சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

கோவிட் நோய்க்கு எதிராகப் போராடும் இந்தியா: சித்த மருத்துவ வழியில், கபசுரக் குடிநீர் நோய்க்கு எதிராக முன்னிலைப் போராட்டம் திருச்சி மண்டலத்தில் 6 டன் கபசுரக் குடிநீர் மருந்து விநியோகம்.

Posted On: 03 JUL 2020 6:38PM by PIB Chennai

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு உத்தியாக நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு ஆயுஷ் முறை மருந்துகளைப் பயன்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நோய் பரவாமல் தடுப்பதற்காக பொதுமுடக்கம் நீடிக்கப்பட்டு சமூக விலகியிருத்தல் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. கட்டுப்பாட்டு மண்டலங்கள், தனிமைப்படுத்தும் மையங்கள் உருவாக்கப்பட்டு, நோய் பாதிக்கப்பட்ட மண்டலங்களில் இருந்து, பிற மண்டலங்களுக்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆரோக்கியம் சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக கபசுரக் குடிநீர், பொதுமக்கள், சுகாதாரப் பணியாளர்கள், மாவட்ட அதிகாரிகள், காவல்துறையினர், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகிய அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது கபசுரக் குடிநீர் கோவிட் நோயைப் போக்குவதற்கான மருந்து அல்ல; ஆனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சுகாதார பானம் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் கோவிட் போன்ற நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

 

களத்தில் பணியாற்றும் அனைவரும் ஊடகவியலாளர்கள் உட்பட அனைத்துப் பணியாளர்களும், கொரோனா முன்னணிப் பணியாளர்களும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்காக, கபசுரக் குடிநீர் அருந்த வேண்டும் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி டாக்டர். எஸ். காமராஜ் கூறினார். பலரும் உரிய நேரத்தில் உறங்குவதில்லை; தேவையான அளவு ஓய்வு எடுப்பதில்லை என்று அவர் கூறினார். அரசால் தயாரிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் இலவசமாக விநியோகிக்கப்படும் கபசுரக் குடிநீர் சுகாதாரப் பொட்டலங்களைப் பெற்றுக்கொண்டு அனைவரும் கபசுரக் குடிநீர் பருக வேண்டும் என்று அவர் அறிவுரை கூறினார். 5 கிராம் கபசுர சூரணத்தை 240 மில்லி குடிநீருடன் கலந்து அது 60 மில்லி ஆகக் குறையும் வரை கொதிக்க வைத்து அதன் பின்னர் பருக வேண்டும். இந்தக் கபசுரக் குடிநீரை தினமும் காலையிலும் மாலையிலும் ஒரு முறை, வெறும் வயிற்றில் பருக வேண்டும். திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் பொதுமக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் 6 ஆயிரம் கிலோ கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவர் தெரிவித்தார். கபசுரக் குடிநீர் பருகுவதால் எந்த வித விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது; உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; கோவிட் நோய்க்கு எதிராகப் போராட உதவும் என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். இருதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள், கருவுற்ற பெண்கள் உட்பட அனைவரும் கபசுரக் குடிநீரைப் பருகலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 30 மில்லி கபசுரக் குடிநீர் பருகக் கொடுத்தால் போதுமானது.

 

சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகஞ்சோரிவர், அக்ரஹாரம், முல்லிவர், கடுக்காய் தோல், ஆடாதோடா இலைகள், கற்பூரவள்ளி இலை, சீந்தில் தண்டு வேர், நிலவேம்பு சமூலம், வட திருப்பி வேர், கோரைக்கிழங்கு உட்பட 15 மூலிகைகளால் தயாரிக்கப்பட்டது கபசுரக் குடிநீர்.

 

திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவமனையில் கோவிட்-19 நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுடன் டாக்டர்.காமராஜ் தலைமையிலான சித்த மருத்துவர்கள் குழு சமீபத்தில் கலந்துரையாடிது. அனைத்து மருத்துவர்களும் பாதுகாப்புக் கவச உடைகளை அணிந்து கொண்டு நோயாளிகளுடன் கலந்துரையாடி அவர்களுக்கு அறிவுரை கூறி, அவர்களின் அச்சத்தை அகற்றி அவர்களுக்கு ஊக்கம் அளித்தனர். திருச்சி அரசு மருத்துவமனையின் சிறப்பு வார்டில் உள்ள 19 நோயாளிகளுக்கு தினமும் இருவேளை கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது. அரியலூர் வாலாஜாபுரம் பகுதியில் தமிழக அரசு தலைமைக் கொறடா திரு. தாமரை ராஜேந்திரன், அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. வி. ரத்னா ஆகியோர் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கபசுரக் குடிநீர் ஏற்படுத்தும் நல்ல விளைவுகள் குறித்து சித்த மருத்துவ அதிகாரி டாக்டர்.காமராஜ் உரையாற்றினார். நோய்க்கு எதிராகப் போராடும் அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கபசுரக் குடிநீர் பருக வேண்டும் என்று மக்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

 

கோவிட்-19 நோய் பரவாமல் தடுப்பதற்கு அதிகாரிகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கோவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். முகக்கவசங்கள் அணிவது; தனிநபர் பாதுகாப்புக் கவச உடைகள் அணிவது போன்றவற்றின் மூலமாக நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் அதே சமயத்தில் அரசு அறிவுரையின் படி, கபசுரக் குடிநீர் போன்ற சுகாதார மருந்துகளை உட்கொள்வதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும் மிகவும் முக்கியமாகும்.

 

 

திருச்சி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவர்கள்

தமிழக அரசு தலைமைக் கொறடா திரு தாமரை ராஜேந்திரன், அரியலூரில் கபசுரக் குடிநீர் வழங்கினார்

திருச்சி அரசு மருத்துவமனையில் கோவிட்-19 வார்டில் நோயாளிகளுடன் கலந்துரையாடிய சித்த மருத்துவர்கள்



(Release ID: 1636229) Visitor Counter : 1246