PIB Headquarters

கொவிட்-19 அச்சுறுத்தல்; ஊர் திரும்பும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன


வந்தே பாரத் விமானங்கள் மூலம் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்

Posted On: 19 JUN 2020 5:14PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்று மிகப்பெரும் வெளியேற்றத்துக்கு காரணமாகியுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் தங்கள் குடும்பத்துடன் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றனர்.  வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வந்த இந்தியர்களை ஏர் இந்தியா விமானங்கள் மூலம் தாயகம் கொண்டு வருவதற்காக மத்திய அரசு வந்தே பாரத்  இயக்கத்தைத் தொடங்கியது. வந்தே பாரத் விமானங்கள் மூலம், ஒரு லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தாயகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல் முறையாக, துபாயிலிருந்து 188 பயணிகளுடன்  ஒரு விமானம் திருச்சி விமானநிலையத்தில் ஜூன்   18-ம் தேதி வந்திறங்கியுள்ளது. மேலும், மஸ்கட்டில் இருந்து  171

பயணிகளை ஏற்றிக்கொண்டு ஓமனிலிருந்து திருச்சிக்கு மற்றொரு விமானம் வந்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், சிறப்பு விமானங்களை இயக்கி சிங்கப்பூரிலிருந்து 179 இந்தியர்களை அழைத்து வந்துள்ளது. மற்றுமொரு விமானம் மாலே வேலனா விமான நிலையத்திலிருந்து திருச்சிக்கு 170 பயணிகளை அழைத்து வந்தது. கொவிட்-19 பொது முடக்கத்தின் ஒரு பகுதியாக, மார்ச் 25-ம் தேதி முதல், சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஜூன் 1 முதல் சில கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி,  சர்வதேச விமானங்கள் இயக்கம் மீண்டும் துவங்கியது.

வெளிநாடுகளில் தங்கி வேலை பார்க்கும் குடும்பத்தினர் சொந்த ஊருக்கு வந்துவிட வேண்டும் என்ற ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக, மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேசமயம், இந்த வெளியேற்றத்தின் மூலம், நாடு திரும்புபவர்கள் கோவிட்-19 தொற்றைப் பரப்பி விடாமல் இருப்பதை உறுதி செய்வதும் முக்கியமாகும். ஆகவே, விமானங்கள் மூலம் இந்தியா திரும்புபவர்களுக்கு கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் திருச்சி வரும் அனைத்து பயணிகளுக்கும் வெப்பமானி சோதனை செய்யப்பட்டு, அவர்களது மாதிரிகள் கொவிட்-19 பரிசோதனைக்காக எடுக்கப்படுகின்றன. உடல் வெப்பம் அதிகமாக இருந்து, மேலும் அறிகுறிகள் தென்பட்டால், அத்தகைய பயணிகள் உடனடியாக, திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள். வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் பயணிகள் , விதிமுறைகளின்படி, மாவட்ட நிர்வாகம் கூறும் இடங்களில், 7 நாட்களுக்கு

தனிமைப்படுத்துதல் முகாமில் சொந்தச் செலவில் தங்கியிருக்க வேண்டும். ஏழு நாட்களுக்குப் பிறகு, மேலும் சோதனை நடத்தப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படுவார்கள். அவர்கள் வீடுகளுக்குத் திரும்பி மேலும் ஏழு நாட்களுக்கு அங்கேயே தனிமையில் இருக்க வேண்டும். பிற மாவட்டங்களிலிலிருந்து வருபவர்களுக்கு கொவிட்-19 அறிகுறிகள் இல்லையென்றால், அவர்கள் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் சொந்த மாவட்டங்களில், தாங்களாகவே தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் இந்தியா திரும்புபவர்களுக்கு, மணிக்கட்டில், வீட்டில் தனிமைப்படுத்துதல் தொடர்பான அழியாத முத்திரை பதிக்கப்படும்.

செதுரப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி விடுதியில், திருச்சி தனிமைப்படுத்தல் மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் ஒவ்வொருவருக்கும் இலவசமாக படுக்கை விரிப்புகள், துண்டு, பற்பசை, சோப், தலைக்கு எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தனிமைப்படுத்தும் மையங்களில் இருப்பவர்களுக்கு    காலையும், மாலையும் தேநீர் வழங்கப்படுகிறது. காலை உணவு, மதிய உணவு ஆகியவை ஊட்டச்சத்து நிறைந்ததாக வழங்கப்படுகிறது. குடிநீரும் அளிக்கப்படுகிறது. கிருமி நீக்கும் நடவடிக்கைகள் அடிக்கடி மேற்கொள்ளப்பட்டு அந்த இடம் தூய்மையாகப் பராமரிக்கப்படுகிறது. தங்கும் விடுதிகளில் தங்க விரும்புபவர்கள், மாவட்ட நிர்வாகம் கூறும் இடங்களில் தங்கள் சொந்தச் செலவில் தங்கலாம்.

தமிழகத்தின் மையப்பகுதியில் இருப்பதால், திருச்சி விமானநிலையம் பரபரப்பாக இயங்கி, நாடு திரும்புவோரின் சர்வதேச விமானங்கள் வந்திறங்கும் முக்கிய இடமாகத் திகழ்கிறது. கொவிட்-19 பரவலைத்

தடுத்து நிறுத்துவதற்கு கடுமையான கட்டாய சோதனைகளை மேற்கொள்ள வேண்டிய நேரமாக இருப்பதால், அரசு அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைக் கையாண்டு வருகிறது. அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைத்து, கொவிட்-19 தொற்றை முறியடிக்க வேண்டியது பொதுமக்களாகிய நமது கடமையாகும்.

 

சிங்கப்பூரிலிருந்து வந்தவர்களுக்குத் திருச்சி விமான நிலையத்தில் சோதனை நடத்தி மணிக்கட்டில் முத்திரையிடப்படுகிறது

திருச்சி விமான நிலையத்தில், பயணிகள் பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்றுகின்றனர்

திருச்சி விமான நிலையம்

திருச்சி விமான நிலையத்தில் வெப்பமானி சோதனை


(Release ID: 1632708) Visitor Counter : 343