PIB Headquarters
கட்டுமானத் தொழில் மீதான செஸ் நிதி, ஊரடங்கு காலத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளது.
ரூ.31,000 கோடி செஸ் நிதியிலிருந்து மாநில அரசுகள் தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளன.
Posted On:
13 JUN 2020 4:56PM by PIB Chennai
- கே.தேவிபத்மநாபன், கள விளம்பர அலுவலர், திருச்சிராப்பள்ளி.
- பாதிக்கப்பட்ட அமைப்பு சாரா கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, மத்திய அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்துள்ளது. அன்றாட ஊதியத்தை எதிர்நோக்கியுள்ள கட்டுமானத் தொழிலாளர்கள், ஊரடங்கால் தங்களது வருமானத்திற்கான ஆதாரத்தை இழந்துள்ளனர். எனவே, தொழிலாளர் நல வாரியத்தால் வசூலிக்கப்பட்ட செஸ் நிதியிலிருந்து, கட்டுமானத் தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றத் திட்டத்தின் கீழ் அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுசெய்த 3.5 கோடி கட்டுமானத் தொழிலாளர்களுக்கு , இதுவரை ரூ.52,000 கோடி அளவிற்கு செஸ் நிதியிலிருந்து வழங்கப்பட்டு பயனடைந்துள்ளனர். மாநில அரசுகளின் செஸ் நிதியில் இருப்பில் உள்ள 31,000 கோடி ரூபாயை பயன்படுத்தி, ஊரடங்கு காலத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதியுதவி வழங்கிடுமாறு, மாநில அரசுகளை மத்திய நிதியமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
- மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர் சட்டங்களின் படி, கட்டுமான செலவில் ஒரு சதவீத நிதி, மாநில அரசுகளால் செஸ் வரியாக வசூலிக்கப்படுகிறது. தொழிலாளர்கள் 60 வயதை அடையும் போது ஓய்வூதியம் வழங்குவதற்கோ, அல்லது விபத்தில் சிக்க நேரிட்டாலோ, இந்த நிதியிலிருந்து தான் மாநில அரசுகள் நிதியுதவி அளித்து வருகின்றன. பதிவுபெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகைகளும் இந்த நிதியிலிருந்து தான் வழங்கப்படுகிறது. 18 முதல் 60 வயதுடைய எந்தவொரு கட்டுமானத் தொழிலாளியும், நல வாரியத்தில் தமது பெயரைப் பதிவுசெய்து கொள்ளலாம்.
- அரசு, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் தொழிலாளர் நல வாரியங்கள் மூலம், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், நல வாரியத்தில் பதிவுசெய்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தலா 15கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு கிலோ சமையல் எண்ணெய் போன்றவை, கோவிட்-19 சிறப்புத் தொகுப்பு உதவியாக வழங்கப்பட்டுள்ளது. அந்தந்தப் பகுதியிலுள்ள நியாயவிலைக் கடைகள் மூலமாக, சமூக இடைவெளியைப் பின்பற்றி இந்தத் தொகுப்பு உதவிகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இது தவிர, கட்டுமானத் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கிலும், சிறப்பு நிதியுதவியாக தலா ஆயிரம் ரூபாய் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளர் மற்றும் பிற அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் 29,769 பேர் பதிவுசெய்துள்ளனர். இவர்களில், முதற்கட்டமாக 16,500 பேருக்கு நிதியுதவி மற்றும் சிறப்புத் தொகுப்பு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சியவர்கள், அவரவர் பெயர், வங்கிக் கணக்கு விவரம், ஆதார் எண் மற்றும் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த விவரங்களை, சம்பந்தப்பட்ட தொழிலாளர் நல வாரிய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில், 15,987 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தலா 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் விநியோகிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் பதிவுபெற்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா ரூ.1,000 நிதியுதவியும் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
- நெருக்கடியான காலகட்டத்தில், தங்களுக்கு உதவி செய்துள்ள மத்திய – மாநில அரசுகளுக்கு, கரூர் மாவட்ட கட்டுமானத் தொழிலாளர் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நலச் சங்க செயலாளர் திருமதி.சுமதி நன்றி தெரிவித்துள்ளார். ஊரடங்கால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலி தொழிலாளர்களான கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, மத்திய, மாநில அரசுகளின் உதவிகள், பெரிதும் உதவிகரமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது, எந்தவித வருமானமும் இல்லாமல் தவிக்கும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, இன்னும் கூடுதலாக உதவி மற்றும் சலுகைகளை வழங்க வேண்டுமென்றும் திருமதி.சுமதி கோரிக்கை விடுத்துள்ளார்.
- நடைமுறைகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள போதிலும், கட்டுமானத் தொழில் மெதுவாகத் தான் தொடங்கியுள்ளது. கட்டுமானத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்பதால், அவர்கள் ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு சென்றுவிட்ட நிலையில், தற்போது உள்ளூர்த் தொழிலார்கள் மட்டுமே பணிக்கு வருகின்றனர். மத்திய அரசின் சுயசார்பு இந்தியா திட்டத்தின், துறைசார்ந்த நடவடிக்கைகள் மூலம், நமது பொருளாதாரத்திற்குப் புத்துயிரூட்டுவதற்கான முயற்சிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருவதன் காரணமாக, பல்வேறு திட்டங்களின் மூலம் பாதிக்கப்பட்டோர் அதிகளவில் பயனடையும்போது, இந்த நடவடிக்கைகளின் பலன் கண்கூடாகத் தெரியவரும்.
*****


(Release ID: 1631406)
|