PIB Headquarters
நாளைய தினம் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாட வீடுகளில் யோகா செய்வதற்கு ஆயத்தமாகும் குடிமக்கள்.
உலக அளவிலான மெகா வீடியோ வலைப்பூ போட்டிக்கான பதிவுகள் அனுப்புவதற்கான அவகாசம் நாளை முடிகிறது.
Posted On:
20 JUN 2020 4:59PM by PIB Chennai
தனிநபர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பேணுவதில் யோகாவின் பங்கு குறித்த நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக கோவிட்-19 நோய்த் தாக்குதல் காலம் அமைந்துள்ளது. 2015ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஜூன் 21ஆம் தேதியும் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பாக உலகெங்கும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் யோகாசன பயிற்சிகள், அற்புதமான குணமாக்கல் திறன்களை உலகிற்கு அளிக்கும் என்பதால், சர்வதேச யோகா தினம் கொண்டாட வேண்டும் என்று ஐ.நா. மன்றத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி வலியுறுத்தினார். யோகா நமது வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்டது. நமது பாரம்பரியத்தின் ஓர் அங்கமாக அது இருப்பதால், நம்மை அறியாமலேயே தினமும் நாம் யோகா செய்து வருகிறோம். தோப்புக்கரணம் போடுதல், சூரிய நமஸ்காரம் செய்தல் போன்றவை நாம் வழக்கமாகச் செய்யும் எளிய வடிவிலான யோகாசனங்களாக உள்ளன. இப்போதைய சூழ்நிலை மற்றும் சமூக இடைவெளி விதிகளைக் கருத்தில் கொண்டு வீடுகளில், குடும்ப அளவில் யோகா செய்யுமாறு பிரதமர் திரு. நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
உடல்ரீதியாகவும், மனதளவிலும் எண்ணற்ற பலன்களைத் தரும் யோகாசனம், இந்தியாவின் மதிப்பிட இயலாத அற்புதமான விஷயமாக உள்ளது என்று ஆயுஷ் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு. பி.என். ரஞ்சித் குமார் கூறியுள்ளார். இப்போதைய கோவிட் - 19 சூழலில் மக்கள் நடமாட்டத்துக்குக் கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், யோகாவால் கிடைக்கும் பயன்கள், உடல் ரீதியாகவும், மன நலனுக்கும் முக்கியமானவையாக அமைந்துள்ளன. பொதுவான ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பாற்றலையும் மேம்படுத்துவதில் நிரூபிக்கப்பட்ட பலன்களைக் கொண்ட யோகா பயிற்சி, மன அழுத்தத்தை நீக்குவதில் முக்கிய பங்கு வகிப்பதாக சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக, கோவிட் நோய் பாதிப்பு சூழ்நிலையில் முக்கிய பங்காற்றுவதாகவும், மன த்தளர்வை அளிப்பதாகவும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதாகவும் உள்ளது. வீடுகளிலேயே யோகா செய்யக் கூடிய #MylifeMyYoga (என் வாழ்க்கை, என் யோகா) என்ற கோட்பாட்டை அறிவித்ததன் மூலம் இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினத்தை பிரமாண்டமானதாக ஆக்க வேண்டும் என்று குடிமக்களுக்கு இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. பொதுவான யோகா நடைமுறையை பெரிய அளவில் மேற்கொள்வது உலகில் மிகவும் பிரபலமான யோகா நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளது. ஆனால் இந்த ஆண்டு, ஒரே இடத்தில் கூடாமல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் எல்லோரும் தங்கள் வீடுகளில் இருந்து 45 நிமிட நேரம் பொதுவான யோகாசனப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும், 2020 ஜூன் 21 காலை 7 மணிக்கு தொடங்கி, ஆயிரக்கணக்கான மற்றவர்களுடன் சேர்ந்து இதைச் செய்ய வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். அனைத்து வயது மற்றும் பாலினத்தவர்களில் பெரும்பாலானவர்கள் எளிதாகச் செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எளிதான பயிற்சி வகுப்புகளில் இவற்றைக் கற்கலாம். ஆன்லைன் யோகா வகுப்புகள் மூலமும் கற்கலாம். ஆயுஷ் அமைச்சகமும், கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சிலும் `என் வாழ்க்கை என் யோகா - ஜீவன் யோகா' ('My Life My Yoga – Jeevan Yoga') என்ற விடியோ வலைப்பூ போட்டியை கூட்டாக அறிவித்துள்ளன. போட்டிக்கான வீடியோக்களை Mygov தளம் மூலமாகவும், முகநூல், ட்விட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாகவும் பதிவிடலாம். வீடியோக்களை சமர்ப்பிக்க இறுதி நாள் 2020 ஜூன் 21. மக்கள் வீடுகளிலேயே யோகா செய்து, அந்த வீடியோக்களை சமூக ஊடகம் மூலம் ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்புவதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுக்க மத்திய அமைச்சகத்தின் பல்வேறு அலுவலகங்கள் ஜூன் 21 ஆம் தேதி நேரலையில் யோகா நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளன. களநிலை மக்களை சென்றடையும் தகவல் தொடர்புக்கான மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ், களநிலையில் மக்களைச் சென்றடையும் பிரிவின் மூலம் நேரு யுவ கேந்திரா மற்றும் ஸ்ரீரங்கம் விவேகானந்தா யோகா மையத்துடன் இணைந்து ஜூன் 21 காலை 7 மணியில் இருந்து 9 மணி வரையில் ஆன்லைனில் யோகா நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. https://www.facebook/srirangamvivekanandafoundation என்ற இணையச் சுட்டியில் இதில் நேரலையாகக் காணலாம். யோகா மாஸ்டர்கள் டாக்டர் சந்தானகிருஷ்ணானந்த் மற்றும் டாக்டர் ஸ்ரீதர் ஆகியோர் இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பார்கள். உலகெங்கும் இருந்து 500க்கும் மேற்பட்டவர்கள் இதற்கு ஏற்கெனவே பதிவு செய்துள்ளனர். நமது ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பாற்றலின் முக்கியத்துவத்தை கோவிட் -19 நோய்த் தாக்குதல் உணரச் செய்துள்ளது. நமது மனத்துக்கு இதம் அளிக்க யோகா மட்டுமே சிறந்த வழி. நமது உடலுக்கு யோகாசனங்கள் புத்துணர்வு ஊட்டுகின்றன. விசேஷமான உடல் அசைவுகள் கொண்ட ஒவ்வொரு யோகாசனமும், நமது உடலில் ஒவ்வொரு பாகத்துக்கும் சிறப்பாக நிவாரணம் அளிப்பவையாக உள்ளன. நமது உடல் மற்றும் மனதை பலப்படுத்த நமது வாழ்வின் அங்கமாக யோகா மாற வேண்டும். ஒட்டுமொத்தமான, ஆத்மார்த்தமான சிகிச்சை முறையில் நமது நம்பிக்கைக்கு புத்துயிரூட்டுவதற்கான அடையாளமாக யோகா தினம் கொண்டாடப் படுகிறது.
(Release ID: 1632995)
Visitor Counter : 392