சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

அஞ்சல் சேமிப்பு சேவைகள் தற்போது அனைத்து கிராமப்புற அஞ்சல் அலுவலகக் கிளைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


ஆதார் உதவியுடன் அஞ்சல்காரர்களால் செய்யப்படும் பணப்பட்டுவாடா, பொது முடக்கk காலத்தில் கிராமப்புற மக்களுக்கு உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதமாகும்

Posted On: 26 JUL 2020 5:07PM by PIB Chennai

கோவிட்-19 பெருந்தொற்று, அதையடுத்து அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் ஆகியவை காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், இந்தியா போஸ்ட் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது. சென்றடைய முடியாத நிலையில் உள்ளவர்களையும் சென்றடைய வேண்டும் என்பதை ஒரு குறிக்கோளாகவே, எண்ணி, இந்தியா போஸ்ட் செயல்பட்டு வருகிறது. கிராமப்புற மக்கள் இன்னும், மணியாடர் மற்றும் அரசுth திட்டங்களின் கீழ் பெறும் அத்தியாவசியத் தொகைகளைப் பெறுவதற்கு, அஞ்சல் ஊழியர்களையே சார்ந்துள்ளனர். இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் பரிவர்த்தனைகளில் இந்த மாத மதிப்பு 29 ஆயிரத்து 340 கோடி ரூபாய் அளவைத் தாண்டியது. தமிழ்நாட்டில் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி பரிவர்த்தனைகளின் கீழ், உள்நாட்டுப் பணப்பட்டுவாடா 1739 கோடி ரூபாயைத் தாண்டியது.

 

சிறுசேமிப்புத் திட்டங்கள் அனைத்தும், கிராமப்புறங்களில் உள்ள அஞ்சல் அலுவலகக் கிளைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று இந்தியா போஸ்ட் அறிவித்துள்ளது. முன்னதாக அஞ்சல் அலுவலக சேமிப்பு வங்கி அலுவலகங்கள், அனைத்து தலைமை அலுவலகங்களிலும், துணை அலுவலகங்களிலும், சேமிப்புவங்கி அதிகாரம் வழங்கப்பட்ட நகர்ப்புறக் கிளை அஞ்சல் அலுவலகங்களிலும் செயல்பட்டு வந்தன. பணத்தை டெபாசிட் செய்வது, காசோலை கொண்டு கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது, போன்ற வசதிகள் தலைமை அலுவலகங்களிலும், துறையின் துணை அலுவலகங்களிலும் மட்டுமே உள்ளன. சேமிப்புக் கணக்குகளைத் துவங்குவதற்காக தலைமை அஞ்சல் அலுவலகங்களுக்குச் செல்வதற்காக, நகரங்களுக்கும், நகர்ப்புறங்களுக்கும் பயணிப்பது, கிராமப்புற மக்களுக்கு ஏறக்குறைய முடியாதது என்ற நிலையாகவே இருந்தது. கோவிட்-19  பொதுமுடக்கக் காலத்திலும் அதைடுத்து பொதுப்போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த காலத்திலும் இவ்வாறே இருந்தது. கிராமப்புறங்களில் 1.31 லட்சத்துக்கும் அதிகமான கிளை அஞ்சல் அலுவலகங்கள் உள்ளன. இந்தியா முழுவதும் 35 கோடிக்கும் அதிகமான சிறுசேமிப்பு கணக்குகளும், சேமிப்புப் பத்திரங்களும் செயல்பாட்டில் உள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி அஞ்சல் சிறுசேமிப்புக் கணக்குகள் உள்ளன. இந்த வசதி சிறுசேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நன்மையளிக்கும். கிராமப்புற மக்கள், புதிதாக அஞ்சல் சேமிப்பு வங்கிக் கணக்குகளைத் துவக்கவும் ஊக்கமளிக்கும்.

