சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

கோவிட்-19 நெருக்கடி காலத்தில் மனநலப் பிரச்சினைகள் தொலைபேசி வழி ஆற்றுப்படுத்தல் சேவைகள்

Posted On: 09 JUL 2020 11:43AM by PIB Chennai

ஒருவருக்கு உடல்நலம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு மன நலமும் முக்கியமானதாகும் உடல்நலப் பிரச்சினைகள் மன நலத்தைப் பாதிக்கும்; மனநலக் கோளாறுகள் உடல் நிலையைப் பாதிக்கும். எனவே மனம்-உடல் இரண்டின் சமநிலைதான் ஆரோக்கியமாகக் கருதப்படுகிறது. தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலும் அதையொட்டிய ஊரடங்குகளும் மக்களுக்கு பலவிதமான மனநலப் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த நெருக்கடி காலமானது மக்களிடையே அச்சம், பீதி, பதட்டம், சோகம், கவலை, வெறுமை, வெறுப்பு, தனிமை, பயம், குழப்பம், கோபம், விரக்தி, உளைச்சல், வருத்தம் போன்ற பல விதமான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. எல்லாம் சேர்ந்து மன அழுத்தம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

 

 நமக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற பயம், வேலை போய்விட்டதே என்ற பெரும் துயரம், நமது துணைவர் தொற்றுக்கான சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்ந்துள்ளாரே என்ற பதற்றம், வீட்டிலேயே அலுவலகப் பணிகளைச் செய்வதில் தடுமாற்றம், பிறருடன் கலந்து பழக முடியாத  சோகம், நமக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு விட்டதே பிழைப்போமா என்ற அச்சம் எனப் பலரும் பலவாறான பிரச்சினைகளைத் தினசரி சந்தித்து வருகின்றனர்.

    ஊரடங்கு மனிதர்களைத் தனிமைப்படுத்தி உள்ளது. தனிமை தண்டனையாக மாறிவிடும்போது மனநலப் பிரச்சினை ஏற்படுகின்றது. தனிமைப்படுத்துதல் என்பது மருத்துவக் காரணங்களுக்கானது என்றாலும் கூட தற்போது அது சமூக அளவில் ஒதுக்கி வைக்கப்படுதல் என்றாகி விடுகின்றது. வைரஸ் தொற்றானது ஒதுக்குதல் மற்றும் களங்கப்படுத்தல் என்பதையும் கூடவே பரவச் செய்கின்றது. நோய்த் தொற்றுக்கு ஆளாகும் ஒருவர் குற்றம் செய்தவர் போலப் பார்க்கப்படுகிறார். இந்தப் பொது சமூக அணுகுமுறை மாற்றப்பட வேண்டும்.

 

     குழந்தைகளுக்கான பிரச்சினைகள் ஒருவிதம் என்றால் முதியவர்களின் மனப் பிரச்சினைகள் வேறு விதமாக இருக்கும். எனவே ஒவ்வொருவருக்கும் வேறுவேறு விதமான பிரச்சனைகள் இருக்கும் என்றும் எல்லாவற்றையும் பொதுக் கண்ணாடி மூலம் பார்த்து தீர்க்க முடியாது என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்ந்தவர்கள் தப்பி ஓடுவதும் தற்கொலை செய்துகொள்வதும் உச்சகட்டமான மனநலக் கோளாறுகள் ஆகும். மனநலப் பாதிப்பை நாம் பெரும்பாலும் மருத்துவப் பிரச்சனையாகவோ நோயாகவோ எடுத்துக்கொள்வதில்லை. அதனால்தான் இந்தப் பெருந்தொற்றுப் பரவல் காலத்திலும் மனநலம் என்பது மேலோட்டமான கவனத்துடன் கடக்கப்பட்டு விடுகின்றது. ஆரம்ப கட்டத்திலேயே கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டுபிடித்தால் தீவிர நோய் நிலைமை ஏற்படாமல் தடுத்து விடலாம். அதுபோலத்தான் கொரோனா ஏற்படுத்தும் மன நெருக்கடிகளை ஆரம்பத்திலேயே எதிர்கொண்டு சமாளித்தால் மனநோய் என்ற நிலைக்கு போகாமல் தடுத்து விடலாம்.

