PIB Headquarters

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதரவு.


தமிழ்நாட்டில் 13.35 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1000 வழங்கப்படுகிறது; நாடு முழுவதும் ஏழை மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1000 பரிவுத் தொகை.

Posted On: 23 JUN 2020 5:58PM by PIB Chennai

கோவிட்-19 பெருந்தொற்றானது சமுதாயத்தில் பல தரப்பு மக்களுக்கும் பலவிதமான நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் உருவாக்கியுள்ளது.  ஒவ்வொரு குடிமக்களையும் இது பாதித்துள்ள போதிலும், குறிப்பாக மாற்றுத் திறனாளிகள் தனி வகைப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.  உடல்ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அவர்களுக்கு பிறரின் உதவி தேவைப்படுவதால் மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசேஷமானவையாக இருக்கின்றன.  ஊரடங்கு காலத்தில் பொதுப் போக்குவரத்து மற்றும் புறநகர் ரெயில்கள் இல்லாததால், அவர்கள் பயணம் மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டனர்.  ஊரடங்கின் போது மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் வரத்தேவை இல்லை என்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரதம மந்திரி கரீப் கல்யாண் நிவாரணத் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் மூன்று கோடி ஏழை மாற்றுத்திறனாளிகள், ஏழை விதவைகள் மற்றும் ஏழை குடிமக்களுக்கு தலா ரூ.1,000 பண உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.  மேலும் அரசு வழங்கியுள்ள அடையாள அட்டை வைத்துள்ள 13.35 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கும் தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார். கோவிட்-19 பண உதவியை மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.  திருச்சிராப்பள்ளியில் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று 1000 ரூபாய் வழங்கும் பணி ஜுன் 25 முதல் தொடங்குகிறது.

மாற்றுத் திறனாளிகள் சிரமம் அனுபவிப்பார்கள் என்பதை உணர்ந்த அரசு பரிவுத் தொகையை அவர்களின் வீடுகளுக்கே சென்று விநியோகிக்க ஏற்பாடு செய்துள்ளது.  பணம் வழங்க வரும் அலுவலரிடம் மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய மாற்றுத் திறனாளி அடையாள அட்டையின் ஒரிஜனல் அட்டையை காண்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் அவர்கள் தங்களைப் பற்றிய விவரங்கள், கல்வித்தகுதிகள், வேலை செய்வது குறித்த விவரங்கள், பிரத்யேக ஊனத்திற்கான அடையாள எண் – யுடிஐடி மற்றும் அடையாள அட்டை குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். கோவிட்-19 உதவித்தொகையான ரூ.1000 தொகையை வழங்கிய பிறகு பதிவேட்டில் முத்திரை இடப்படும்.  இந்தத் தொகையைப் பெறுவதில் பிரச்சினை ஏதாவது இருந்தால் மாற்றுத் திறனாளிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட நலவாழ்வு அதிகாரியைத் தொடர்பு கொள்ளலாம்.  மாற்றுத் திறனாளிகள் பிரத்யேக ஊன அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்கலாம்.  ஸ்வாவ்லம்பன் அடையாள அட்டையை பெறுவதற்கு தனிநபர் விவரங்கள், ஊனத்தின் விவரங்கள், பணிபுரியும் வேலையின் விவரங்கள் மற்றும் அடையாள விவரங்களை ஆன்லைனில்  www.swavlambancard.gov.in. என்ற வலைத்தளத்தில் சமர்ப்பிக்கலாம்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளின் படி கோவிட்-19 தொடர்பான தகவல்கள் மற்றும் விழிப்புணர்வுப் பிரச்சார விளக்கப்பிரசுரங்கள் அனைத்தும் மாநில மொழிகளில் கிடைக்கச் செய்யவேண்டும்.  மேலும் பார்வையற்ற நபர்களுக்காக பிரைல் வடிவத்திலும் ஒலிநாடாக்களாகவும் இவைத் தரப்பட வேண்டும்.  கேட்புத்திறன் இல்லாதவர்களுக்கு இவை சப்-டைட்டிலுடன் கூடிய காட்சிப்படங்களாகவும், சைகை மொழி விளக்கத்துடனும் தரப்பட வேண்டும்.  தனிமைப்படுத்தி வைத்திருத்தலின் போது பார்வையற்ற நபர்களுக்கும் மூளைச் செயல்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அடிப்படை ஆதார சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய உதவியாளர் இருக்க வேண்டும். அரசுத்துறை மற்றும் தனியார் துறை இரண்டிலும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்.  மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்கின்ற மனஅழுத்தம் மற்றும் பதற்றத்தைப் போக்குவதற்கு இணைய வழி ஆலோசனை வழங்கப்பட வேண்டும். 

திருச்சிராப்பள்ளியில் இருக்கின்ற திரு. கிருஷ்ணன் மாற்றுத் திறனாளிகளுக்கு பண உதவி வழங்குவதாக அரசு எடுத்துள்ள முடிவினை வரவேற்கிறார்.  மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க கூடுதலான நிதிஉதவி அளிக்க வேண்டும் என்று அவர் அரசை வலியுறுத்துகிறார்.  திருச்சியைச் சேர்ந்த ஷோபா கோவிட்-19 ஊரடங்கின் போது மாற்றுத்திறனாளிகள் பல்வேறு விதமான பிரச்சினைகளை எதிர்கொண்டனர் என்றும், மாற்றுத்திறனாளிகள் குடியிருக்கும் அடுக்ககங்களில் வீட்டு வேலைகளுக்கு அவர்களுக்கு உதவி செய்ய வரும் பணியாட்களை முறையாகப் பரிசோதனை செய்த பிறகு குடியிருப்பு நலச் சங்கங்கள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து விதமான உதவிகளும் தேவைப்படுகின்றன.  கோவிட்-19 ஊரடங்கின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து மீண்டு வர அவர்களுக்கு உதவுவது குடிமக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.

 

*****



(Release ID: 1633692) Visitor Counter : 401


Read this release in: English