சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

சென்னை விமான சுங்கத்துறை அதிகாரிகள், நெதர்லாந்திலிருந்து சென்னையில் உள்ள வெளிநாட்டு அஞ்சல்களுக்கான அலுவலகத்துக்கு வந்த போதைப்பொருள் மாத்திரைகள் கொண்ட இரண்டு தபால் பொட்டலங்களைக் கைப்பற்றினர்- - இருவர் கைது

Posted On: 09 JUL 2020 12:03PM by PIB Chennai

சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், நெதர்லாந்திலிருந்து சென்னையில் உள்ள வெளிநாட்டு அஞ்சல்களுக்கான அலுவலகத்துக்கு வந்த போதைப்பொருள் உள்ளதாக சந்தேகிக்கப்பட்ட, இரண்டு தபால் பொட்டலங்களைக் கைப்பற்றினர்.

 

திறந்து பரிசோதித்துப் பார்த்த போது முதல் பொட்டலத்தில் MDMA (3, 4 மெத்திலின் டை ஆக்சி மெதாம்ஃபெடாமின்) என்ற போதைப்பொருள் கொண்டதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட 490 பச்சை வண்ண மாத்திரைகள் இருந்து தெரியவந்தது. பச்சை வண்ண மாத்திரைகள் பொதுவாக Frosch’” என அழைக்கப்படும். இந்த மாத்திரைகளின் ஒரு புறத்தில் ஸ்மைலி இருக்கும். இவற்றில் சுமார் 165 மில்லி கிராம் எம் டி எம் ஏ இருக்கும்.

 

இரண்டாவது பொட்டலத்தில்  50 ஆரஞ்சு வண்ண மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. பொதுவாக, லம்போர்கினி Lamborghini என்றழைக்கப்படும் இவற்றில், எருது முத்திரை இடப்பட்டிருக்கும். இந்த மாத்திரைகள் சுமார்  200 மில்லி கிராம் எம் டி எம் ஏ கொண்டவை. 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான 540 மாத்திரைகள், NDPS சட்டம் 1985ன் கீழ் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

 

இந்த அஞ்சல் பொட்டலங்கள் சென்னையைச் சேர்ந்த இரு வேறு நபர்களுக்கு  அனுப்பப்பட்டிருந்தன.

 

இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக, அந்த முகவரிகளில் விசாரணை நடத்தப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு, இந்தக் கடத்தலில் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்கப்ப்ட்டு வருகிறது.

 

பொதுவாக போதை மாத்திரைகள் கேளிக்கை விருந்துகளில் இளைஞர்களால் பயன்படுத்தப்படும் மருந்தாகும். இளைஞர்களிடையே இந்த மாத்திரைகள் பிரபலமாக உள்ளன. பொதுமுடக்கக் காலத்தில் இந்த மாத்திரைகள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொதுமுடக்கம் காரணமாக வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் நிலை உள்ளதால், மனப்பதற்றம் அதிகரித்துள்ளது.  

இது தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் திரு.ராமன் சவுத்ரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

                              ----



(Release ID: 1637692) Visitor Counter : 100