சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் விரிவாக்கம் குறித்த பிரதமரின் அறிவிப்புக்கு அனைவரின் வரவேற்பு.


பிரதமரின் ஏழைகள் மேம்பாட்டிற்கான உணவுத் திட்டத்தின் கீழ் 80 கோடி மக்கள் பயன்பெறுவார்கள்.

Posted On: 04 JUL 2020 7:06PM by PIB Chennai

ஊரடங்கு காலத்தில் எந்த வித வருமானமும் இல்லாத நிலையில் கொரோனா பெருந்தொற்று ஏழைகளையும் மிகவும் மோசமாகப் பாதித்துள்ளது. வளர்ச்சியின் வேகத்தை மீட்டெடுப்பதை நோக்கி நாடு திட்டமிட்ட வகையில் முன்னேறி வரும் நிலையில் இந்த ஊரடங்கு விலக்கல் காலம் மிகவும் முக்கியமானதாகும். ஏழைகள், பின்தங்கிய மக்களைப் பொறுத்தவரையில் உணவு என்பது மிகவும் அத்தியாவசியமான ஒரு தேவையாகும். ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு ஒவ்வொரு துறையும் மெதுவாக செயல்பாட்டுக்கு வந்து கொண்டிருந்த போதிலும் ஏதாவது ஒரு வேலைவாய்ப்பு கிடைக்கும் வரையில் ஏழைகள் மக்களுக்கு உணவு தேவைப்படுகிறது. எனவே நவம்பர் மாதம் வரையில் இலவச குடிமைப் பொருள்கள் வழங்குவது நீடிக்கப்படுகிறது என்ற பிரதமரின் சமீபத்திய அறிவிப்பு அவர்களுக்கு மிகப்பெரும் உதவியாக வந்து சேர்ந்தது. பிரதமர் ஏழைகள் மேம்பாட்டு உணவுத் திட்டத்தின் கீழ் 80 கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள். மாதந்தோறும் கூடுதலாக அவர்களுக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக. வழங்கப்படும். மேலும் கூடுதலாக அவர்களுக்கு மாதந்தோறும் ஒரு கிலோ பருப்பு வகைகளும் இலவசமாக வழங்கப்படும். தனது உரையில் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்ற கருத்தாக்கத்தின் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தியிருந்தார். பணி மாறுதலின் விளைவாக சொந்த ஊரிலிருந்து வெளியே செல்லும் அரசு ஊழியர்களுக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இது பெருமளவிற்குப் பயனளிக்கும். ஒரு நகருக்குள்ளேயே ஒரு வார்டில் இருந்து வேறொரு வார்டுக்கு குடிபெயர்ந்து செல்லுவோருக்கும் பெயர்வுத் திறன் கொண்ட இந்த ரேஷன் அட்டை பயனுள்ளதாக இருக்கும்.

 தமிழ்நாட்டில் ஜூலை 10ஆம் தேதியிலிருந்து ரேஷன் கடைகள் மூலமாக இலவச உணவுப் பொருள்கள் வழங்கப்படும். ரேஷன் கடைகளில் அதிகமான கூட்டத்தை தவிர்க்கும் வகையில் ஜூலை 6 முதல் 9ஆம் தேதி வரையில் ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களின் வீடுகளிலேயே டோக்கன்கள் வழங்கப்படும். தமிழ்நாட்டில் மார்ச் மாதத்திலிருந்தே அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களோடு ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு கிலோ சமையல் எண்ணெய் ஆகியவையும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

பொதுவிநியோக கடைகளின் மூலம் வழங்கப்படும் இலவச ரேஷன் பொருள்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் பராளி கிராமத்தைச் சேர்ந்த திருமதி ப்ரெசியா மேரி ரேஷன் கடைகளின் மூலம் இலவசமாக அரிசி வழங்குவதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். ஊரடங்கு காலத்தில் தங்களுக்கு வருமானம் ஏதும் இல்லாத நிலையில் இந்த உதவி உண்மையிலேயே பயனுள்ளதாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். தாங்கள் வாழ்வதற்காக வழங்கப்படும் இலவச அரிசியோடு கூடவே நிதியுதவியும் தரவேண்டும் எனவும் அவர் அரசை கேட்டுக் கொண்டார்.

கரூர் மாவட்டத்தின் பொய்யாமணி கிராமத்தைச் சேர்ந்த திருமதி எஸ். பட்டம்மாள் அரசின் உதவிக்கு நன்றி தெரிவித்ததோடு, பிரதமர் சமையல் எரிவாயுத் திட்டத்தின் கீழ் இலவசமாக எரிவாயு உருளை வழங்குவதற்காகவும் நன்றி தெரிவித்தார்.

நாட்டில் எவருமே பசியோடு இருக்கலாகாது. இந்த நேரத்தில் நல்லவர்கள் பலரும் முன்வந்து ஏழைகளுக்கு உணவிடுவதைக் காணும் போது மனம் நெகிழ்கிறது. கொரோனா பெருந்தொற்று நம் அனைவருக்குமே சவாலாக உள்ளது. இந்த சிக்கலான தருணத்தில் ஏழைகள் இதை எதிர்த்துப் போராடும் வகையில் அரசோடு இணைந்து அவர்களுக்கு உதவ வேண்டியது நமது கடமையாகும். அரிசி அல்லது கோதுமையோடு பருப்பு வகைகளையும் உள்ளடக்கிய இலவச உணவுப் பொருள்கள் வழங்குவது உண்மையிலேயே ஏழை மக்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். பிரதமர் ஏழைகள் மேம்பாட்டு உணவுத் திட்டம், பிரதமர் சமையல் எரிவாயுத் திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர், பெண்களுக்கான ஜன்தன் கணக்குகளில் ரூ. 500 வரவு வைப்பு, விவசாயிகளுக்கு கூடுதல் தவணையாக ரூ. 2000 ஆகிய அனைத்து நடவடிக்கைகளுமே ஏழைகளை நிமிர்ந்து நிற்க வைக்கும் என்பதோடு கொரோனா பெருந்தொற்றின் விளைவாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் சவாலையும் அவர்கள் எதிர்கொள்ள வழி வகுக்கும். மேலும் கொரோனா பெருந்தொற்றின் விளைவாக பிறப்பிக்கப்பட்ட  ஊரடங்கினை மக்கள் சமாளிக்கும் வகையில் சுயசார்பு மிக்க இந்தியா திட்டங்களின் கீழ் பல்வேறு  துறைகளின் மூலம் குறிப்பிட்ட திட்டங்களின் மூலம் மத்திய அரசு மக்களுக்கு உதவி செய்து வருகிறது.

=======(Release ID: 1636485) Visitor Counter : 117


Read this release in: English