PIB Headquarters

புதுச்சேரி / டாமன்- டையூ மக்களுக்கான ஒரே இந்தியா-உன்னத இந்தியா விநாடி-வினா போட்டி

Posted On: 09 JUN 2020 12:41PM by PIB Chennai

இந்தியா பல்வேறு மொழிகள், கலாச்சாரம், பண்பாடு, இனம், மதம் ஆகியவற்றால் பின்னப்பட்ட ஒரு நாடாக விளங்குகின்றது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்தியர்களைப் பிணைத்திருக்கும் இழையாகும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வசிக்கும் மக்களிடையே நட்புறவும் பரஸ்பர புரிதலுடன் கூடிய அங்கீகாரமும் இருந்தால்தான் நாடு வலிமை பெறும். இந்த நட்புறவைப் பேணவும் வளர்க்கவும்தான் மத்திய அரசு “ஒரே இந்தியா உன்னத இந்தியா” என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றது.

 

இந்தத் திட்டத்தின்கீழ் ஒரு மாநிலமானது/யூனியன் பிரதேசமானது மற்றொரு மாநிலத்துடன்/ யூனியன் பிரதேசத்துடன் இணையாக்கப்படுகின்றது(ஜோடி). இந்த இணைப்பாக்கல் அவ்வப்போது மாற்றப்பட்டு வரும். தற்போது தமிழ்நாடும் ஜம்மு & காஷ்மீர், லடாக் ஆகியனவும் இணைப்பிரதேசங்களாக உள்ளன. அதேபோல் புதுச்சேரி டாமன் டையூவுடன் இணையாக்கப்பட்டுள்ளது. இந்த இணையாக்கலின் நோக்கம் இரு மாநில மக்களும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் ஆதல், மற்றவரின் கலாச்சாரம், மொழி, கலைகள், உணவு வகைகள், கலைப்பொருட்கள், சுற்றுலாத் தலங்கள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளுதல், இதன் மூலம் புரிந்து அங்கீகரிக்கும் மனநிலையை உருவாக்குதல் என்பதே ஆகும். இப்படிப் புரிதல் அதிகமானால்தான் உண்மையான தேசிய ஒருமைப்பாடு சாத்தியமாகும்.

 

இணையாக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் கலை நிகழ்ச்சிகள் அடுத்த மாநிலத்தில் நடத்தப்படும். ஒரு மாநிலத்தின் மாணவர்கள் அடுத்த மாநிலத்துக்கு வந்து மாணவர்களுடன் கலந்து உரையாடுவார்கள். இப்படியான பரிவர்த்தனைகளுக்கு இந்தத் திட்டம் வழிவகுக்கின்றது. இதனால் நீண்ட நாட்களுக்கு நட்புறவு வலுப்படும். இந்த இணையாக்கல் இந்த மாதத்தோடு நிறைவு பெறுகின்றது. 1.7.2020 முதல் புதிய இணையாக்கல் பட்டியல் வெளியிடப்படும்.

 

“ஒரே இந்தியா உன்னத இந்தியா” திட்டத்தின் கீழ் இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் ஆன்லைனில் விநாடி வினா போட்டியை நடத்தி வருகின்றது. ஒரு மாநிலத்தின் போட்டியில் அதற்கு இணையாக அறிவிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் மக்கள் கலந்து கொள்ளலாம். தற்போது புதுச்சேரி மற்றும் டாமன் டையூ மக்களுக்கான போட்டி நடைபெற்று வருகின்றது.

 

quiz.mygov.in என்ற வலைத்தளத்தில் இந்தப் போட்டி நடைபெறுகின்றது. 01.06.2020 அன்று தொடங்கிய இந்தப் போட்டி 15.6.2020 அன்று நிறைவடைகின்றது. எந்த வயதினரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். இந்த வலைத்தளத்தில் நுழைந்தவுடன் ஏதாவது ஒரு முறையில் லாக்இன் செய்ய வேண்டும். ஏற்கனவே @gov.in அல்லது @nic.in கணக்கு வைத்திருப்பவர்கள் நேரிடையாக லாக்இன் செய்யலாம். மற்றவர்கள் இ-மெயில் / மொபைல் மூலம் ஓடிபி வரப்பெற்று லாக்இன் செய்யலாம். இல்லையென்றால் தங்களது சமூக ஊடக கணக்கின் மூலம் லாக்இன் ஆகலாம். பிறகு பெயர், இ-மெயில் முகவரி, பிறந்த தேதி, பாலினம் ஆகிய தகவல்களைத் தந்து பதிவு செய்து கொண்டு நேரிடையாகப் போட்டியில் பங்கேற்கலாம்.

 

போட்டியில் 20 கேள்விகள் கேட்கப்படும். ஏற்கனவே இருப்பில் உள்ள கேள்வித் தொகுப்பில் இருந்து ஏதாவது 20 கேள்விகள் தற்செயலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கேட்கப்படும். விநாடி-வினா போட்டிக்கான கால அவகாசம் 300 விநாடிகள் ஆகும். போட்டியில் வெற்றி பெறுபவர் இணை மாநிலத்துக்கு இலவசமாக சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.

 

புதுச்சேரி விநாடி வினா -2020 போட்டியில் டாமன் டையூ மக்களும் டாமன் டையூ -2020 போட்டியில் புதுச்சேரி மக்களும் பங்கேற்கலாம்.



(Release ID: 1630400) Visitor Counter : 254