சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

கோவிட் அறிகுறிகள் உள்ளவர்களைக் கண்டறிவதற்கான காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் திருச்சிராப்பள்ளியில் தொடங்கப்பட்டன

சென்னை, மதுரையைப் போன்று திருச்சிராப்பள்ளியும் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்களை நடத்துகிறது

Posted On: 16 JUL 2020 11:30AM by PIB Chennai

கோவிட்-19 நோய் இருப்பவர்களைக் கண்டறிந்து, அவர்களைத் தனிமைப் படுத்துவதால் மட்டுமே கோவிட் நோயைக் கட்டுப்படுத்த முடியும். கோவிட் நோய் அறிகுறி உள்ளவர்கள் தாங்களாகவே முன்வந்து சுகாதார அலுவலர்களை அணுகி, கோவிட் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். சென்னையிலும், மதுரையிலும் நகர மாநகராட்சிகள், சுகாதார அலுவலர்கள், ஆகியோரால் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்படுவதால், கோவிட் நோய் அறிகுறி உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு, கோவிட் நோய் பரவுவதை சிறந்தமுறையில் தடுக்க முடிந்தது. காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெற்றதால், பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்த போதிலும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்துள்ளது

 

திருச்சிராப்பள்ளியில், நான்கு மண்டலங்களில், வியாழக்கிழமை முதல் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்த திருச்சிராப்பள்ளி நகர மாநகராட்சி அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இந்தச் சிறப்பு முகாம்கள் ஸ்ரீரங்கம், கோ அபிஷேகபுரம், பொன்மலை, அரியமங்கலம் ஆகிய மண்டலங்களில் 65 வார்டுகளில் நடத்தப்படும்

 

அறிகுறிகள் இல்லாத மக்களும், இந்த முகாம்களுக்குச் சென்று பயன்பெற வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஏற்கனவே பிற நோய்கள் உள்ள மூத்த குடிமக்களும் இந்த சிறப்பு முகாம்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கோவிட் நோய் அறிகுறி உள்ளவர்கள், மூத்த குடிமக்கள், வேறு பிற நோய்கள் உள்ள மக்கள் கோவிட் நோய்க்கான ரியல் டைம் ரிவர்ஸ் ட்ரான்ஸ்கிரிப்ஷன் பாலிமர் ரேஸ் செயின் ரியாக்சன் (ஆர் டி பி சி ஆர்) பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமா என்பதை இந்த முகாம்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம். முதல் கட்டமாக, பாலக்கரை, உறையூர், கே.கே.நகர், மேலசிந்தாமணி ஆகிய, பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடிய இடங்களில், இந்த முகாம்கள் நடத்தப்படும் முகா.ம்கள் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக வீடு வீடாகச் சென்று பாதிப்பு அடையக்கூடிய மக்கள் அடையாளம் காணப்படுவார்கள். மாநகராட்சி மண்டலங்களில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய ஒரு வார்டில், ஒவ்வொரு நாளும் சுழற்சி முறையில் முகாம்கள் நடைபெறும்.

 

வியாழக்கிழமைன்று ஸ்ரீரங்கம் மண்டலத்தில் எட்டாவது வார்டில் ஸ்ருதி மஹால்; அரியமங்கலம் மண்டலத்தில் 23வது வார்டில் பாலக்கரையில் செங்குளம் மாநகராட்சி பள்ளி; கோ அபிஷேகபுரம் அறுபதாவது வார்டில் உறையூர் ஆர்.சி.நடுநிலைப் பள்ளி; பொன்மலை மண்டலத்தில் 38 வது வார்டில் அதியமான் பெண்கள் கல்லூரி ஆகிய இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெற்றன. இந்த காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை, ஒவ்வொரு மண்டலத்திலும் இதற்கென தெரிந்தெடுக்கப்பட்ட கல்லூரிகள், பள்ளிகள், மண்டபங்களில் நடைபெறுகின்றன.

 

முன்னதாக தெர்மல் ஸ்கிரீனிங் கருவிகளுடன் பில் கலெக்டர்கள், அறுபத்தைந்து வார்டுகளிலும், வீடுவீடாகச் சென்று இல்லங்களில் உள்ளவர்களைப் பரிசோதனை செய்யும் முறையை, திருச்சி நகர மாநகராட்சி அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த பில் கலெக்டர்கள் ஒவ்வொரு நாளும் 50 வீடுகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. வீடுகளில் உள்ளவர்களின் உடல் வெப்ப நிலையையும், பயணப் பதிவுகளையும் எழுதிக்கொள்ள வேண்டியிருந்தது. இவ்வாறு, வீடு வீடாகச் சென்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் அங்கன்வாடிப் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். திருச்சிராப்பள்ளியில் கோவிட் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாள்தோறும் சுமார் நூறு பேராவது பாதிக்கப்படுகின்றனர். எனவே, கோவிட் நோய் அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிவதற்காக காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. திருச்சிராப்பள்ளியில் தற்போது 800 பேர் கோவிட் நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடுவதற்கான சிறந்த முறை, இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து, அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதேயாகும். இவ்வாறு நோய் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதன் மூலம், நோய் பரவுவதற்கான சங்கிலித் தொடரை உடைப்பது மட்டுமல்லாமல், பிற புதிய இடங்களுக்கு நோய் பரவாமல் தடுக்கவும் முடியும். இந்தப் பெருந்தொற்று குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இந்த பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த முறையாகும். இந்த பெருந்தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் சுகாதார அதிகாரிகளுடனும், மாவட்ட நிர்வாகத்துடனும் ஒத்துழைக்க வேண்டும். நகரங்களிலும் டவுன்களிலும் முகாம்கள் நடத்தப்படுவதைப் போலவே புறநகர்ப் பகுதிகளிலும் முகாம்கள் அதிக எண்ணிக்கையில் நடத்தப்பட வேண்டும். ஏனென்றால் இங்கு மக்கள் தொகை அதிகம். பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு இந்த அணுகுமுறை நிச்சயம் நல்ல பலன் தரும்.

                                                                                                       --------------



(Release ID: 1639262) Visitor Counter : 123