PIB Headquarters

என் வாழ்க்கை, எனது யோகா - என்பது சர்வதேச யோகா தினம் 2020க்கான அடிப்படை கோஷமாக இருக்கும்

நமது வாழ்வின் ஒருங்கிணைந்த அம்சமாக யோகாவை ஆக்குவதற்கு பெரிய அளவிலான வீடியோ போட்டி அறிவிப்பு

Posted On: 11 JUN 2020 2:46PM by PIB Chennai

ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச யோகா தினத்தின் ஓர் அம்சமாக `என் வாழ்க்கை, எனது யோகா' வீடியோ போட்டியில் கலந்து கொள்ளுமாறு உலகெங்கும் வாழும் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஆறாவது சர்வதேச யோகா  தினம் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில்  ஜூன் 21ஆம் தேதி பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் பல்வேறு யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு ஜூன் 21இல் முக்கியமான நிகழ்வில் அவை நிறைவு பெறும். இந்த ஆண்டு கோவிட்-19 நோய்த் தாக்குதல் காரணமாக, பாதுகாப்பான இடைவெளியைப் பராமரிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதால், யோகா தினம் வீடுகளிலேயே கொண்டாடப்படும். எனவே யோகா செய்பவர்களையும், மற்றவர்களையும் இந்த ஆரோக்கிய வாழ்வைக் காக்கும் நடைமுறையில் பங்கெடுத்துக் கொள்ளச் செய்யும் வகையில், இந்த வீடியோ போட்டியை நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது. `என் வாழ்க்கை, எனது யோகா - ஜீவன் யோகா' என்ற தலைப்பில் வீடியோ வலைப்பூ போட்டியை மத்திய ஆயுஷ் அமைச்சகமும், கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சிலும் இணைந்து நடத்துகின்றன. Mygov தளம் மூலமாகவும், முகநூல், ட்விட்டர்,, யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாகவும், போட்டிக்குரிய வீடியோக்களை பதிவேற்றம் செய்யலாம். 2020 ஜூன் 15ஆம் தேதிக்குள் இதற்கான வீடியோக்களை சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதி நீட்டிக்கப்படலாம். வீட்டில் மக்கள் யோகா செய்ய வேண்டும், சமூக ஊடகம் மூலம் ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் இதன் நோக்கமாக உள்ளது. யோகா பற்றியும், ஆரோக்கியத்தில் அதன் பயன்கள் குறித்தும் பிரபலப்படுத்தும் முயற்சியாக, யோகா செய்வதன் மூலம் ஒருவர் தன்னுடைய முழுமையான ஆரோக்கியத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்ற உண்மையை ஆயுஷ் அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது.

பிரதமர் தனது வானொலி உரையில் என் வாழ்க்கை, எனது யோகா - என்ற வீடியோ போட்டியை அறிவித்தார் என்றும், அனைவரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார் என்றும் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த யோகா மாஸ்டர் டாக்டர் சந்தானகிருஷ்ணன் தெரிவித்தார்.

