PIB Headquarters

விவசாயிகள் இடையே பெரிதும் பிரபலமாகும் தேசிய தோட்டக்கலை இயக்கம்.


விவசாயிகள் நுண்ணீர் பாசனம் ஏற்படுத்த 100 சதவீத மானியம்.

Posted On: 08 JUN 2020 5:46PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றால் அமலில் உள்ள பொது ஊரடங்கால், காய்கறி போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனால், விலைகள் உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது. கிராமங்களிலும், நகரங்களிலும் தேவைப்படுவோருக்கு காய்கறிகளை விற்பனை செய்ய அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டன. தமிழக தோட்டக்கலைத் துறை வேன்கள் மூலம் திருச்சி உள்பட பல நகரங்களில் புத்தம் புதிய காய்கறிகளை விற்பனை செய்துவருகிறது. இந்த நடவடிக்கை விலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும், உள்ளூரிலேயே காய்கறிகள் கிடைக்கவும் பெரிதும் உதவிகரமாக உள்ளது. திருச்சியைச் சேர்ந்த இல்லத்தரசி திருமதி கீதா, ஊரடங்கின் ஆரம்ப கட்டத்தில், வழக்கமான சந்தைகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டபோது, காய்கறி வேன்கள் மூலமான விற்பனை மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றார். தற்காலிகச் சந்தைகள் இயங்கிய போதிலும், கொவிட்-19 அச்சம் காரணமாக அங்கு செல்வதை மக்கள்  தவிர்த்து வந்தனர். தோட்டக்கலைத் துறை வீட்டு மாடிகளில் காய்கறித் தோட்டம் அமைப்பதை ஊக்குவித்து வருகிறது. அதற்காக மாடித் தோட்டக் காய்கறி உபகரணங்களை அது வழங்கி வருகிறது. ஏராளமான மக்கள் மாடித் தோட்டங்களை அமைத்து, இயற்கை வேளாண் காய்கறிகளை வீட்டிலேயே பெறத் தொடங்கியுள்ளனர். பல்வேறு கீரை வகைகள், தக்காளி, பாகற்காய் மற்றும் பச்சைப் பட்டாணியைக் கூட மாடித் தோட்டத்தில் பயிர் செய்யலாம்.

ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கத்தின் கீழ், தேசிய தோட்டக்கலை இயக்கம் மாற்றுப்பயிர் மற்றும் உயர்தொழில்நுட்ப முறைகளைப் பிரபலப்படுத்துவதை ஊக்குவித்து வருகிறது. மத்திய அரசின்  ஆதரவுடனான இத்திட்டம் இப்பிராந்தியத்தில் தோட்டக்கலை முழு வளர்ச்சியைப் பெற உறுதி செய்துள்ளது. இத்திட்டம், திருச்சி , பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், தஞ்சாவூர் உள்பட தமிழகத்தின் 22 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டதின் கீழ், மா, வாழை, முந்திரி, மிளகாய், மஞ்சள் பூக்கள், நறுமணத் தாவரங்கள் ஆகியவற்றைப் பயிர் செய்ய முடியும்.

பெரம்பலூரில், தேசிய நுண்ணீர்ப் பாசனத்திட்டத்தின் கீழ், 4350 ஏக்கர் பரப்பளவில் சொட்டு நீர்ப் பாசனத்திற்கு ரூ. 30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் தோட்டக்கலை விவசாயிகள் பிரதமர் மைக்ரோ கிரிஷி சஞ்சாயி திட்டத்தின் கீழ், விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ், 19 சதவீதம் ஆதிதிராவிட விவசாயிகளுக்கும், ஒரு சதவீதம் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. நுண்ணீர்ப் பாசனத்தை ஊக்குவிக்கும் வகையில், சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படும். விவசாயிகள் தங்கள் பகுதி தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகி, ரேசன் அட்டை, நிலப்பட்டா, ஆதார் அட்டை போன்ற ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள தோட்டக்கலைத்துறை ஊக்குவித்து வருகிறது. இதற்கு விவசாயிகள் இடையே தற்போது பெரும் ஆதரவு நிலவுகிறது. 

ஶ்ரீரங்கத்தைச் சேர்ந்த மா விவசாயி பெரியசாமி, தனது மாந்தோட்டம்  காவிரி , கொள்ளிடம் நதிகளுக்கிடையே ஒரு ஏக்கரில் அமைந்துள்ளதாகத் தெரிவித்தார். அவர் ஒருபோதும் ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதில்லை என்றும், இயற்கை உரங்களுடன்,  காய்ந்த சருகுகளை உரமாகப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். இமாம் பசந்த் ரக மாம்பழங்களுக்கு ஶ்ரீரங்கம் பெயர் பெற்றதாகும். இந்த ரக மாம்பழங்கள் மிகுந்த சுவையுடையவை. வேறு எந்த ரகமும் இதனுடன் சுவையில் போட்டியிட முடியாது. இமாம் பசந்த் மாம்பழம் ஒரு கிலோ ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற ரகங்களை விட இந்த ரக மாம்பழங்கள் நல்ல விலையைக் கொடுப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இமாம் பசந்த், பங்கனபள்ளி, நீலம், கல்லாமணி, செந்தூரம், ருமானி, கேத்தாமரி, ஊர்காகாய் என பல்வேறு ரக மாம்பழங்களை விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைவிக்கின்றனர். இந்த தொற்று காலத்தில், ‘மாதா ஊட்டாத சோறை மாங்கனி ஊட்டும்’ என்ற, முன்பு பிரபலமான பழமொழி தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. அன்னையால் ஊட்டமுடியாத சோறையும் மாம்பழம் அதன் சுவை, சத்து காரணாமாக ஊட்டும் என்பது இதன் பொருளாகும்.

கொவிட்-19 பெருந்தொற்று, நமக்கு இயற்கை உணவு மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவின் அவசியத்தை உணர்த்தியுள்ளது. நமது உணவில் பருப்பு வகைகளுடன், எளிதில் கிடைக்கும் முருங்கைக் கீரையைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அதில் உள்ள இரும்புச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது என்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். விட்டமின்–சி அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் ,அத்துடன் பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.

---------------------------------------------------------------------------------------

 

 

 

மாடித்தோட்டத்தில் விளையும் கீரை

 

 

 

ஶ்ரீரங்கம் மாங்கனி.



(Release ID: 1630241) Visitor Counter : 275


Read this release in: English