PIB Headquarters

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதையடுத்து, உள்ளூரிலேயே உள்ள தொழிலாளர்களைப் பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு தொழில் துறையினரை அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன.


கிராமப்புறக் கைவினைப் பொருள்களையும், தொழில்துறைகளையும் ஊக்குவிப்பதற்காகப்
பல திட்டங்கள்.

Posted On: 07 JUN 2020 7:27PM by PIB Chennai

கோவிட் 19 பொது முடக்கம் உலக அளவில் உழைக்கும் மக்களிடையே நிச்சயமற்ற தன்மையையும், வேலை இழப்பையும் உருவாக்கியுள்ளது. இந்தியாவில் கோவிட்-19 பொதுமுடக்கம் காரணமாக தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள தினக்கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பொதுமுடக்கம் காரணமாகப் பணியிழந்த அந்தத் தொழிலாளர்கள், உணவுக்கு அரசு தரும் இலவச ரேஷன் பொருள்களை நம்பியிருந்தார்கள். வேறு மாநிலங்களில் சிக்கித்தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கும், தங்கள் கிராமங்களுக்கும் திரும்பிச் செல்வதற்கு ஏற்பாடு செய்து தருமாறு அரசுகளை கேட்டுக் கொண்டார்கள். தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்த புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்கள் உள்ள ஜார்கண்ட், உத்திரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்புவதற்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை மத்திய அரசு இயக்கியது. வெள்ளிக்கிழமை வரை இந்திய ரயில்வே 4155 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலம், 57 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை, அவர்களது சொந்த ஊருக்கு ஏற்றிச்சென்றுள்ளது.

இதேபோல் சிறப்பு ரயில்கள் மூலமாக மகாராஷ்டிராவில் இருந்த புலம்பெயர் தொழிலாளர்கள், தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் திருப்பி அழைத்துவரப்பட்டனர்.

 

கிராமப்புற கைவினைப் பொருள்களையும், தொழில்துறைகளையும் ஊக்குவிப்பதற்காக 1.4 லட்சம் பேருக்கு 300 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிராமப்புற மாற்றுத்திட்டத்தின் திருச்சி நிர்வாகச் செயலர் திரு.ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட் கூறினார். கோவிட்-19 பொதுமுடக்கம் காரணமாக மற்ற மாநிலங்களில் வேலை வாய்ப்பை இழந்து தமிழ்நாடு திரும்பியுள்ளவர்களுக்கு, தொழில் தொடங்குவதற்கு ஒரு லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்படுகிறது. கோவிட் - 19 உதவித் திட்டத்தின் கீழ் ஸ்டார்ட்-அப் நிதி அளிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 167 இளைஞர்களுக்கு கடன் உதவி அளிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்கு இதரத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் இந்தியாவிற்குத் திரும்பி வந்து இங்கேயே தங்கி உழைத்து, தங்கள் வாழ்க்கையை நடத்தலாம் என்று எண்ணினால், அதை சமாளிப்பது கூடுதல் சவாலாகும்.

 

 

கோவிட்-19 காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை, இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வருவதற்காக வந்தே பாரத் விமானங்கள் இயக்கப்பட்டன. கோவிட்-19 நோய் பரவுகின்ற அச்சத்தின் காரணமாக மக்கள் இந்தியாவிற்கு திரும்பிவர முயற்சிக்கின்றனர்;எங்களில் பலர் இங்கேயே தங்கிப் பணிபுரிய எண்ணுகிறோம். ஏனென்றால் நாங்கள் எங்கள் குடும்பங்களுக்காக சம்பாதிக்க வேண்டியிருக்கிறது என்று பக்ரைனில் பணியாற்றும் திரு.ராதாகிருஷ்ணன் கூறினார். அவர்கள் தங்கள் குடும்பங்களுக்காக வெளிநாடுகளில் மிகக் கடினமாக உழைத்துக் கொண்டிருந்தார்கள் என்பதும், நம் நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தந்தார்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். குவைத்தில் தங்க நேரிட்ட 117 இந்தியர்கள், குவைத் ஏர்வேஸ் விமானம் மூலமாக திருச்சிராப்பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். சனிக்கிழமையன்று மற்றொரு விமானம் மூலம் 104 இந்தியர்கள் குவைத்திலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு வந்து சேர்ந்தனர். இந்த விமானம் காய்கறிகள் உட்பட 6335 கிலோ எடை கொண்ட விரைவில் அழுகிவிடக்கூடிய சரக்குகளுடன் குவைத்துக்கு திரும்பிச் சென்றது. இந்தியாவில் தங்க நேரிட்ட 108 மலேசியப் பயணிகளுடன் மலிண்டோ ஏர் விமானம் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திலிருந்து, மலேசியா புறப்பட்டுச் சென்றது. வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், கோவாவில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு ஜூன் 11ம் தேதியும், மதுரைக்கு ஜூன் 17ஆம் தேதியும், கோயம்புத்தூருக்கு ஜூன் 19ம் தேதியும் பயணிகளை ஏற்றிக் கொண்டு வரவிருக்கிறது. ஜெட்டா, குவைத், நைரோபி போன்ற பல நகரங்களில் இருந்து 910 இந்தியர்கள் சென்னை டெல்லி, மும்பை, கொச்சி, கயா போன்ற பல நகரங்களுக்கு சனிக்கிழமைன்று வந்து சேர்ந்தனர்.

 

சொற்ப வருவாயுடன் வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பியுள்ள இந்த இந்தியர்களுடன், மற்ற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்துள்ள தொழிலாளர்களும் வேலை தேடி வருகின்றனர். குறிப்பாக தொழிலாளர்களுக்கு எந்தவிதமான சேமிப்பும் இல்லை என்பதால், அவர்களது வாழ்வாதாரத்திற்காக அவர்களுக்கு வேலை நிச்சயம் தேவை என்ற நிலை உள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் மாநிலத்தில் இருந்து வெளியேறி விட்டபடியால், உள்ளூரில் உள்ள தொழிலாளர்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு, தொழில்துறையினரை தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். தொழில்துறைகளுக்கும் கால்நடைப் பராமரிப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உட்பட அனைத்துத் துறைகளிலும் உள்ள விவசாயிகளுக்கும் ஆத்மநிர்பார் பாரத் - சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பல பொருளாதார உதவித் திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. உலக அளவிலான சுகாதார நெருக்கடி என்பது எந்த ஒரு தேசத்துக்குமே மிகப் பெரிய சவாலாகும். பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலைக்கு எதிராகப் போராடுவதற்காக உலகில் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியா, ஒரு பெரிய அடியை நம்பிக்கையுடன் முன்னெடுத்து வைத்துள்ளது.

 

 

திருச்சிராப்பள்ளி சந்திப்பில் ஷ்ராமிக் சிறப்பு ரயில்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்

 

திருச்சி விமான நிலையத்தில் குவைத் ஏர்வேஸ் விமானம்



(Release ID: 1630082) Visitor Counter : 240


Read this release in: English