இந்த நெருக்கடி காலகட்டத்தில் அரசு மன நலத்தைப் பேணுவதற்காகத் தொலைபேசி வழியே ஆற்றுப்படுத்தல் சேவைகளை வலுப்படுத்தியுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு அறையானது   ஆலோசனை மையமாகவும் செயல்பட்டு வருகிறது. மாநில அளவில் 104 என்ற எண், மாவட்ட அளவில் 1077 என்ற எண் ஆகியன உதவி எண்களாகச் செயல்பட்டு வருகின்றனமனநல பாதிப்பின் வீச்சையும் பரிமாணத்தையும் கவனத்தில் கொண்டு தமிழக அரசின் சுகாதாரத் துறையானது மாவட்ட வாரியாக மனநல மருத்துவர்கள்/உளவியலாளர்களின் மொபைல் எண்களையும் தொலைபேசி வழி ஆற்றுப்படுத்தல் சேவைகளுக்காக அறிவித்துள்ளது. ஏற்கனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட மனநல திட்டம் செயல்பட்டு வருகின்றது. இந்தக் காலகட்டத்தில் மனநல மனநல ஆலோசனைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

மக்களின் பொதுவான சந்தேகங்கள், வைரஸ் தொற்று, சிகிச்சை மற்றும் மருத்துவமனை தொடர்பான சந்தேகங்களைத் தீர்த்து வைத்தல், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற மருத்துவமனையில் சேர்பவர்களுக்கு முன்கூட்டியே ஆலோசனை வழங்குதல், தொற்று உள்ளோரின் குடும்பத்தாருக்கும் தொடர்பில் இருந்தவர்களுக்கும் ஆலோசனை என இந்த மனநல மருத்துவர்களும் உளவியலாளர்களும் 24 மணி நேரமும் இப்போது பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

 

     திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட மனநல மருத்துவர் டாக்டர் ஆர்.ரவிக்குமார் (98056318610) தனது மொபைல் எண்ணுக்கு வரும் அழைப்புகளையும் கையாளுகின்றார். ”கொரோனா தொற்றுப் பரவல் உள-சமூக பரிமாணத்தில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தி உள்ளது. எங்களுக்குப் பலவிதமான அழைப்புகள் வருகின்றன. காய்கறி மூலமாக கொரோனா பரவுமா என்பது முதல் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்பது வரையான அழைப்புகள் வருகின்றன. ஒவ்வொரு அழைப்பையும் அக்கறையுடன் கேட்டு தகுந்த ஆலோசனைகளை வழங்குகின்றோம். சமூக ஒதுக்கல் என்பது இப்போது அதிகரித்து வருகின்றது. இது தவிர்க்கப்படவேண்டும் மற்றும் தடுக்கப்படவேண்டும். கொரோன தொற்று சிகிச்சையில் உள்ளோருக்கு தினமும் கவுன்சிலிங் தருகிறோம்”, என்கிறார் ஆர் ரவிக்குமார்.

 

 கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மனநல மருத்துவர் டாக்டர் எஸ் மணிகண்டன் (9840129610)தொற்று ஏற்பட்டால் உடனே இறந்து விடுவோம் என்று பலரும் பயப்படுகின்றனர் ஆகவே முதலில் செய்ய வேண்டியது இதுவும் ஒரு தொற்று நோய்தான். இதையும் குணப்படுத்த முடியும். அதிக பாதிப்பு இல்லாமலேயே நீங்கள் குணமாகி வீடு திரும்ப முடியும் என்ற நம்பிக்கையை  தொற்றுள்ளோருக்கு ஏற்படுத்துவதுதான். பலருக்கும் இந்த நெருக்கடி காலம் தூக்கமின்மையை ஏற்படுத்தி இருக்கின்றது. எனவே நாங்கள் எங்களோடு தொடர்பு கொள்பவர்களை மனம் விட்டு பேச வைக்கிறோம். அடக்கப்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பை வெளிப்படுத்திவிட நாங்கள் உதவுகிறோம்,” என்கிறார்.

