சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

சாமக்ர சிக்ஷா அபியான் - பொதுமுடக்கக் காலத்தின் போது மின்னணு கல்வியை மேம்படுத்துவதில் கவனம்

Posted On: 06 JUL 2020 6:20PM by PIB Chennai

கோவிட் நோய் பரவாமல் தடுப்பதற்காக , குழந்தைகளை நோயிலிருந்து பாதுகாப்பதற்காக, பள்ளிகளும், இதர கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதை அடுத்து, நமது கல்விமுறை புதிய சவால்களைச் சந்தித்து வருகிறது. மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் சாமக்ர சிக்ஷா அபியான் திட்டம் மழலையர் பள்ளி முதல் பிளஸ் 2 வரையிலான கல்வித் திட்டத்திற்கு அதிக கவனம் செலுத்தி வருகிறது. தரமான கல்வியை அளிப்பது மட்டுமல்லாமல், டிஜிட்டல் வழியில் கல்வி கற்பிப்பதற்கு இத்திட்டம் முக்கியத்துவம் அளிக்கிறது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் டிஜிட்டல் போர்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் கல்வி முறையில் நிச்சயம் ஒரு புரட்சி ஏற்படும். பள்ளிகள் திறக்கப்படுவதற்குத் தடை நீடிக்கப்பட்டுள்ளதால் இன்னும் நீண்ட காலத்திற்கு தொழில்நுட்ப அடிப்படையிலான கல்வி பெரும் பங்காற்றும். பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டு வரும் காலங்களிலும், குழந்தைகளையும், இளைஞர்களையும் நோய் பாதித்து விடாமல் தடுப்பதற்காக பள்ளிகளையும், கல்லூரிகளையும் திறப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு அறிவூட்டுவதற்கான ஒரு மிக முக்கிய கருவியாக இணைய வழிக் கல்வி செயல்படுகிறது. இதனால் இணையதளம் சிறந்த பயன்பாட்டைப் பெறுகிறது.

 

சாமக்ர சிக்ஷா அபியான் திட்டம் மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரையிலான பள்ளித் திட்டம் கொண்ட ஒருங்கிணைந்த தொகுப்புக் கல்வியை அளிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. சர்வ சிக்ஷா அபியான், ராஷ்டிரிய மாத்தியமிக் சிக்ஷா அபியான், ஆசிரியர் கல்வி ஆகிய மூன்று திட்டங்களையும் உள்ளடக்கியது சமக்ரா சிக்ஷா அபியான். பல்வேறு கட்ட கல்வி நிலைகளுக்கும், மாணவர்களை எளிதில் சென்றடையும் வகையிலும், அனைவருக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட தொலைவில் பள்ளி இருப்பது மட்டுமே அல்லாமல் பள்ளிகளில் குழந்தைகளைத் தக்க வைத்துக் கொள்கின்ற அளவிற்குப் போதுமான கட்டமைப்பு உள்ளதாகவும் பள்ளிகள் அமையவேண்டும். வகுப்பறைகள், கழிவறைகள், குடிநீர் வசதி, சிறப்புத் தேவைகள் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் போன்றவை இருக்கவேண்டும். இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் அனைத்துப் பள்ளிக் கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு வசதி இருக்கும் இந்தப் பள்ளிக் கட்டடங்களின் வரைபடங்களிலேயே சூரிய சக்தி உட்பட பல வசதிகளும் வடிவமைக்கப்படும். திருச்சிராப்பள்ளியில் ஏழு அரசுப்பள்ளிகளில் இத்திட்டத்தின்கீழ் சூரிய ஒளியிலான மின்சக்தி கிடைக்கும்.ச்சநல்லூரில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு சையத் முர்துசா அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் சோலார் பேனல்கள் பொருத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

 

தரமான கல்வி அளித்தல், மாணவர்களின் கற்றல் வெளிப்பாடு அதிகரித்தல், பள்ளிக்கல்வி பெறுவதில் உள்ள பாலின இடைவெளியையும், சமூக இடைவெளியையும் குறைப்பது, கல்வியின் அனைத்து நிலைகளிலும் அனைவரும் சமமாக இருப்பதை உறுதி செய்வது ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். ஆசிரியர்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு அதிக வலுவூட்டுவதன் மூலம் தரமான கல்வியை அளிப்பது இத்திட்டத்தின் முக்கியமான செயல்பாடாகும். ஆசிரியர்களுக்கும், பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டுக்கு வகை செய்வதும் இத்திட்டத்தின் கீழ் நடைபெறும். பெருந்தொற்று, பொது முடக்கம் ஆகியவை காரணமாக அறிவு பெறுவது நின்று விடக்கூடாது. பொதுமுடக்கம் காரணமாக கட்டாயமாக வீட்டிலேயே இருக்க வேண்டியுள்ளதால் மாணவர்கள் இணைய வழியில் சரியான முறையில் கல்வி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக மத்திய அரசு தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

 

 

 

மணச்சநல்லூர் மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி



(Release ID: 1636836) Visitor Counter : 398