Read this release in: English