சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

மகளிர் சுயஉதவிக் குழுவினரின் வாழ்வாதாரத்திற்காக கோவிட் சிறப்புக் கடன்

Posted On: 29 JUN 2020 3:35PM by PIB Chennai

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலும் பலகட்டங்களாகச் செயல்படுத்தப்பட்டு  வரும் ஊரடங்கும் மக்களின் வாழ்வாதாரங்களைப் பெரிதும் பாதித்துள்ளன.  அதிலும் குறிப்பாக மகளிரின் வாழ்வாதாரம் சீர்குலைந்துள்ளது.  சிறுதொழில்களில் ஈடுபட்டு வந்த பெண்கள் இந்தக் காலகட்டத்தில் அந்தத் தொழில்களைச் செய்ய முடியாமல் முடங்கிப் போய் உள்ளனர்.  நகரப் பகுதி மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் அவர்களுக்கு வங்கிகள் மூலமாக கோவிட் சிறப்புக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. 

 

புதுச்சேரி சாரம் பகுதியில் இந்தியன் வங்கி சார்பில் 2008ஆம் ஆண்டு முதல் சுயஉதவிக் கடன் சிறப்புக் கிளை இயங்கி வருகிறது.  அனைத்து மகளிர்களுக்கும் சிறுதொழில் மூலம் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கு இந்தக் கிளை கடன்களை வழங்கி வருகிறது.  தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகிய இரண்டின் கீழும் மகளிர்களுக்கு இந்தக் கிளையில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. 

 

நகர்ப்புற ஏழைகள் மற்றும் நகர்ப்புறத்தில் வீடற்றவர்கள் ஆகியோரின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக 2013ல் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் தொடங்கப்பட்டது.  தொழில் திறன்களில் பயிற்சி அளித்தல் மற்றும் சுயதொழில் தொடங்க உதவுதல் ஆகியன இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.  இந்த இயக்கம் மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. 

 

தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் 2011ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  ஊரகப் பகுதிகளில் உள்ளவர்களை அதிலும் குறிப்பாக மகளிர்களை சுயஉதவிக் குழுக்களாக கட்டமைத்து சிறு சிறு தொழில்கள் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுதான் இந்த இயக்கத்தின் நோக்கம் ஆகும்.  இன்று வரை இந்த இயக்கத்தின் மூலம் 53 லட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பலவிதமான உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.  இந்த கோவிட்-19 நெருக்கடி காலகட்டத்தில் மகளிர் குழுக்களின் பணி சாதனைக்குரியதாக உள்ளது.  இதுவரை மகளிர் குழுக்களைச் சேர்ந்தவர்கள் சுமார் 16 கோடியே 51 லட்சம் முகக்கவசங்கள் தயாரித்து உள்ளனர்.  அதேபோன்று  சுமார்  5 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களையும் சுமார் 5 லட்சம் லிட்டர் சேனிடைசரையும் தயாரித்து உள்ளனர்.

 

 புதுச்சேரியில் அரியாங்குப்பம் ஒன்றியத்தில் 40 கிராமப் பஞ்சாயத்துகளில் 1099 மகளிர் சுயஉதவிக் குழுக்களும் வில்லியனூர் ஒன்றியத்தில் 34 கிராமப் பஞ்சாயத்துகளில் 967 மகளிர் சுயஉதவிக் குழுக்களும் வங்கியின் மூலம் உதவி பெற்று வருகின்றன.

 

இந்தியன் வங்கியின் சுயஉதவிக்குழு கடன் சிறப்புக் கிளையின் மேலாளர் க.ஆர்த்தி தங்கள் வங்கியின் மூலம் 1200 குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும் ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க தற்போது சகாய கோவிட் சிறப்புக் கடன்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.  தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கு பத்தாயிரம் ரூபாயும் அதே போன்று தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஒருவருக்கு ஐயாயிரம் ரூபாயும் கடனாக வழங்கப்படுகிறது.  கடன் பெற்றதில் இருந்து முதல் 6 மாதங்களுக்கு தவணை செலுத்த வேண்டாம்.  இந்த 2 பிரிவுகளிலும் எங்கள் கிளையின் மூலம் இதுவரை ரூ.44.5 லட்சம் கோவிட் சிறப்புக் கடனாக வழங்கப்பட்டு உள்ளது என்று ஆர்த்தி மேலும் தெரிவித்தார். 

 

தர்மாபுரியைச் சேர்ந்த தங்கத்தாமரை மகளிர் குழுவின் உறுப்பினர் ச.விஜயசுந்தரி தடைபட்டுப்போன பால் வியாபாரத்தை மீண்டும் தொடங்க ரூ.5,000 கோவிட் கடனாக பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.  அதேபோன்று நெல்லித்தோப்பு பெரியார் நகரைச் சேர்ந்த வசந்தம் ரோஜா மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர் சு.கலைச்செல்வி, ”நான் இட்லி மாவு அரைத்து விற்று வந்தேன்.  கொரோனாவால் என் தொழில் பாதிக்கப்பட்டது.  இப்போது தளர்வுக் காலத்தில் மீண்டும் மாவு விற்கத் தொடங்கினேன்.  தொழிலை விரிவுபடுத்த வங்கியின் கொரோனா கடன் உதவியாக இருந்தது”, என்று தெரிவித்தார். 

 

பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வாசுகி மகளிர்குழு உறுப்பினர் உ.மாதவி அரிசி வியாபாரம் செய்வதற்காக இந்தக் கடனைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.  அதே பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அருள்ஜோதி மகளிர்குழு உறுப்பினர் கி.வெண்ணிலா தன் வீட்டிலேயே அழகுக்கலை நிலையம் நடத்தி வருவதாகவும் ஊரடங்கால் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.  தற்போது இந்த தளர்வுக்காலத்தில் வங்கி தந்த கொரோனா கடனைப் பயன்படுத்தி தொழிலைப் புதுப்பித்து உள்ளதாகவும் தெரிவித்தார். 

WhatsApp Image 2020-06-29 at 9.18.57 AM.jpeg

.ஆர்த்தி

கிளை மேலாளர்

இந்தியன் வங்கி சுய உதவிக்குழு கடன் சிறப்புக் கிளை

புதுச்சேரி

WhatsApp Image 2020-06-29 at 9.19.48 AM.jpeg

.விஜயசுந்தரி

தங்கத் தாமரை மகளிர் குழு

உறுப்பினர்

தருமாபுரி

WhatsApp Image 2020-06-29 at 9.20.15 AM.jpeg

சு.கலைச்செல்வி

வசந்தம் ரோஜா மகளிர் குழு உறுப்பினர்

நெல்லித்தோப்பு

WhatsApp Image 2020-06-29 at 9.20.45 AM.jpeg

.மாதவி

வாசுகி மகளிர் குழு உறுப்பினர்

பிள்ளையார்குப்பம்

WhatsApp Image 2020-06-29 at 9.21.12 AM.jpeg

கி.வெண்ணிலா

அருள்ஜோதி மகளிர் குழு உறுப்பினர்

பிள்ளையார்குப்பம்

 


(Release ID: 1635109) Visitor Counter : 582