     ஆண்கள் மற்றும் பெண்கள் 18 வயதுக்கும் குறைவானோர், 18 வயதுக்கும் மேல் ஆனவர்கள் மற்றும் தொழில்முறையாளர்களுக்கு என வெவ்வேறு பிரிவுகளாக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. முதல் பரிசு வெல்பவருக்கு ரூ.1 லட்சம், இரண்டாம் இடம் பெறுபவருக்கு ரூ.50000, மூன்றாம் இடம் பெறுபவருக்கு ரூ.25 ஆயிரம் பரிசு அளிக்கப்படும். ஆண் மற்றும் பெண்கள் பிரிவுகளில் மொத்தம் ஆறு பரிசுகள் அளிக்கப்படும். மதிப்பீட்டில் பாரபட்சம் நிகழ்ந்துவிடாமல் இருப்பதற்காக, போட்டியாளர்கள் தங்களுடைய நாட்டின் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது. `என் வாழ்க்கை, எனது யோகா' என்ற கோஷத்தை வலியுறுத்தும் வகையில் 3 நிமிடங்கள் கொண்டதாக வீடியோ இருக்க வேண்டும். கிரியா, ஆசனங்கள், பிராணாயாமம், முத்ரா ஆகியவை இந்த 3 நிமிட நேரத்துக்குள் இடம் பெறலாம். அடிப்படையில் வீட்டிலும், குடும்பத்திலும் யோகாவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வீடியோவை முகநூல், ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராமில் வெளியிடலாம். #MyLifeMyYoga என்ற ஹேஷ்டேக் சேர்த்து வெளியிட வேண்டும். மேலும் இணையதளத்தில் https://www.mylifemyyoga2020.com/home என்ற முகவரிக்குச்சென்று போட்டியில் பங்கேற்க பதிவு செய்து கொள்ள வேண்டும். வீடியோவை நேரடியாகப் பதிவேற்றம் செய்யலாம் அல்லது முகநூல், ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதன் தொடர்புச் சுட்டியை (link)  அளிக்கலாம். முகநூல் நுழைவுக்கு, ஆயுஷ் அமைச்சகத்தின் https://www.facebook.com/moayush பக்கத்திற்கு சென்று Like மற்றும் Follow கிளிக் செய்ய வேண்டும். யோகா நிபுணர்களைக் கொண்ட குழுவினர் இந்த வீடியோக்களை ஆய்வு செய்து தேர்வு செய்வார்கள்.

     ‘vasudaivakudumbakam’ என்ற வேதகால பழமொழிக்கு ஏற்ப, உலகை ஒரே குடும்பமாக இந்தியா கருதுகிறது. ஒட்டுமொத்தமாக உலக மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது. அதனால், உலக மக்கள் அனைவருக்கும் வீடியோ போட்டி பொதுவானதாக இருக்கிறது. எல்லா நாடுகளும் இதில் பங்கேற்று தங்களுடைய நாட்டில் #MyLifeMyYoga<country> மூலம் யோகாவைப் பிரபலமாக்கலாம். சர்வதேச அளவில் பங்கேற்பவர்கள் ஜூன் 15ஆம் தேதிக்குள் போட்டிக்கான வீடியோவை பதிவேற்றம் செய்ய வேண்டும். மற்ற நாடுகளுக்கான வெற்றியாளர்கள் மற்றும் பரிசுத் தொகை ஆகியவற்றை வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் அறிவிக்கும். ஒவ்வொரு நாட்டிலும் வெற்றி பெறுபவர்கள், இந்தியாவில் வெற்றி பெறுபவர்கள் ஆகியோர் உலக அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள் என்று ஆயுஷ் அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதலாவது பரிசு 2500 டாலர்களாகவும், இரண்டாவது பரிசு 1500 டாலர்களாகவும், மூன்றாவது பரிசு 1000 டாலர்களாகவும், ஆறு பிரிவுகளில் அளிக்கப்படும்.

     தொடர்ந்து யோகா செய்வது நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும். பல நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். நமது பாரம்பரிய யோகா பற்றி நாம் அறிந்து கொண்டு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற வாழ்க்கை முறை சார்ந்த கோளாறுகளை வெற்றி கொள்ள ஆக்கபூர்வமான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். உலகை உலுக்கி வரும் கோவிட்-19 நோய்த் தாக்குதலுக்கு எதிராக நோய் எதிர்ப்பாற்றலை ஊக்குவிக்கும் சக்தி கொண்டதாகவும் யோகா இருக்கிறது.

நமக்காகவும், உலகெங்கும் உள்ளவர்களுக்காகவும் யோகாவின் பெருமைகளுக்கு நாம் தலை வணங்குவோம்.

 

யோகா மாஸ்டர் சந்தானகிருஷ்ணன் யோகா கற்பிக்கிறார்

 

 

திருச்சி ஜனனி எடமலபுட்டி யோகா செய்கிறார்

 



(Release ID: 1631101) Visitor Counter : 131