PIB Headquarters

“போதைப் பொருளை மறுப்போம், வாழ்வை வரவேற்போம்” மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் ஆன்லைன் போட்டிகள்

Posted On: 09 JUN 2020 1:57PM by PIB Chennai

ஆண்டுதோறும் ஜூன் 26-ம் தேதி, போதைப் பொருள் மற்றும் போதை மருந்துக் கடத்தலுக்கு  எதிரான சர்வதேச நாளாக நாடெங்கிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் பள்ளிகள், கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும், போதைப் பொருளுக்கு எதிரான பேரணிகள், பொதுக் கூட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் கண்காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம்.

     இந்த ஆண்டு கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள முடக்கநிலை காரணமாக இத்தகைய நிகழ்வுகளை நடத்துவது இயலாத காரியம் என்பதால், மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆன்லைனில் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

     தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் லட்சத்தீவுகளைச் சார்ந்த மாணவர்களும், பொதுமக்களும், இந்தி, ஆங்கிலம் அல்லது பிராந்திய மொழிகளில் பின்வரும் போட்டிகளில் பங்கேற்கலாம்:

  1. பாடல் இயற்றல் மற்றும் மியூசிக் வீடியோ பதிவு செய்தல்,
  2. போதைப் பொருளுக்கு எதிரான கோஷம் (ஸ்லோகன்)
  3. ஓவியம் வரைதல்

இந்தப் போட்டிகளின் மையப் பொருள் “போதைப் பொருட்களை மறுப்போம், வாழ்வை வரவேற்போம்” என்பதாகும்.

  தேசிய அளவிலான தேர்வுக் குழுவால்,   ஒவ்வொரு பிரிவிலும் பத்து படைப்புகள் இறுதி செய்யப்பட்டு, பிரிவுக்கு ஏற்றவாறு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.  இந்தப் படைப்புகள் இம்மாதம் 26-ம் தேதி பார்வைக்கு வைக்கப்படும்.

     competition20ncb[at]gmail[dot]com   என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, தமது முழுப் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணுடன்,  ஜூன் 12-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் வந்து சேருமாறு படைப்புகளை அனுப்ப வேண்டும். இந்தப் போட்டியின் முடிவுகள் ஜூன் 23-ம் தேதியன்று அறிவிக்கப்பட்டு, ஜூன் 26-ம் தேதியன்று பரிசுகள் வழங்கப்படும் என்று சென்னை போதைப் பொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் மண்டல இயக்குநர் திரு ஏ ப்ரூனோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

---



(Release ID: 1630414) Visitor Counter : 1234