சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

பொது இடங்களில் கைகழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும் - முன்னாள் பொது சுகாதார இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி வலியுறுத்தல்

Posted On: 03 JUL 2020 12:44PM by PIB Chennai

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். இதன் மூலம் 80% வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தலாம். அடிக்கடி கை கழுவும் பழக்கம் இல்லாத குளிர் பிரதேச நாடுகளில்தான் வைரஸ் தொற்று அதிகமாக உள்ளது. அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை மக்கள் கடைப்பிடிக்கும் காரணத்தால் இந்தியாவில் தொற்று குறைவாக உள்ளது. ஆகவே மக்கள் கூடுகின்ற பொது இடங்கள் அனைத்திலும் அரசு கைகழுவும் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். சேனிடைசர் பயன்படுத்துவது எதிர்பார்த்த பலனை தராது. பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிவது 10% கிருமித்தொற்றைக் குறைக்கும். அதேபோல் நாம் அடிக்கடி தொடுகின்ற பல்வேறு பொருட்களின் மேற்பரப்புகளைச் சுத்தம் செய்வது என்பது 10% கிருமித் தொற்றையும் குறைக்கும். ஆகவே அடிக்கடி கை கழுவுதல்(80%), முகக் கவசம் அணிதல்(10%), மேசை, கதவின் கைப்பிடி போன்ற மேற்பரப்பைச் சுத்தம் செய்தல்(10%) ஆகிய இந்த மூன்று நடவடிக்கைகள் வைரஸ் தொற்றைத் தடுக்கும் என்று தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்குனரகத்தின் முன்னாள் இயக்குனர் டாக்டர் .குழந்தைசாமி தெரிவித்தார்.

 

 புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகம் நேற்று காணொளிக் காட்சி மூலம் நடத்திய கோவிட்-19 விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய போது டாக்டர் குழந்தைசாமி இவ்வாறு தெரிவித்தார். கரோனா வைரஸ் ஊரடங்கினால் அடங்கியிருந்தது. இப்போது பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அவற்றிலிருந்து நாம் முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் ஏற்கனவே நோயுற்றோர் ஆகியோரை நாம்  பாதுகாக்கவேண்டும். இவர்கள் மக்கள் தொகையில் 40% இருப்பார்கள். மீதியுள்ள 60 சதவீதம் பேர் தைரியமாக வெளியில் செல்லலாம். இவர்களுக்கு ஒருவேளை வைரஸ் தொற்றினாலும் அறிகுறி இல்லாமலேயே குணமாவார்கள். அல்லது மருத்துவச் சிகிச்சையில் குணமாகி விடுவார்கள். இவர்களில் இறப்பு விகிதம் மிகக் குறைவாகவே இருக்கும். எனவே பாதுகாக்க வேண்டியவர்களை வீட்டிலேயே பாதுகாத்துக் கொண்டு மற்றவர்கள் வெளியில் செல்லலாம் என்று டாக்டர் குழந்தைசாமி மேலும் தெரிவித்தார்.

 

 வைரஸ் பரவலை நம்மால் முழுவதுமாகத் தடுத்து விட இயலாது. ஆனால் தற்காப்பு நடவடிக்கைகளைக் கையாண்டால் வைரஸ் பரவும் வேகத்தைக் குறைக்கமுடியும். நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும். எந்த விதமான காய்ச்சல் ஏற்பட்டாலும் மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும். வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதானால் பல்ஸ் ஆக்சிமீட்டர் பயன்படுத்தி ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மூச்சுத்திணறல் ஏற்பட்ட பிறகு சிகிச்சைக்கு வருவது சிக்கலாக இருக்கும்.  ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையத் தொடங்கும்போதே மருத்துவமனைக்குச் சென்று விட்டால் தீவிர நோய்  நிலைமை ஏற்படுவதைத்  தவிர்த்து விடலாம் என்று டாகட் குழந்தைசாமி மேலும் தெரிவித்தார்.

 

சென்னையில் உள்ள மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இணை இயக்குனர் திரு ஜெ. காமராஜ் இந்த மெய்நிகர் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். மக்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது இப்போது சாத்தியமில்லை என்பதனால் நாங்கள் இணையம் வழி கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்து வருகிறோம் என்று காமராஜ் குறிப்பிட்டார்.

 

 புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலக உதவி இயக்குனர் முனைவர் தி.சிவக்குமார் கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இது போன்ற நிகழ்ச்சிகள் கொரோனா குறித்த அறிவியல்பூர்வமான தகவல்களைத் தெரிந்து கொள்ள உதவுவதோடு வதந்திகள் மற்றும் பொய்ச்செய்திகளைத் தவிர்க்க உதவும் என்று சிவக்குமார் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு டாக்டர் குழந்தைசாமி தகுந்த பதில்களை எடுத்துரைத்தார்.

***


(Release ID: 1636097) Visitor Counter : 238