சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

2020-21-ல் திருச்சிக்கு தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பு கழகம் ஒரு கோடி ரூபாய் கடனுதவி

Posted On: 09 JUL 2020 4:09PM by PIB Chennai

தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பு நிதி மேம்பாட்டு கழகம், என்பிசிஎப்டிசி , அரசால் அறிவிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கடனுதவி வழங்கி வருகிறது. கொவிட்-19 தொற்று தளர்வுகள் 2.0 அனைத்து துறைகளிலும் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவித்து வருகிறது. அரசு முகமைகளின் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தனிநபர்களுக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது.

என்பிசிஎப்டிசி, விவசாயம், அது சார்ந்த செயல்பாடுகள், சிறு வணிகம், பாரம்பரிய தொழில்கள், போக்குவரத்து, தொழில்நுட்ப வாழ்வியல் வர்த்தகம் ஆகியவற்றை பிற்படுத்தப்பட்டோர் செய்வதற்கு பொதுக் கடன் வழங்குகிறது. இதற்கு விண்ணப்பிப்பவர்களின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். பயனாளிக்கு தலா ரூ.15 லட்சம் வீதம் அதிகபட்ச கடன் வழங்கப்படுகிறது. காலாண்டுக்கு ஒரு முறை தவணையாக, அதிக பட்சம் 8 ஆண்டுகளுக்குள் கடனைத் திருப்பி செலுத்த வேண்டும். ரூ. 5 லட்சம் வரையிலான கடனுக்கு 6 சதவீதமும் , ரூ.5 முதல் ரூ.10 லட்சம் வரையிலான கடனுக்கு 7 சதவீதமும், ரூ.10 முதல் ரூ.15 லட்சம் கடனுக்கு 8 சதவீதமும் வட்டியாக வசூலிக்கப்படும். கொவிட்-19 தொற்று காலத்தை கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி முதலுக்கான தவணையைத் திருப்பி செலுத்த 6 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. புதிய சுவர்னிமா திட்டத்தின் கீழ், பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்கள், ரூ.2 லட்சம் வரை கடன் பெறலாம். கடனை 8 ஆண்டு காலத்தில் திருப்பி செலுத்த வேண்டும். வட்டி விகிதம் ஆண்டுக்கு 5 சதவீதம் ஆகும். என்பிசிஎப்டிசி, பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்விக் கடனுக்கும் ஏற்பாடு செய்கிறது. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.15 லட்சம் கல்வி கடன் வழங்கப்படுகிறது. 5 ஆண்டு கால அவகாசத்திற்கு பின்னர், பத்து ஆண்டுகளில் இக்கடனைத் திருப்பி செலுத்த வேண்டும். மாணவர்களுக்கு ஆண்டுக்கு 4 சதவீதமும், மாணவிகளுக்கு 3.5 சதவீதமும் வட்டி வசூலிக்கப்படும். மாநில முகமைகளின் விதிமுறைகளுக்கு ஏற்ப, வட்டி விகிதம் மற்றும் கடன் தொகை ஆகியவை மாற்றப்படும்.

என்பிசிஎப்டிசி-யின் திட்டங்கள் மாநிலத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பு பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. திருச்சியில், இந்த கழகத்தின் மூலமாக, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கடனுதவி வழங்க 2020-21-க்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆழ்துளைக் கிணறு தோண்ட, மின்மோட்டார் பொருத்த, சுய உதவிக்குழு சிறு வணிக கடன், பசுமாடுகள் வாங்க, ஆட்டோக்கள் வாங்க கடனுதவி பெறலாம். பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 18 வயது முதல் 60 வயது வரையிலானோருக்கு இந்தக் கடனுதவி வழங்கப்படும். இருப்பினும், ஒரு குடும்பத்துக்கு ஒருவர் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் கடன் பெற முடியும். இப்பிரிவைச் சேர்ந்த மக்கள், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், கடன் பெறுவதற்கான வணிகம் பற்றிய விவரங்கள், வாகனக் கடன் வாங்குவதென்றால் உரிமம், கல்விக் கடனுக்கு மாற்று சான்றிதழ் மற்றும் சான்றளிக்கப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

பொதுமக்களின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களை முறையாகப் பயன்படுத்தினால், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இவை நிச்சயம் உதவும்



(Release ID: 1637548) Visitor Counter : 108