சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஹட்கோவின் 2019-2020-ஆம் ஆண்டில் நிகர லாபத்தில் 45 விழுக்காடு வளர்ச்சி
Posted On:
29 JUN 2020 3:32PM by PIB Chennai
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி நிறுவனமான ஹட்கோ தனது பொன்விழா ஆண்டான 2019-20-ல், நிகர லாபத்தில் 45 விழுக்காடு வளர்ச்சியை எட்டி, சிறப்பான சாதனை புரிந்திருப்பதாக ஹட்கோவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு எம் நாகராஜ் தெரிவித்துள்ளார். 2019-20-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை முடிவுகளை வெளியிட்ட அவர், 2019-20-ல் நிகர லாபம் ரூ.1,708.42 கோடியை எட்டி இதுவரை எட்டப்படாத சாதனையை படைத்திருப்பதாகவும், அவர் கூறியுள்ளார். 2018-19-ன் நிகர லாபம் ரூ.1,180.15 கோடி மட்டுமே.
2018-19-ல் ரூ.10,955.77 கோடியாக இருந்த ஹட்கோவின் நிகர மதிப்பு, 2019-20-ல் 13 விழுக்காடு வளர்ச்சி அடைந்து ரூ.12,343.49 கோடியை எட்டியுள்ளது. நிகர மொத்த வருவாயும், 35 விழுக்காடு வளர்ச்சியடைந்து ரூ.7,571.64 கோடியாக உள்ளது, 2018-19-ல் இந்தத் தொகை ரூ.5,591.22 கோடி மட்டுமே.
பங்குதாரர்களுக்கு, இதுவரை இல்லாத உயர்ந்த அளவான, ஒரு பங்குக்கு ரூ.3.10 என்ற விகிதத்தில் ஈவுத்தொகை வழங்குவதற்கு ஹட்கோ வாரியம் ஒப்புதல் அளித்திருப்பதாக ஹட்கோவின் இயக்குநர் (நிதி) திரு டி குகன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மார்ச்சில் அளிக்கப்பட்ட இடைக்கால ஈவுத்தொகையான, ஒரு பங்குக்கு ரூ.0.75-ம் இதில் அடங்கும். இந்த நிறுவனம் பரிந்துரைத்த மொத்த ஈவுத்தொகை ரூ.620.59 கோடி ஆகும். கடந்த ஆண்டு இது ரூ.165.16 கோடி மட்டுமே.
ஹட்கோவின் நிகர வாராக்கடன் 0.19 விழுக்காடு, இது, இதுவரை இல்லாத அளவில் குறைவான விகிதமாகும். 2019-20-ல் ஹட்கோ நிறுவனம், பிரதமரின் வீட்டு வசதித்திட்டம் (நகர்ப்புறம்), விரைவுச் சாலைகள் மற்றும் குடிநீர் விநியோகத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க அதிக முக்கியத்துவம் அளித்தது. இந்தத் தகவலை புதுதில்லியில் உள்ள ஹட்கோ அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
---
(Release ID: 1635105)
Visitor Counter : 131