PIB Headquarters

பிரதம மந்திரி பயிர் பாதுகாப்புத் திட்டம் – விளைச்சல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல்.

Posted On: 22 JUN 2020 4:07PM by PIB Chennai

இயற்கையின் பல்வேறு வகையான இடர்பாடுகளை எதிர்கொள்கின்ற விவசாயிகள் இந்த முறை கவலை கொள்வதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது.  ஆம். கோவிட்-19 காரணமாக அமலாக்கப்பட்ட ஊரடங்கானது, தீவிரமான பின்விளைவுகளோடு நமது விவசாயிகளின் வாழ்க்கையைப் பாதித்துள்ளது.  எனினும் மத்திய அரசின் பிரதம மந்திரி கரீப் கல்யாண் திட்டம் மற்றும் சுயசார்பு பாரதம் ஆகிய குறிப்பிட்ட துறைசார்ந்த நிதி உதவித் திட்ட நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இந்தத் திட்டங்கள் விவசாயிகள் உள்ளிட்ட ஏழைகளின் துயரைப் போக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளன.  இதனோடு கூடுதலாக மத்திய அரசாங்கம் வேதனையில் இருக்கின்ற விவசாயிகளுக்கு உதவி செய்யும் வகையில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையிலும் பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பில் இருந்து அவர்களைக் காக்கும் வகையிலும் மறுவடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டின் தொடக்கத்தில் மத்திய அமைச்சரவை 3 ஆண்டுகளுக்கு பயிர்க் காப்பீட்டுக்கான ஒதுக்கீட்டை காப்பீட்டு நிறுவனங்களுக்கு அனுமதித்திருந்தது. சராசரி பயிர் விளைச்சலுக்கான குறைந்தபட்ச ஆதார விலையின் அடிப்படையில் மாவட்ட அளவில் எவ்வளவு  நிதி உதவி அளிக்கலாம் என்பதை நிர்ணயிக்கும் வாய்ப்பு மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டது.  மத்திய அரசின் மானியம் நீர்ப்பாசனம் இல்லாத பயிர்களுக்கு 30 சதவிகிதமாகவும் நீர்பாசனப் பகுதிகளுக்கான மானியம் 25 சதவிகிதமாகவும் இருக்கும்.  இந்த மானியம் அளித்தல் தற்போதைய காரீஃப் பருவத்தில் இருந்து செயல்படுத்தப்படுவதால், விவசாயிகள் வேளாண் உற்பத்தியில் ஏற்படும் ஆபத்துக் காரணிகளை சமாளித்துக் கொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் சென்னை நீங்கலாக, அனைத்து மாவட்டங்களிலும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2016இல் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.  இந்த நிதி ஆண்டில் இருந்து விவசாயிகள் அதிலும் குறிப்பாக வங்கிக்கடன் பெற்றுள்ள விவசாயிகள் தன்னார்வமாக இந்தப் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர முடியும்.  மேலும் பிராந்திரயத்திற்கு பிராந்தியம் மாற்றங்கள் இருப்பதால் பயிர்க் காப்பீடு என்பது மாவட்ட அளவிலான கணக்கீட்டின் அடிப்படையிலேயே அமையும்.

திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை இந்த காரீஃப் பருவத்தில் 116 வருவாய் கிராமங்களில் நெல்லும், 152 கிராமங்களில் நிலக்கடலையும், 130 கிராமங்களில் பருப்புகளும், 145 கிராமங்களில் பருத்தியும் பயிரிடப்பட்டுள்ளது.  ஒட்டுமொத்தமாக மாவட்டத்தில் உள்ள 543 வருவாய் கிராமங்களில் பயிரிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  மேலும் 25 பிகாக்களில் மக்காச்சோளமும் 11 பிகாக்களில் சிறுதானியங்களும் பயிரிடப்பட்டுள்ளன.  விவசாயிகள் தாங்கள் பயிர்கடன் பெற்றுள்ள வங்கிகள் மூலமாகவோ அல்லது பொதுச்சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது முதன்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ தங்களது பயிர்களை பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து கொள்ளலாம்.  காரீஃப் பருவத்தில் நெல்லுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.674 என்ற விகிதத்தில் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு முன்பு பணம் செலுத்தி காப்பீடு எடுத்துக் கொள்ளலாம்.  அதே போன்று பருப்புகள் பயிரிட்டுள்ள விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.327 என்ற விகிதத்தில் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன்பு பணம் செலுத்தி காப்பீடு எடுத்துக் கொள்ளலாம்.  இதே செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன்பு மணிலா பயிரிட்டுள்ள விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.540 என்ற விகிதத்தில் பணம் செலுத்தி காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். ஆகஸ்ட் 16க்கு முன்பு பருத்தி பயிரிட்டுள்ள விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.352 என்ற விகிதத்தில் பணம் செலுத்தி காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். அதே போன்று மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.215 என்ற விகிதத்தில் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன்பு பணம் செலுத்தி காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். அதே போன்று சிறுதானியங்கள் பயிரிட்டுள்ள விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.189 என்ற விகிதத்தில் பணம் செலுத்தி செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன்பு காப்பீடு எடுத்துக் கொள்ளலாம் என விவசாயத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்தத் திட்டத்தின் கீழ் நெல், பருப்புகள், நிலக்கடலை, சோளம் மற்றும் சிறுதானியங்களுக்கான காப்பீட்டுத் தொகையில் 2 சதவிகிதம் மட்டும் செலுத்த வேண்டும்.  பருத்திப் பயிர்களுக்கான மொத்தக் காப்பீட்டுத் தொகையில் 5 சதவிகிதம் செலுத்தினால் மட்டும் போதும்.

கரூர் மாவட்டத்தில் காரீஃப் பருவத்திற்கு விவசாயிகள் பருப்புகள், நிலக்கடலை, வாழை, மரவள்ளி, சின்ன வெங்காயம், மஞ்சள் மற்றும் தக்காளி போன்ற பயிர்களுக்குக் காப்பீடு எடுத்துக் கொள்ளலாம்.  விவசாயிகள் கூட்டுறவு வேளாண்மை சங்க வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து பயிர்க்காப்பீடு பெறுவதற்கு பதிவு செய்து கொள்ளலாம்.  கரூர் மாவட்டத்தில் பயிர்ப் பாதுகாப்புக் காப்பீட்டுக்குப் பதிவு செய்வதற்கான கடைசி நாள் செப்டம்பர் 15 ஆகும்.  2018-19 நிதி ஆண்டில் கரூர் மாவட்டத்தில் பயிர்க் காப்பீட்டுக்காகப் பதிவு செய்திருந்த 3,842 விவசாயிகளுக்கு விளைச்சல் பாதிப்பை சமாளிப்பதற்காக ரூ.8.91 கோடி காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் அரசின் திட்டங்களை முறையாகப் பயன்படுத்தி பலன் பெறுவதற்கு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வைப் பெற வேண்டும்.  பயிர் விளைச்சல் பாதிப்பில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்க அரசு எப்பொழுதும் முன்னணியில் நிற்கிறது.  கனமழை அல்லது வறட்சி போன்ற இயற்கை இடர்களால் ஏற்படுகின்ற இழப்பின் வலியில் இருந்து விவசாயிகள் ஆறுதல் பெற பயிர்க் காப்பீடானது உதவுகிறது.

 

 

நெல் வயல், திருச்சிராப்பள்ளி.

 

நிலக்கடலைப் பயிர், திருச்சிராப்பள்ளி.

 

சோளப்பயிர் சாகுபடி, திருச்சிராப்பள்ளி.

 



(Release ID: 1633362) Visitor Counter : 1503


Read this release in: English