 

 

 கடலூர் மாவட்ட மனநலத் திட்டத்தின் மனநல மருத்துவர் டாக்டர் கே.சத்தியமூர்த்தி (9443379581) தனது மொபைலில் தினசரி சராசரியாக 10 முதல் 15 அழைப்புகள் வருவதாகவும் அவற்றுக்குத் தகுந்த ஆலோசனைகள் வழங்குவதாகவும் தெரிவிக்கின்றார். ”ஆரம்பக் கட்டத்தில் பயம், பதட்டம் அதிகமாக இருந்ததால் வைரஸ் குறித்த கேள்விகள் அதிகம் இருந்தன. இப்போது சிகிச்சை, தனிமைப்படுத்தல், புறக்கணிப்பு குறித்து அழைப்புகள் அதிகமாக வருகின்றன. எங்களது மனநலக் குழுவில் மனநல மருத்துவர், சமூகப் பணியாளர், உளவியல் நிபுணர் ஆகியோர் இணைந்து பணியாற்று கின்றனர்,” என்று டாகடர் சத்தியமூர்த்தி தெரிவிக்கின்றார்.

 

 விழுப்புரம் மாவட்ட மனநல திட்டத்தின் உளவியலாளர் திரு ஜே.குமார் (9385676325) ”சுறுசுறுப்பாக இருந்துவிட்டு இப்போது 24 மணி நேரமும் வீட்டில் இருக்கும்போது பலருக்கும் இனம்புரியாத கவலையும் பயமும் ஏற்படுகிறது. உச்சகட்டமாக எரிச்சல் ஏற்படுகிறது. இந்த மன உணர்வை வெளிப்படுத்தினால் உறவில் விரிசல்தான் ஏற்படும். இந்த இடத்தில்தான் எங்கள் ஆலோசனை முக்கியமானதாகின்றது. தொற்று ஏற்படுத்தும் மன அழுத்தத்தில் இருந்து மக்கள் விடுபட நாங்கள் உதவுகிறோம். ஒவ்வொரு தனிநபருக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஏற்றவாறு மனநல ஆலோசனையும் சிகிச்சையும் வழங்குகிறோம்,” என ஜே.குமார் தெரிவிக்கின்றார்.

 

 கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவல் தனிநபர் சார்ந்த பிரச்சனை அல்ல.  அது உலகளாவிய பிரச்சனை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சரியான தகவல்களைத் தெரிந்து கொண்டால் நமது சந்தேகங்கள் தெளிவடையும். தெளிவான சிந்தனை மனக்குழப்பத்தை ஏற்படுத்தாது. அளவுக்கதிமான தகவலைத் தெரிந்து கொள்வது என்பது அதிக குழப்பத்தை ஏற்படுத்தும். நாம் நேர்மறையான எண்ணத்துடன் கொரோனாவை  எதிர்கொள்ளவேண்டும். மன அழுத்தம் நமக்கு இருந்தால் அதில் இருந்து விடுபட பிறரிடம் மனம் விட்டு பேச வேண்டும்.  அப்படி பிறர் நம்மிடம் பேச முன்வரும்போது நாம் அக்கறையோடு கேட்கவேண்டும். தேவைப்பட்டால் தொலைபேசிவழி ஆற்றுப்படுத்தல் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும். ”கொரோனா எனது உடலைப் பாதிக்கலாம்; ஆனால் எனது மனதை அது பாதிக்காதுஎன்று மன உறுதியுடன் நாம் தொடர்ந்து செயல்படுவோம். கொரோனாவை வெல்வோம்.



(Release ID: 1637490) Visitor Counter : 1465