PIB Headquarters

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப்பணிகள் மீண்டும் தொடங்கியிருப்பது ஊரக வாழ்வாதாரத்துக்கு புத்துயிர் அளித்துள்ளது


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் ரூ.101500 கோடி, இந்த நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

Posted On: 06 JUN 2020 3:05PM by PIB Chennai

கே தேவி பத்மநாபன், கள விளம்பர அலுவலர், திருச்சிராப்பள்ளி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் கீழ் இயங்கும்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், கிராமப்புற மக்களுக்கு 100 நாட்களுக்கு வேலையையும், அதற்குண்டான கூலியையும் வழங்குகிறது. கிராமப்புற மக்கள் பலருக்கு வாழ்வாதாரத்தின் அடிப்படையாக விளங்கும் இது, மத்திய அரசின் மிகவும் பிரபலமான மிக முக்கியத் திட்டங்களில் ஒன்றாகும். கொவிட்-19 காரணமாக மார்ச் மாதத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டன. பொதுமுடக்க விதிகளில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் வேலைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இது ஊரக வாழ்வாதாரத்துக்குப் புத்துயிர் அளித்துள்ளது. இந்த முயற்சியை முழு மனதோடுப் பாராட்டும் மக்கள், கூலிகளை உயர்த்தியதற்காக அரசுக்கு நன்றி கூறுகின்றனர். தண்ணீர் சேமிப்பு, நீர்ப்பாசனம் மற்றும் விவசாயம் தொடர்பான வேலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் வேலைகளுக்கு இந்த நிதி ஆண்டில் ரூ 61,500 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் அறிவித்திருந்தது. இது மட்டுமில்லாது, கிராமப்பகுதிகளில் உள்ள உதவி தேவைப்படும் பணியாளர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பை வழங்க சுய-சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ 40,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் வேலைகளுக்கு 69 நபர்கள் வந்திருப்பதாகவும், அவர்கள் சமூக விலகல் விதிகளைப் பின்பற்றி வேலை செய்வதாகவும் திருச்சி தொட்டியத்தில் உள்ள மணமேடு கிரமாத்தை சேர்ந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணி மேற்பார்வையாளரான திரு. மாணிக்கம் கூறினார். திருச்சி மாவட்டத்தில் உள்ள பூனம்பாளையத்தை சேர்ந்த திருமதி. நித்திலா, பொதுமுடக்க விதிகள் தளர்த்தப்பட்டவுடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் வேலைகள் மறுபடியும் தொடங்கியது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். ஒருவரிடம் இருந்து மற்றொருவர் மூன்று அடி தூரத்தில், பாதுகாப்பான முறையில் அவர்கள் வேலை செய்வதாக அவர் தெரிவித்தார். இன்னும் அதிக வேலை நாட்களை வழங்குமாறு அரசை வலியுறுத்தும் அவர், அப்படி அளிக்கப்பட்டால் அதிகக் கூலியைத் தங்களால் சம்பாதிக்க முடியும் என்று கூறுகிறார்.

 

கரூர் குமரமங்கலத்தை சேர்ந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணி மேற்பார்வையாளரான திருமதி. தமிழரசி, தனது பஞ்சாயத்தில் 93 நபர்கள் வேலை செய்வதாகவும், பாதுகாப்பான இடைவெளி விதிகளைப் பின்பற்றி அவர்கள் பணியாற்றுவதாகவும் கூறினார். முகக்கவசத்தை அணிந்து தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிகளை மேற்பார்வையிடுவதாக அவர் தெரிவித்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிகளை மீண்டும் தொடங்கியதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார். கரூரில் உள்ள ஈச்சங்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த திருமதி. சுமதி, பொதுமுடக்கத்துக்குப்பின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிகளை மீண்டும் செய்வது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். கடினமான நேரத்தில் உயர்த்தப்பட்ட கூலியைப் பெறுவது பணியாளர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார். கொவிட்-19 பொதுமுடக்கத்தின் போது அவர்களுக்கு வேறு எந்த வேலையும் இல்லாததால், அவர்களது குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.

 

கரூர் தோகமலை களுகூர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணி மேற்பார்வையாளரான திருமதி. மகேஸ்வரி, தலா இருபது நபர்களைக் கொண்ட பிரிவுகளாக வேலை நடப்பதாகத் தெரிவித்தார். கரூர் நாகனூர் கிராமத்தை சேர்ந்த திருமதி. நாகேஸ்வரி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணி தனது குடும்பத்துக்கு வருமானம் அளிப்பதால், தொடர்ந்து வேலையை வழங்குமாறு அரசைக் கேட்டுக்கொண்டார். கரூர் ஐயர்மலையை சேர்ந்த திருமதி. பாக்கியம்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கியதற்கு அரசுக்கு நன்றித் தெரிவிக்கும் அதே வேளையில், மாதத்துக்கு ஒரு வாரம் மட்டுமே தனக்கு பணிகள் கிடைப்பதால், வேலை நாட்களை அதிகரிக்குமாறு அரசை வலியுறுத்தினார்.     

 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியின் கீழ் ஒரு நாள் வேலைக்கான கூலி, தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் முதல் ரூ 256-ஆக உயர்த்தப்பட்டது. தங்களுக்கு நிலையான வருமானம் கிடைக்குமென்பதால், வேலை நாட்களை அதிகரிக்குமாறு கிராமப்புறப் பணியாளர்கள் அரசை வலியுறுத்துகின்றனர். கொவிட்-19 பொதுமுடக்கத்தினால், நகரங்களில் இருந்து தங்களது கிராமங்களுக்கு மக்கள் திரும்பியுள்ளதன் காரணமாக அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு ரூ 40000 கோடியை அரசுக் கூடுதலாக ஒதுக்கியுள்ளது. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் பாதுகாக்கிறது. சுய-சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ் பல்வேறுத் திட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களுக்கு வருவாயை வழங்கத் தனது சிறப்பான முயற்சியை அரசு எடுத்து வருகிறது.

1

 

2

 

 

 

***



(Release ID: 1629894) Visitor Counter : 314


Read this release in: English