PIB Headquarters

பொதுமக்களிடம் மூலிகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மருத்துவ மூலிகை புகைப்படப் போட்டி

Posted On: 21 JUN 2020 11:51AM by PIB Chennai

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கவுன்சிலின்கீழ் செயல்படும் லக்னெளவில் உள்ள மத்திய மருத்துவ மற்றும் நறுமண மூலிகைகள் நிறுவனம் தேசிய அளவில் மூலிகை புகைப்படப் போட்டியை அறிவித்துள்ளது.

இந்தியா இயற்கை வளம் செறிந்த நாடாகும். இங்கு சுமார் 18,000 பூக்கும் தாவரங்கள் உள்ளன. இதில் 7000 க்கும் அதிகமான தாவரங்கள் மருத்துவப் பயன்பாடு கொண்டவை என்று இந்திய மருத்துவ முறைகளின் நூல்கள்/ஆவணங்களிலும் நாட்டார் வழக்காறுகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய மருத்துவத் தாவரங்கள் தகவல் தரவு தொகுப்பின்படி 7263 தாவரவியல் பெயர்கள் பட்டியிலப்பட்டுள்ளன. தமிழரின் பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவ முறையில் மட்டுமே 2559 தாவரவியல் பெயர்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில்1840 மூலிகைத் தாவரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மூலிகை என்றவுடனேயே மலையும் காடும்தான் நமது நினைவுக்கு வரும்.  ஆனால் ஒரு கிராமத்தில் சுமார் 120 மூலிகைத் தாவரங்கள் உள்ளன என்பது நமக்கு ஆச்சரியமான தகவலாகவே இருக்கும்.  கிராமத்தின் இந்த மூலிகைகள்தான் கிராம மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தியதோடு நீண்ட ஆயுளையும் கொடுத்தன. மூலிகைகளை அடையாளம் காணவும் அவற்றின் மருத்துவப் பயன்பாட்டை அறிந்து பயன்படுத்தவும் நம் முன்னோர்களுக்குத் தெரிந்து இருந்தது. ஆனால் இன்று கிராமத்தில் பலருக்கும் பத்து மூலிகைக்கு மேல் தெரிவதில்லை. வாழ்க்கை முறை மாற்றமும் உணவு மாற்றமும் நம்மை மூலிகைகளிடம் இருந்து அந்நியப்படுத்தி விட்டன.

இப்போது கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் சூழல் நம்மை மீண்டும் பாரம்பரியமான முறைகள்மீது நமது பார்வையைத் திருப்பி உள்ளது. பாரம்பரியமான உணவும் பாரம்பரிய சித்த மருந்துகளும் கொரோனா எதிப்புக்கு உதவுவது இப்போது தெரிய வருகின்றது.  இந்தச் சூழலில்தான் மத்திய மருத்துவ மற்றும் நறுமண மூலிகைகள் நிறுவனம் தேசிய அளவில் மூலிகை புகைப்படப் போட்டியை அறிவித்துள்ளது.

இந்தப் புகைப்படப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த  பொழுதுபோக்கு புகைப்படக் கலைஞர்களும் தொழில்முறைப் புகைப்படக் கலைஞர்களும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு இல்லை. போட்டியின் மையக்கருத்து “ உங்கள் மருத்துவ/நறுமண தாவரத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்” என்பதாகும். ஒருவர் ஒவ்வொரு பிரிவிலும் மூன்று புகைப்படங்களைப் போட்டிக்கு அனுப்பலாம். உள்நாட்டு மூலிகைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். புகைப்படத்துடன் மூலிகையின் லத்தீன் பெயர், பிராந்திய மொழிப் பெயர் மற்றும் அதன் மருத்துவ குணம் குறித்து 20-30 வார்த்தைகளில் விளக்கம் சேர்த்து அனுப்ப வேண்டும். ஒரிஜினல் டிஜிட்டல் இமேஜ் (ஜேபெக்/டிஃப்) மட்டுமே ஏற்கப்படும். ஒவ்வொரு புகைப்படமும் 3எம்பி அளவுக்கு குறையாமல் இருக்க வேண்டும். புகைப்படத்தை pc@cimap.res.in   என்ற மெயிலுக்கு இது என்னால் எடுக்கப்பட்ட சொந்தப்படம் என்ற உறுதிமொழியுடன் அனுப்ப வேண்டும். போட்டிக்குப் படங்கள் அனுப்பக் கடைசி நாள் 30.6.2020 ஆகும். போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் புகைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000 மூன்றாம் பரிசாக ரூ.2,000 வழங்கப்படுவதோடு தலா ரூ.1,000 வீதம் 10 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும்.  விருது பெறுபவரின் படங்களுக்கான காப்புரிமை படம் எடுத்தவருக்கே உரியதாகும்.  விருது பெற்ற புகைப்படங்களை நிறுவனம் விளக்கப் பிரசுரங்களிலும் பிரச்சாரத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளும். 

”மூலிகைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் தற்போது குறைந்து கொண்டே வருகிறது.  எனவே ஒவ்வொரு மூலிகையையும் அடையாளம் கண்டு அதன் மருத்துவ குணத்தை அறிந்து பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் மருத்துவ மற்றும் நறுமணத் தாவரங்கள் நிறுவனம் புகைப்பட போட்டியை அறிவித்து உள்ளது.  மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிரினங்களுக்கும் மூலிகைகள் பயன்படுகின்றன.  நம்மைச் சுற்றி கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, நிலவேம்பு, சீந்தில் போன்ற மிக முக்கியமான மூலிகைகள் உள்ளன.  ஆனால் நமக்கு அவற்றின் பயன்கள் குறித்து எதுவும் தெரிவிதில்லை.  இந்தப் புகைப்பட போட்டியானது மக்களிடையே மூலிகை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்” என்று புதுச்சேரி அரசின் இந்திய மருத்துவமுறை மற்றும் ஹோமியோபதி இயக்குனரகத்தின் ஒருங்கிணைப்பு அலுவலர் டாக்டர் எஸ்.இந்திரா கூறுகிறார்.

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள பாரம்பரிய வைத்தியரும் கிராமப்புறத் தாவர வல்லுநருமான ப.செல்வம் ”கிராமங்களில் எண்ணற்ற மூலிகைகள் உள்ளன. அவற்றை அடையாளம் காணவும் பயன்படுத்தவும் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  அத்தகைய விழிப்புணர்வு பணியின் ஒரு முயற்சியாக மூலிகை புகைப்பட போட்டியானது உள்ளது” என்று தெரிவிக்கிறார்.

இலக்கிய உலகில் நன்கு பிரபலமாகி புகழ்பெற்ற எழுத்தாளர்கள் குறித்த பல புகைப்படக் கண்காட்சிகளை நடத்தி உள்ள புதுச்சேரியில் வசிக்கும் புகைப்படக் கலைஞர் புதுவை இளவேனில் இந்தப் புகைப்படப் போட்டியில் தான் கலந்து கொள்ள இருப்பதாகவும் ஆர்வமுள்ள புகைப்படக் கலைஞர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னையில் உள்ள சித்த மருத்துவரும் இயன்முறை மருத்துவருமான டாக்டர் எஸ்.அருளானந்தகுமார் புகைப்படம் எடுப்பது தனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு என்றும் குறிப்பாக இயற்கை சார்ந்த காட்சிகளைப் புகைப்படம் எடுக்க நேரம் செலவழிக்கிறேன் என்றும் தெரிவித்தார்.  மத்திய மூலிகை மற்றும் நறுமணத் தாவரங்கள் நிறுவனத்தின் புகைப்பட போட்டியில் கலந்து கொண்டு நிச்சயம் விருது பெறுவேன்” எனத் தெரிவித்தார்.

ஆரோவில் பகுதியைச் சேர்ந்த  எழுத்தாளரும் குறும்பட இயக்குனருமான யாத்ரா.சீனுவாசன் ”இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்ற உண்மையை கொரோனா நமக்கு உணர்த்தி உள்ளது.  இயற்கையின் உறவையும் பெருமையையும் இளைய தலைமுறை தெரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக மூலிகைப் புகைப்படப் போட்டி அமைந்துள்ளது.  நானும் இந்த போட்டியில் கலந்து கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

காட்சி ஊடகம் மூலம் மூலிகை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் புகைப்படப் போட்டியில் கலந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

WhatsApp Image 2020-06-21 at 10.30.51 AM.jpeg

டாக்டர் எஸ்.இந்திரா

ஒருங்கிணைப்பு அலுவலர்

இந்திய மருத்துவமுறை மற்றும்

ஹோமியோபதி இயக்குனரகம்

புதுச்சேரி அரசு, புதுச்சேரி

 

WhatsApp Image 2020-06-21 at 10.31.40 AM.jpeg

வைத்தியர் ப.செல்வம்

கிராமப்புற தாவர வல்லுநர்

வேலூர்

WhatsApp Image 2020-06-21 at 10.33.14 AM.jpeg

புதுவை இளவேனில்

புகைப்படக் கலைஞர்

புதுச்சேரி

WhatsApp Image 2020-06-21 at 10.32.14 AM.jpeg

திரு. யாத்ரா சீனுவாசன்

எழுத்தாளர் & குறும்பட இயக்குனர்

ஆரோவில் பகுதி

 

WhatsApp Image 2020-06-21 at 10.32.53 AM.jpeg

டாக்டர் எஸ்.அருளானந்தகுமார்

இயன்முறை மருத்துவர் & புகைப்படக் கலைஞர்

சென்னை

 

***



(Release ID: 1633089) Visitor Counter : 1756