PIB Headquarters

அஞ்சல் துறையின் வீடு தேடி வரும் டிஜிட்டல் சேவைகள் ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு பெரும் நிம்மதி அளித்துள்ளது

திருச்சி மண்டலத்தில் ரூ.20 கோடி வீடு தேடிச்சென்று விநியோகம்- அஞ்சல்துறை தலைவர்

Posted On: 18 JUN 2020 4:49PM by PIB Chennai

கொவிட்-19 ஊரடங்கு காலத்தில், அஞ்சல் துறையின் சேவைகள் வாடிக்கையாளர்களின் வீடுகளைச் சென்றடைந்து வருகின்றன. கொதிக்கும் வெயிலுடன் கூடிய கடும் கோடையாக இருந்தாலும், கொட்டும் மழையாக இருந்தாலும், கொவிட்-19 அச்சுறுத்தல் இருந்த போதிலும், அஞ்சல் துறை அயராது பாடுபட்டு வருகிறது. இந்த முயற்சிகள் தொடர்ந்து வரும் நிலையில், மக்கள் சார்ந்த சேவைகள் திருச்சி தலைமை அஞ்சலகத்தில் புதன்கிழமை தொடங்கப்பட்டன. பொது சேவை மையத்தின் டிஜிடல் சேவா தளம் மூலம், மக்களை மையப்படுத்தும் சேவைகளை அஞ்சல் துறை நாடு முழுவதும் 6000 அஞ்சல் நிலையங்களில்,  அண்மையில் அறிமுகப்படுத்தியது. இந்த தளத்தைப் பயன்படுத்தி, மின்னணு  முறையில் வரி, ஜிஎஸ்டி, டிடிஎஸ், பாஸ்ட் டாக் ரீசார்ஜ் ஆகியவற்றை தாக்கல் செய்வதுடன், காப்பீட்டு பிரிமியம், டிடிஎச், கைபேசி, பேருந்து, விமான டிக்கெட்டுகள் பதிவு செய்வது உள்பட 100 சேவைகளைக் கையாளலாம். தமிழக வட்டாரத்தின், மத்திய அஞ்சல் மண்டல தலைமை அஞ்சல் அதிகாரி திருமதி. சுமதி ரவிச்சந்திரன், ஆதார் திருத்தம் மற்றும் பதிவு மையம், திருச்சி தலைமை அஞ்சலகத்தில் இயங்கி வருவதாகவும்,  இந்த மையத்தில் தினசரி 100க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதாகவும் கூறினார். அஞ்சலகம் அளிக்கின்ற இந்த அனைத்து சேவைகளையும் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்த ஊரடங்கு காலத்தில், சாதாரண மக்களுக்குப் பயனளிக்கும் பல்வேறு சேவைகளை அஞ்சல் துறை வழங்கி வருவதாகக் கூறிய அவர், மக்களிடம் இந்த சேவைகளுக்கு மிகுந்த வரவேற்பு இருப்பதாகவும் தெரிவித்தார். அஞ்சல் துறை , தமிழக அரசுடன் இணைந்து கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகையை வழங்கி வருகிறது. மத்திய மண்டலத்தில், 90,561 இந்தியா அஞ்சல் வங்கி கணக்குகள் கட்டுமானத் தொழிலாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்குகளுக்கு தமிழக அரசு நேரடியாக நிவாரணத் தொகையைச் செலுத்தி வருகிறது.

இந்த ஊரடங்கு காலத்தில், தபால்காரர் மூலம், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிகளில் இருந்து, ஆதார் இணைப்பு முறை வாயிலாக, பணத்தை எடுக்கும் வசதிக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு காணப்படுகிறது. ஊரடங்கு அமலாக்கம் தொடங்கியதிலிருந்து, திருச்சி மண்டலத்தில், 1,06,396 ஆதார் பரிவர்த்தனைகள் மூலம், ரூ.19.88 கோடி பெறப்பட்டுள்ளது. மத்திய மண்டலத்தில், ஏப்ரல், மே மாதங்களில், மருந்துகள், உபகரணங்கள் உள்ளிட்ட பதிவு செய்யப்பட்ட 1500 பொருட்கள் , அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட 3000 பொருட்களுக்கும் மேலாக அஞ்சலகங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஆதார் பதிவு மற்றும் திருத்தம் உள்ளிட்ட சேவைகளை வழங்க மத்திய மண்டலம் முழுமையான பணியாளர்களுடன் தற்போது இயங்கி வருகிறது.

பசுமை முன்முயற்சி என்னும் அஞ்சல் துறையின் மூலம், திருச்சி தலைமை அஞ்சலக வளாகத்தில், சூரிய மின்சக்தி நிலையத்தை தலைமை அஞ்சலக அதிகாரி புதன்கிழமை  முறைப்படி தொடங்கி வைத்தார். தமிழக வட்டார, மத்திய அஞ்சலக மண்டலத்தின் அஞ்சல் சேவை இயக்குநர் திரு. ஏ. தாமஸ் லூர்துராஜ், திருச்சி கோட்ட அஞ்சலக மூத்த கண்காணிப்பாளர்  திரு. ஆர்.கணபதி சுவாமிநாதன் மற்றும் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சார அளவு 50 கிலோவாட் ஆகும். தலைமை அஞ்சலகத்தின் 50 சதவீத மின்தேவையை இந்த நிலையம் ஈடுகட்டும்.

வாடிக்கையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் வசதிக்காக பிரத்யேக பேக் செய்யும் வசதிகளுடன், நவீனமயமாக்கப்பட்ட மொத்த நடைமுறை மையம், திருச்சியில் தொடங்கப்பட்டது. அனைவராலும் விரும்பப்படும் ஏற்றுமதி வழியாக இந்தியா அஞ்சல் திகழ்கிறது. பல புதிய வாடிக்கையாளர்கள் இதனைப் பயன்படுத்த பதிவு செய்து வருகின்றனர். வளர்ந்து வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கையைச் சமாளிக்க, திருச்சி தலைமை அஞ்சலகத்தில் செயல்பட்டு வரும் மொத்த நடைமுறை மையம் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. 60க்கும் மேற்பட்ட மொத்த வாடிக்கையாளர்களின், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் இந்த மையத்தில் கடந்த ஆண்டு கையாளப்பட்டன. நாட்டின் நரம்பு மண்டலமான இந்தியா அஞ்சல், டிஜிட்டல் யுகத்தில் புதிய வேகத்துடன் தனது சேவையை, மேலும் அதிக பொருட்களைக் கையாண்டு இடையறாது ஆற்றி வருகிறது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மக்களின் வீடு தேடி சென்று, சேவையளித் நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க இத்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.



(Release ID: 1632328) Visitor Counter : 195