சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் 76,221 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.15 கோடி நிதி உதவி
Posted On:
20 JUL 2020 10:40AM by PIB Chennai
கொரோனா வைரஸ் பெருந்தொற்றும் அதைத் தொடர்ந்து பல கட்டங்களாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குகளும் அனைத்து தரப்பு மக்களையும் பல்வேறு விதங்களில் பாதித்துள்ளன. இதில் நாட்டில் உள்ள அமைப்பு சாராத தொழிலாளர்கள் அதிகம் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பல்வேறு தொழில்களில் இவர்கள் உதிரித் தொழிலாளர்களாகவே ஈடுபட்டுள்ளனர். இந்தத் தொழிலாளர்களுக்குப் பெரும்பாலும் பணி நிரந்தரம், உறுதியான வருவாய், காப்பீடு, பணி பாதுகாப்பு போன்ற எந்தவிதமான அனுகூலங்களும் இருப்பதில்லை. வேலைக்குச் செல்லும் அன்று கிடைக்கும் வருவாய்தான் அவர்களது வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக அமைகின்றது. ஒரு மாதத்தில் எத்தனை நாட்கள் வேலை கிடைக்கும் என்று உறுதியாக முன்கூட்டியே கணித்துவிடவும் முடியாது. சொந்தமாகத் தொழில் செய்பவர்களும் தமக்கு இவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. ஊரடங்கால் எல்லா வேலைகளும் முடங்கிப் போன நிலையில் இந்த அமைப்புசாரா தொழிலாளர்களும் வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் திண்டாடினர்.
ஏழைகள் மற்றும் நலிவடைந்தவர்கள் ஊரடங்கின் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு மத்திய அரசு பிரதம மந்திரி கரீப் கல்யாண் நிவாரணத் தொகுப்பை அறிவித்தது. அதில் கட்டிடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அவர்களது நலவாரியத்தில் இருந்து உதவித் தொகை வழங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப பல்வேறு மாநில அரசுகளும் தங்களது மாநிலத்தைச் சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்குப் பலவிதங்களில் உதவி வருகின்றன.
தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக 17 நலவாரியங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. கட்டுமானத் தொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள், உடல் உழைப்புத் தொழிலாளர்கள், சலவையாளர்கள், முடிதிருத்துவோர், தையல் தொழிலாளர்கள், கைவினைக்கலை தொழிலாளர்கள், பனைமரத் தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள், காலணி மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர்கள், ஓவியர்கள், பொற்கொல்லர், மட்பாண்டம் செய்வோர், வீட்டு வேலை செய்வோர், விசைத்தறி தொழிலாளர்கள், நடைபாதை மற்றும் கடைகளில் பணிபுரிவோர், சமையல் தொழிலாளர்கள் ஆகியோருக்கு நலவாரியங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் இந்த நலவாரியங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு தலா ரூ.2,000 கோவிட்-19 சிறப்பு நிதி உதவியாக வழங்கப்பட்டு உள்ளது.
தற்போதைய விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 17 நலவாரியங்களில் பதிவு செய்துள்ள 76221 பயனாளிகளுக்கு தலா ரூ.2,000 வீதம் மொத்த உதவித்தொகையாக ரூ.15 கோடியே 24 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் கோவிட்-19 சிறப்பு நிதியுதவியாக வழங்கப்பட்டு உள்ளது என்று விழுப்புரம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) திரும்தி கி.தமிழ்ச்செல்வி தெரிவித்து உள்ளார். கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் நிதிஉதவி அவர்களது நலவாரியத்தின் நிதியத்தில் இருந்து வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தமிழக அரசு உதவித் தொகையை வழங்கி உள்ளது.
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள்தான் 51,424 என்ற எண்ணிக்கையில் அதிக அளவில் நிதி உதவி பெற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து நடைபாதை வியாபாரிகள் மற்றும் கடைகளில் பணிபுரிவோர் 6410 என்ற எண்ணிக்கையிலும் தையல் கலைஞர்கள் 6104 என்ற எண்ணிக்கையிலும் உடலுழைப்புத் தொழிலாளர்கள் 4824 என்ற எண்ணிக்கையிலும் நிதியுதவி பெற்றுள்ளனர் என்று தமிழ்ச்செல்வி மேலும் தெரிவித்தார்.
உதவித்தொகையோடு கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் ஓட்டுனர்களுக்கும் தலா 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம்பருப்பு மற்றும் 1 கிலோ சமையல் எண்ணெய் ஆகிய ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. அந்த வகையில் 56,314 கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் 1,379 ஓட்டுனர்களுக்கும் என மொத்தமாக 57,693 பயனாளிகளுக்கு இலவசமாக மேற்சொன்ன ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன என்று தொழிலாளர் உதவி ஆணையர் தமிழ்ச்செல்வி மேலும் தெரிவித்தார்.
இந்த நிதியுதவியைப் பெற்ற பயனாளிகள் சிலரோடு கலந்துரையாடினோம். சின்னசேலத்தைச் சேர்ந்த தையல் கலைஞர் நதியா மற்றும் சலவைத் தொழிலாளி மணி, விழுப்புரத்தைச் சேர்ந்த கொத்தனார் குமார், தையல் தொழிலாளர் கோபு மற்றும் பூக்கடைத் தொழிலாளர் சின்னையன் ஆகிய ஐந்து பேருமே ஊரடங்கால் வேலைக்குச் செல்லாமலும் கடை திறக்க முடியாமலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சிரமத்துக்கு ஆளானதாகவும் தொழிலாளர் நலத்துறையின் இந்த ரூ.2,000 நிதி உதவி நெருக்கடி காலத்தில் மிகுந்த பயனளித்தது என்றும் தெரிவித்தனர். தக்க சமயத்தில் உதவிய அரசுக்கு நன்றியையும் தெரிவித்தனர்.
(Release ID: 1639873)
Visitor Counter : 166