PIB Headquarters

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு சுய உதவிக்குழுவும் ஒரு லட்சம் ரூபாய் கடனுதவி பெறும்.

Posted On: 09 JUN 2020 6:10PM by PIB Chennai

தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தமிழகத்தில் நகர்ப்புற வீடுகளில் வறுமை ஒழிப்புக்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நகர்ப்புற வீடுகளில் பெரும் பகுதியினர், கொவிட்-19 பெருந்தொற்று ஊரடங்கால், வேலை எதுவும் இல்லாததால், தங்களது தினக்கூலியை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு, பெண்களின் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் மாதந்தோறும் ரூ. 500 செலுத்துவது உள்பட, சுயசார்பு இந்தியா திட்டம் மூலமாக, பல்வேறு நிதியுதவிகளை அறிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் , பிரதமர் ஊஜ்வாலா திட்டத்தின் மூலம் மூன்று இலவச சமையல் எரிவாயு உருளைகள் வழங்கப்படுகின்றன.

திருச்சி மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் திரு. சரவணன், திருச்சி மாவட்டத்தில் 1,30,000 சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளதாகத் தெரிவித்தார். அவர்கள் , தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தமிழக வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் கீழ் அவர்கள் பணியாற்றி வருகின்றனர் என அவர் கூறினார். உறுப்பினர்கள் தாங்களாகவே சுய உதவிக் குழுவில்  பதிவு செய்துகொண்டு, அந்தக் குழுவுடன் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு சுய உதவிக்குழுவும், வங்கிகளுடன் இணைக்கப்பட்டு, முதல் கட்டமாக, ரூ.ஒரு லட்சம் கடனுதவியாக வங்கிகளால் வழங்கப்படுகிறது. அதன் பின்னர், சுய உதவிக்குழுக்களுக்கு  வங்கிகள் மூலம் இரண்டாவது , மூன்றாவது இணைப்பின்படி, கடன்கள் வழங்கப்படுகின்றன. கொவிட்-19 தொற்று ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவும் வகையில், சுய உதவிக் குழுக்களுக்கு, சிறப்புக் கடனாக ரூ. ஒரு லட்சம் வரை கடன் வழங்குமாறு தற்போது தமிழக அரசு வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மிகக் குறைந்த வட்டி விகிதத்துடன், தங்கள் கடனை திருப்பிச் செலுத்தும் தவணையைத் துவங்க, செப்டம்பர் மாதம் வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கொவிட்-19 விழிப்புணர்வு Zoom செயலி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் அவர்கள் பொதுமக்களுக்கு கொவிட்-19 பற்றிய தகவலைப் பரப்ப முடிகிறது. வீரங்கிநல்லூர் சோமரசம்பேட்டையைச் சேர்ந்த திருமதி. வி. ஹேமலதா என்கிற சுய உதவிக்குழு உறுப்பினர், தங்கள் பிரச்சினைகளைச் சமாளிக்க தங்களுக்குள் ஒரு குழுவாக ஒருங்கிணைந்து செயல்படுவதாகத் தெரிவித்தார்.  தங்களால், வங்கிக் கடன்களைப் பெற முடிந்துள்ளது என்றும், கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தினால், மேலும் கடன்களைப் பெறமுடியும் என்றும் அவர் கூறினார். திருச்சி சோமரசம்பேட்டையைச் சேர்ந்த திருமதி. ஜாக்குலின் மரிய செல்வி, சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் வழங்கும் கடனுதவி உண்மையிலேயே மிகவும் பயனுள்ளதாக உள்ளதாகத் தெரிவித்தார். ஊரடங்கால், தங்கள் குடும்பங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என்றும், இந்தக் கடன் தங்கள் சிக்கலில் இருந்து மீண்டுவர உதவும் என்றும் அவர் கூறினார். கரூரில், சிறப்பு கொவிட்-19 திட்டத்தின் கீழ், சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ. 5000 வீதம், ஒவ்வொரு சுய உதவிக் குழுவுக்கும் அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. ஆறு மாத காலத்துக்குப் பின்னர், உறுப்பினர்கள் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். அதன் பின்னர், இரண்டு வருடத்திலோ அல்லது மூன்று வருடத்திலோ அதனைத் திருப்பிச் செலுத்தலாம்.  7  சதவீத வட்டி விகிதத்தில், ஒரு லட்சம் ரூபாய் வரை , நகைக் கடனும் வழங்கப்படுகிறது. இதை 6 மாதங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும்.

மகளிர் அதிகார முன்முயற்சிகள் நிதி ஆதரவால் மட்டுமே நீடித்திருக்க முடியும். ஊரடங்கு போன்ற சிக்கலான காலங்களில், குடும்பத்தை நடத்த, பல்வேறு கைத்தொழில்களைச் செய்து, சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பணம் சம்பாதித்து வருகின்றனர். கரூரில் உள்ள பணிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி. நந்தினி, ஊரடங்கின் போது, பிரதமர் ஜன்தன் வங்கி திட்டத்தில், ரூ. 500 பெற்று வருவதாகக் கூறினார். அரசு தங்களுக்கு மேலும் அதிக பணப்பயன் வழங்க வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டார். கரூர் கருங்கலப்பள்ளி கிராமத்தின் திருமதி. ஆனந்தி என்பவர், பிரதமர் ஜன்தன் வங்கி கணக்கு மூலம் ரூ. 500 பெற்று வருவதாகக் கூறியதுடன், அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் போன்ற மேலும் பல திட்டங்களைச் செயல்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.  உண்மையில், இத்தகைய நோக்கத்துடன் தான் சுயசார்பு இந்தியா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஊரகப்பகுதி வாழ்வாதாரத்துக்கு புத்துயிர் ஊட்டும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம், ஆதாயமிக்க வேலைவாய்ப்பை வழங்குகிறது. ஊரகப்பகுதி ஏழைகளுக்கு நிலையான வருமான ஆதாரமாக இது திகழும் என்பது திண்ணம்.

-------------

 

வி. ஹேமலதா, திருச்சி

ஜாக்குலின் மரிய செல்வி, திருச்சி

 

 



(Release ID: 1630483) Visitor Counter : 269


Read this release in: English