சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

கோவிட்-19 பொதுமுடக்கம்: வாழ்வாதார சிக்கல்களை சமாளிக்க சுய உதவிக் குழுக்களுக்கு பிணை இல்லாத கோவிட் சிறப்புக் கடன்கள்.


ரூ 12 கோடி இலக்கில் இருந்து மத்திய மாவட்டங்களில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு ரூ 62.5 லட்சம் வழங்கப்பட்டது.

Posted On: 12 JUL 2020 4:12PM by PIB Chennai
  • கே தேவி பத்மநாபன், கள விளம்பர அலுவலர், திருச்சிராப்பள்ளி.

 

கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள நிதிச் சிக்கலை சுய உதவிக் குழுக்கள் சமாளிக்க உதவும் வகையில், மத்திய அரசு அறிவித்த தற்சார்பு இந்தியா உதவித் தொகுப்பின் கீழ் பிணை இல்லாத கடன்கள் வழங்கப்படுகின்றன. பெரும்பாலான ஏழைக் குடும்பங்களுக்கு இன்னும் வேலை எதுவும் இல்லாததால், பொதுமுடக்கத் தளர்வுகள்-2 காலத்தின் போது கடன் தொகை அவர்களுக்கு உதவும். பிரதமரின் ஏழைகள் உணவு மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் அரிசி, பருப்புகள் மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட இலவச ரேஷன் பொருள்கள், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு உருளைகள் மற்றும் மகளிர் ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ. 500 நிதி உதவி என அரசு வழங்கி வருகிறது. கோவிட்-19 கடன் திட்டத்தின் கீழ், ஒரு சுய உதவிக் குழுவுக்கு அதிகபட்சம் ரூ ஒரு லட்சம் என, ரூ 5,000 வரை சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்குக் கடன் வழங்கப்படுகிறது.

 

திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர் மற்றும் அரியலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில், தகுதியான 1500 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ 12 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 65 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ 62.5 லட்சம் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. தகுதியான சுய உதவிக் குழுக்கள் தங்களுக்கு அருகில் உள்ள வங்கிகளில் இருந்து கடன் வசதியைப் பெறலாம். 39 கூட்டுறவு வங்கிக் கிளைகள் மற்றும் 147 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் நிறுவனங்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ளன. 10 வங்கிக் கிளைகள் மற்றும் 53 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் நிறுவனங்கள் பெரம்பலூரில் உள்ளன. 15 வங்கிக் கிளைகள் மற்றும் 84 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் நிறுவனங்கள் கரூரில் உள்ளன. ஒன்பது வங்கிக் கிளைகள் மற்றும் 64 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் நிறுவனங்கள் கரூரில் உள்ளன. திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர் மற்றும் அரியலூர் ஆகிய நான்கு மத்திய மாவட்டங்களில் 4520 சுய உதவிக் குழுக்கள் மற்றும் வேளாண்மை கூட்டுறவுக் கடன் நிறுவனங்களின் கீழ் 16030 குழுக்கள் உள்ளன. திருச்சி பேட்டவாய்த்தலையில் 36 விவசாயிகளுக்கு பயிர்க் கடனாக ரூ 21.39 லட்சம் இந்த நிதி ஆண்டில் வழங்கப்பட்டது. அதோடு, 33 நபர்களுக்கு விவசாய தங்க நகைக் கடனாக ரூ 27 லட்சமும், பொது தங்க நகைக் கடனாக ரூ 8.41 லட்சமும் பேட்டவாய்த்தலையில் வழங்கப்பட்டன. மேலும், ரூ 5000 முதல் ரூ 50000 வரையிலான கடன்கள் ஐந்து சுய உதவிக் குழுக்களின் 33 நபர்களுக்கு வெள்ளியன்று வழங்கப்பட்டன. இரண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ 50000 கடனாக வழங்கப்பட்டது.

 

சுய உதவிக் குழுக்களுக்கானக் கடன்களை வரவேற்கும் பயனாளிகள், கோவிட்-19 பொதுமுடக்கத்தின் போது ஏற்பட்டுள்ள வேலை இழப்பைக் கருத்தில் கொண்டு கடன் உதவியை வழங்குவதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். கோவிட்-19 பொதுமுடக்க சமயத்தில் சுய உதவிக் குழுக்களுக்கானக் கடனை எந்த வித பிணையும் இல்லாமல் வழங்குவதற்காக பெரம்பலூரில் உள்ள அரனாரை கிராமத்தை சேர்ந்த திருமதி. சிவரஞ்சனி அரசுக்கு நன்றி தெரிவித்தார். பொதுமுடக்கத்தின் போது வேலை இல்லாததால் இது ஒரு நல்ல நிவாரணம் என்று அவர் தெரிவித்தார். கோவிட்-19 பொதுமுடக்கத்தின் போது தனது கணவர் வேலை இழந்ததால் கடன் உதவிக்காக பெரம்பலூரை சேர்ந்த திருமதி. லட்சுமி அரசுக்கு நன்றி தெரிவித்தார். அவசியமான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்காக பெரம்பலூர் ரெங்கநாதபுரத்தை சேர்ந்த திருமதி. தேவியும், அண்ணமங்கலத்தை சேர்ந்த திருமதி. இந்திராணியும் அரசைப் பாராட்டினர்.

 

வாழ்வாதாரத்தைப் பொருத்தவரையில், மீண்டெழவும், போராட்டங்களை சமாளிக்கவும் பொதுமுடக்கத் தளர்வுகள் காலகட்டம்-2 மிகவும் முக்கியமான காலகட்டமாகும். ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு இந்தக் காலகட்டத்தில் கடன் உதவி முக்கியமென்பதால், சுய உதவிக் குழுக்களுக்கான கோவிட் சிறப்புக் கடன் மூலம் அரசு உதவி வருகிறது.

 

***



(Release ID: 1638181) Visitor Counter : 112


Read this release in: English