 

இந்தியா முழுவதும் 1.61 கோடிக்கும் அதிகமான சுகன்யா சம்ரிதிக் கணக்குகள் உள்ளன என்று இந்தியா போஸ்ட் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகன்யா சம்ரிதிக் கணக்குகள் வைத்திருப்போர் உள்ளனர். அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கு, ரெக்கரிங் டெபாசிட், டைம் டெபாசிட், சுகன்யா சம்ரிதி கணக்குத் திட்டங்கள் போன்றவை, கிராமப்புறக் கிளை அஞ்சல் அலுவலகங்களில் இதுவரை அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆணையின் மூலம், கிராமப்புறக் கிளை அஞ்சல் அலுவலகங்களிலும், பப்ளிக் பிராவிடண்ட் பண்ட் பொதுவைப்புத்தொகை, மாதாந்திர வருவாய்த் திட்டம், தேசிய சேமிப்புப் பத்திரம், கிசான் விகாஸ் பத்திரம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்த முடியும்.

 

கிராமப்புற மக்கள், தங்களது வருவாயை உடனடியாக சேமிப்பதற்கு கிராமப்புற அஞ்சல் அலுவலகங்கள் உதவியாக உள்ளன என்று திருச்சிராப்பள்ளியிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த திருமதி.மகாலட்சுமி கூறினார். நகரங்களிலும், நகர்ப்புறங்களிலும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் கிடைக்கும் அனைத்து வசதிகளும், கிராமப்புற அஞ்சல் அலுவலகங்களிலேயே தற்போது கிடைப்பதால், வங்கிச் சேவைகளைப் பெறுவதற்காக கிராமத்திலுள்ள மக்கள், நகர்ப்புறங்களுக்கு பயணிக்க வேண்டிய அவசியம் இருக்காது. கடிதங்கள் மூலமாக நற்செய்திகளைக் கொண்டு வருபவராக முக்கியமான தூதராக அஞ்சல் ஊழியர் விளங்குகிறார். கோவிட்-19  காலத்தில் பல்வேறு திட்டங்கள் மூலமாக அரசு அளிக்கும் ரொக்க ஊக்கத் தொகைகளை அஞ்சல் ஊழியர்கள் விநியோகித்தனர்இந்தப் பொதுமுடக்கக் காலத்தின் போது, பொதுமக்கள், தங்களது வங்கி சேமிப்புக்கணக்கிலிருந்து ஆதார் எண் உதவியுடன் தங்களது பணத்தை எடுத்துக் கொள்வதற்கான வசதி, பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக திருச்சியில் உள்ள அஞ்சலக அலுவலர்கள் கூறுகிறார்கள். ஆதார் உதவியுடனான பணப்பட்டுவாடா முறை, அரசின் பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகளுக்கு, அவர்களுக்கான பணத்தை விநியோகம் செய்வதில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. வங்கிச் சேவைகள் எளிதில் கிடைக்காத நிலையில் உள்ள கிராமப்புற மக்களுக்கு நிதி உதவி தரும் வகையில், அஞ்சல் சேமிப்புக் கணக்குகள் பயன்பட்டு வருகின்றன. பொதுமுடக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கிராமப்புற மக்களின் இன்னல்களைப் போக்குவதற்கான காலகட்டமாக கோவிட்-19 தளர்வு-2 காலகட்டம் உள்ளது. நகர்ப்புறங்களில் கிடைக்கும் வங்கிச் சேவைகள் அனைத்தும் கிராமங்களிலேயே கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில், இந்தியா போஸ்ட்டின் சமீபத்திய ஆணை உள்ளது. இது உண்மையிலேயே அனைவரையும் உள்ளடக்கிய நிதி வளர்ச்சியாகும். கிராமப்புற மக்களுக்கு அதிகாரம் வழங்கக் கூடியதாகவும் இது அமைந்துள்ளது. குறிப்பாக ஓய்வு ஒழிச்சலின்றி, தேசத்திற்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்குவதாக இது அமைந்துள்ளது.

வாழிய வேளாண் பெருமக்கள்!

ஜெய்ஹிந்த்!

 



(Release ID: 1641396) Visitor Counter : 143