PIB Headquarters

தமிழகத்தின் மத்திய மாவட்டங்களில் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதில் இந்திய மருத்துவ முறை சிறந்து விளங்குகிறது.

Posted On: 15 JUN 2020 7:42PM by PIB Chennai

7 லட்சம் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில், 4 டன் கபசுர ஆரோக்கிய பான பாக்கெட்டுகள் சித்த மருத்துவத்துறையால் விநியோகிக்கப்பட்டுள்ளது.

தில்லி, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கொவிட்-19 தொற்று காட்டுத்தீ போல பரவி வருகிறது. இந்தப் பெருந்தொற்று பரவாமல் எப்படி தடுப்பது என்பது குறித்து மேலும் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது இப்போதைய அவசியத் தேவையாகும். தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு பொதுமுடக்க ஊரடங்குடன், பாதுகாப்பான இடைவெளி என்னும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு உத்தரவுகளையும், அறிவுரைகளையும் பிறப்பித்துள்ளது. குறைந்த கூட்டம் உள்ள சிறு நகரங்கள், கிராமங்களை விட பெரிய நகரங்களில் கொவிட்-19 கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு விரைவாகப் பரவுவது குறிப்பிடத்தக்கதாகும்.

மத்திய மாவட்டமான திருச்சிராப்பள்ளி , மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதில் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, அரியலூர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை ஒதுக்கப்பட்டுள்ளது. ஞாயிறு அன்று, திருச்சியில் ஒன்பது பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டதை அடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 163 ஆக உயர்ந்துள்ளது. இந்த மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை தமிழகத்தின் மத்திய மாவட்டங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த 116 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். திருச்சியில் தற்போது 46 பேர் கொவிட்-19 தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரி தலைவர் டாக்டர் வனிதா, கொவிட்-19 நோய்ப் பரவலைத் தடுக்க, மக்கள் சுகாதாரத்துறையுடனும், அரசுடனும் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனையில் , திருச்சி மற்றும் இதர மாவட்டங்களைச் சேர்ந்த கொவிட்-19 நோயாளிகள் 230 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் திருச்சியில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் 163. மக்கள் கட்டாயமாக முகக்கவசங்களை அணிவதுடன், மருத்துவமனைகள் , சந்தைகள் போன்ற பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும் என்றும், அவசரத் தேவைக்காகவோ, அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காகவோ மட்டும் வெளியே வரவேண்டும் என்றும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

ஆயுஷ் முறையின் கீழ் இயங்கும் சித்தா போன்ற பாரம்பரிய மருத்துவமுறையும் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி டாக்டர் காமராஜ், தமிழகத்தின் மத்திய பகுதியில், நோயைக் கட்டுப்படுத்த பொதுமக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இதுவரை 4000 கிலோ கபசுரக் குடிநீர் ஆரோக்கிய பான பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இதனால், திருச்சி, பெரம்பலூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 7 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். மக்கள் முகக்கவசங்களை அணிய வேண்டும், பாதுகாப்பான இடைவெளியைப் பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் விழிப்புணர்வுக் கையேடுகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன. சித்த மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களைக் கொண்ட தமது குழு, திருச்சி உறையூர், மேல் கல்நாயக்கன் தெரு ஆகியவற்றுக்குச் சென்று இலவச கபசுரக்குடிநீர் பாக்கெட்டுகளையும், விழிப்புணர்வுக் கையேடுகளையும் விநியோகித்ததாக டாக்டர் காமராஜ் கூறினார். சித்த மருத்துவத்தின் மூலம் நோய்க்கு எவ்வாறு படிப்படியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று அவர் கூறினார். நமது முன்னோர்கள் மூலிகைகளைக் கொண்டு பயன்படுத்திய பாரம்பரிய மருத்துவம் நோய்களை முழுமையாகக் குணப்படுத்தியதை அவர் சுட்டிக்காட்டினார்.  கபசுரக் குடிநீர், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது என்று தெரிவித்த அவர், ஒவ்வொருவரும் வயது வேறுபாடின்றி இதைக் குடிக்கலாம் எனக் கூறினார். அரசு உத்தரவின்படி, கபசுரக் குடிநீர் இலவசமாக மக்களுக்கு, குறிப்பாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வழங்கப்படுகிறது. திருச்சி மண்டலத்தில், கடந்த மூன்று மாதங்களாக, கபசுரக் குடிநீர் பாக்கெட்டுகள் கொவிட்-19 நோயாளிகள், மருத்துவமனையிலிருந்து குணமடைந்து சென்றவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. திருச்சி வனத்துறை அலுவலகத்தில், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. டாக்டர் காமராஜ் தலைமையில், டாக்டர் தமிழ்க்கனி, டாக்டர் மெர்லின்  தோரா, டாக்டர் இசை அமுது, டாக்டர் சாராதா குரானா ஆகியோரைக் கொண்ட குழு, கொவிட்-19 தடுப்பு விழிப்புணர்வு முகாமை நடத்தியது. திருச்சியில் உள்ள வயலூர் முருகன் கோவிலில் அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. கொவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, வணிக வரித்துறை, மாநில போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு சித்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் கபசுரக் குடிநீர் வழங்கினர். திருச்சி போக்குவரத்து அலுவலகத்தில், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக சிறப்பு கொவிட்-19 முகாம் நடைபெற்றது.

வருமுன் காப்போம் என்பதற்கு ஏற்ப, சிகிச்சையை விட தடுப்பு முறையே சிறந்தது என்பது கொவிட்-19 பெருந்தொற்றை முறியடிப்பதற்கான சிறந்த வழியாகும். உலகமே இந்த உயிர்க்கொல்லித் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல், தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், நமது ஆயுஷ் மருத்துவ முறை, பாரம்பரிய வலிமையுடன், கைகொடுத்து, நிரூபணமான பயன்களை அளித்துள்ளது.

-------------------------------------------------------------------------------------------------------------------------

 

சித்த மருத்துவ அதிகாரி டாக்டர் காமராஜ் கொவிட்-19 தடுப்பு குறித்து உரையாற்றுகிறார்

 

கபசுர பாக்கெட்டுகள் விநியோகம்

வயலூர் கோவிலில் அர்ச்சகர்களுக்கு கபசுர பாக்கெட்டுகள் விநியோ



(Release ID: 1631754) Visitor Counter : 483