கே.தேவி பத்மநாபன், கள விளம்பர அதிகாரி, திருச்சி
வேளாண் பயிர்களைத் தாக்கும் படைப் புழுக்களை அழிக்க, விதைப்புக்கு முன்பு ஆழமாக உழுவதை இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் ஐசிஏஆர் பரிந்துரைத்துள்ளது. கோவிட்-19 மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பது போல, இந்த படைப்புழுக்கள், வெட்டுக்கிளிகள் ஆகியவை பயிர்களை அழித்து, நமது வேளாண் முறையையே முடக்கிவிடும் அபாயம் கொண்டவை. கோவிட்-19 ஊரடங்கை சமாளித்து எழுவதற்கு, நாட்டுக்கு ஒரு எதிர்ப்பு சக்தியை வேளாண்மை அளித்துள்ளது. ஊரடங்கு பொதுமுடக்கத்திற்கு இடையிலும், அதிக உணவு தானியங்களை விளைவித்து, நாடு முழுமைக்கும் உணவு அளிக்கும் சேவையில் நாட்டுக்கு உறுதுணையாக நமது விவசாயிகள் உறுதியுடன் நிற்கின்றனர். நவம்பர் மாதம் வரை, ரேசன் அட்டைதாரர்களுக்கு, அரிசி அல்லது கோதுமை உள்ளிட்ட பொருள்கள் கூடுதலாக இலவசமாக வழங்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்புக்கு வடிவம் கொடுக்க விவசாயிகள் உழைத்து வருகின்றனர். இதற்கு, உரிய நேரத்தில் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆலோசனை வழங்குவது அவசிய தேவையாகும். நமது வேளாண் அதிகாரிகள் தொடர்ந்து கள ஆய்வுகளை மேற்கொண்டு, பயிர் மேலாண்மையில் ஏராளமான பிரச்சினைகளைச் சந்திக்கும் நமது விவசாயிகளுக்கு உதவுகின்றனர்.
பயிர்களை படைப்புழுக்கள் தாக்குதலில் இருந்து காப்பாற்ற, ஆழமாக உழுமாறு விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். மாநில வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனத்தின் (ஸ்டாமின்) இயக்குநர் மற்றும் வேளாண் கூடுதல் இயக்குநர் திரு. சங்கரலிங்கம், வேளாண் இணை இயக்குநர் திருமதி சாந்தி, துணை இயக்குநர் திரு. லட்சுமணசாமி, உதவி உயக்குநர் திரு.மோகன் ஆகியோர் படைப்புழுக்கள் மற்றும் அதன் மேலாண்மை குறித்து புள்ளம்பாடி வட்டாரம், கீழரசூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு விளக்கினர். கூடுதல் இயக்குநர் சங்கரலிங்கம், கோடை மழையைப் பயன்படுத்தி, விவசாயிகள் கோடை உழவைத் தொடங்குமாறு அறிவுறுத்தினார். ஆழமாக உழுவதன் மூலம், மக்காச் சோளத்தை தாக்கும் படைப்புழுக்களை அழிக்க முடியும். மேலும், இது நிலத்தின் தண்ணீர் உறிஞ்சு திறனை வலுப்படுத்தி, கோடைப் பயிர்களுக்கு உதவும்.
திருச்சியில், தரிசு நில வேளாண்மை மூலம், பருத்தி, மக்காச் சோளம் ஆகியவை 15000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. உதவி இயக்குநர் திரு.மோகன், புள்ளம்பாடி வட்டாரத்தில் கடந்த வாரம் நல்ல மழை பெய்தது என்றும், இது இந்த வட்டார விவசாயிகளுக்கு பயன் அளிக்கக்கூடியது என்றும் கூறினார். தமிழக நீடித்த தரிசுநில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், புள்ளம்பாடி வட்டாரத்தில், 3000 ஹெக்டேர் நிலப்பரப்பு இலக்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், கீழரசூர், மல்வாய், சதுர்ப்பகம், மேலரசூர் கிராமங்களைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும், உழவுப்பணியைத் தொடங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த மண்டலத்தில் கோடை உழவு மேற்கொள்ளும் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏக்கருக்கு தலா ரூ.500 மானியமாக வழங்கப்படுகிறது என வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உரத்துக்கு 50 சதவீத மானியமும், மக்காச்சோளப் பயிர்களைத் தாக்கும் படைப்புழுக்களை அழிக்க பூச்சி மருந்துகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில், வேளாண் அறிவியலும், அதன் உயர் தொழில்நுட்பச் சேவைகளும் மிக முக்கியமானவை. நமது விஞ்ஞானிகள் மற்றும் வேளாண் அதிகாரிகள், களத்தில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளைச் சமாளிக்க தொடர்ந்து தங்கள் அரும்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------