சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

இளைஞர்கள் சுய தொழில் தொடங்குவதன் மூலம் சுயசார்பு பெறலாம்

சுயசார்பு இந்தியா திட்டம் குறித்த மெய்நிகர் காணொளி கருத்தரங்கில் ரூட்செட் இயக்குனர் திரு ரவிக்குமார் தகவல்

Posted On: 16 JUL 2020 4:58PM by PIB Chennai

இந்திய அரசின் மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் சார்பில் இளைஞர்களுக்கான தற்சார்பு இந்தியா மற்றும் சுய தொழில் தொடங்குதல் குறித்த மெய்நிகர் காணொலிக் கருத்தரங்கம் இன்று (16.7.2020) நடைபெற்றது.  மதுரை ரூட்செட் நிறுவனம் மற்றும் விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் நேரு யுவ கேந்திரா அலுவலகங்களின்  ஒருங்கிணைப்போடு இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது. 

 

இதில் சிறப்புரையாற்றிய கனரா வங்கியின் ரூட்செட் (ஊரக மேம்பாடு மற்றும் சுயவேலை வாய்ப்புப் பயிற்சி) நிறுவன இயக்குனர் திரு எம். ரவிக்குமார் இளைஞர்கள் சுயதொழில் தொடங்குவதன் மூலம் தற்சார்பு இந்தியா உருவாக உதவ முடியும் என்று தெரிவித்தார்.  கொரோனா வைரஸ் பெருந்தொற்று  பல்வேறு தொழில்களையும் பாதித்துள்ளது. அதிலும் குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSME) மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாக நிவாரணம் பெற உதவும் வகையில் தற்சார்பு இந்தியா நிவாரணத் தொகுப்பில், உத்திரவாதம் அளிக்கப்பட்ட அவசரக்காலக் கடன் உதவி (GECL) அறிவிக்கப்பட்டுள்ளது என்று திரு ரவிக்குமார் மேலும் தெரிவித்தார்.

 

இளைஞர்களுக்கான இன்றைய சுய வேலைவாய்ப்புகள், எவ்வாறு வங்கிக்கு திட்ட அறிக்கை தயாரிப்பது, எவ்வாறு குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்வது, பல்வேறு கடன் வசதிகள், தற்சார்பு இந்தியா திட்டத்தில் இதற்கான ஒதுக்கீடு மற்றும் வங்கி கடனுக்கு விண்ணப்பிப்பது குறித்தும் அவர் விரிவாகப் பேசினார்.

 

 

கருத்தரங்கிற்குத்  தலைமை வகித்து பேசிய  சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இணை இயக்குனர் திரு ஜெ.காமராஜ், இளைஞர்கள், யாரையும் சாராமல் சுயமேம்பாடு அடைந்து சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதும், அதன் மூலம்  நாட்டை உலக அளவில் முன்னெடுத்து செல்வதும் அவர்களது கடமை எனக் குறிப்பிட்டார்.

 

மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர்கள் திரு  எல்.ஞானசந்திரன்(விருதுநகர்), திரு கே.அஸ்வின் விநோதன்(தேனி) மற்றும் திரு சரண் வி. கோபால்(திண்டுக்கல்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

 

நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு ரூட்செட் இயக்குனர் திரு ரவிக்குமார் உரிய பதில்களை வழங்கினார்.

 

மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலக உதவி அலுவலர் திரு வேல்முருகன் வரவேற்புரை ஆற்றி நிகழ்ச்சியின் நோக்கம் குறித்தும் எடுத்துரைத்தார்.  நேரு யுவ கேந்திராவைச் சேர்ந்த திரு பாபு நன்றி தெரிவித்தார்.

விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, சுயதொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் இக் காணொலிக் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

                                                                                                            -----

 



(Release ID: 1639083) Visitor Counter : 181