PIB Headquarters

புதுச்சேரியில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரெயிலில் ஊர் திரும்புகின்றனர்

Posted On: 05 JUN 2020 3:37PM by PIB Chennai

மார்ச் 25 ஆம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கால் அவரவரும் தாம் இருந்த இடங்களிலேயே இருக்க நேரிட்டது. போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் படிக்கச் சென்ற மாணவர்கள், சுற்றுலா சென்றவர்கள், வேலை செய்யச் சென்ற தொழிலாளர்கள், யாத்ரீகர்கள் எனப் பலரும் தங்கள் சொந்த மாநிலத்திற்குச் செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டனர்.  இவர்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலைமைதான் மிகவும் மோசமானதாக இருந்தது.  வேலையும் இல்லாமல் வருமானமும் இல்லாமல் இவர்கள் திண்டாடினர். தங்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற பயத்திலும் ஊரில் தம் குடும்பத்தாரும் உறவினர்களும் எப்படி உள்ளனரோ என்ற கவலையிலும் இருந்தனர். வேலை செய்யும் மாநிலத்தில் இருந்து தம் சொந்த மாநிலங்களுக்குச் சென்று விடலாம் என்று விரும்பினர்.  கிடைத்த வாகனங்களிலும் கால்நடையாகவும் சொந்த ஊருக்குத் திரும்ப முற்பட்டனர். 

 

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இந்த நெருக்கடி நிலைமையை கவனத்தில் எடுத்துக் கொண்ட மத்திய அரசு மே 1ஆம் தேதி முதல் இவர்களை அவரவர் சொந்த மாநிலத்திற்கு திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டது.  மாநில அரசுகளுடன் இணைந்து பேருந்து மற்றும் ரெயில் மூலம் இவர்களைத் திருப்பி அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது.  ரெயில்வே அமைச்சகம் இதற்காகவே ஷ்ரமிக் சிறப்பு ரெயில்களை மே 1ஆம் தேதி முதல் இயக்கத் தொடங்கியது.  ஜுன் 3ஆம் தேதி வரை 4,197 ஷ்ரமிக் சிறப்பு ரெயில்கள் மூலம் 58,00,000 பயணிகள் சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர்.  இன்னமும் இந்த ஷ்ரமிக் சிறப்பு ரெயில்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களோடு பயணப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

புதுச்சேரி அரசும் தனது மாநிலத்தில் பணியாற்றுகின்ற வேறு மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கும் முயற்சியைத் தொடங்கியது.  இதற்காக சிறப்பு இணையதளம் (welcomeback.py.gov.in) ஒன்று உருவாக்கப்பட்டது.  வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட புதுச்சேரி மக்கள் மற்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் சிக்கிக் கொண்ட புதுச்சேரி மக்கள் புதுச்சேரி திரும்பி வருவதற்காக இதில் பதிவு செய்து கொள்ளலாம்.  அதேபோன்று புதுச்சேரியில் சிக்கிக் கொண்ட இந்தியாவின் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்குச் திரும்பிச் செல்வதற்காகவும் பதிவு செய்து கொள்ளலாம். அந்த வகையில்தான் புதுச்சேரியில் வேலை செய்கின்ற பிற மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காகப் பதிவு செய்தனர்.

 

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பதிவு செய்வதற்காக இந்த இணையதள வசதியைத் தாண்டி உதவி மையங்களும் ஏற்படுத்தப்பட்டன. இணைய தளத்தில் பதிவு செய்யும் அளவிற்கு தகவல் தொழில்நுட்பம் அறியாத தொழிலாளர்களுக்கு இந்த உதவி மையங்கள் சேவை ஆற்றின.  இந்தத் தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்கின்ற 10 தொழிற்சாலைகளிலிம்கூட உதவி மையங்கள் அமைக்கப்பட்டன.  தொழிலாளர்துறை அலுவலக வளாகத்தில் இயங்கும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒரு உதவி மையமும் அமைக்கப்பட்டது.  பதிவு செய்தவர்களுக்கு உரிய பரிசீலனைகளுக்குப் பிறகு இ-பாஸ் வழங்கப்பட்டு வருகின்றது. இந்திய ரெயில்வேயின் ஷ்ரமிக் சிறப்பு ரெயில் சேவை மூலம்  இவர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

 

முதல் ஷ்ரமிக் சிறப்பு ரெயில் 16.5.2020 அன்று புதுச்சேரியில் இருந்து புறப்பட்டது. பீகார், உத்திரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 1168 பேர் இந்த ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். காரைக்காலில் இருந்து 355 பேரும் புதுச்சேரியில் இருந்து 813 பேரும் இதில் மகிழ்ச்சியுடன் பயணித்தனர்.

இடையில் 23-5-2020ல் ஜம்மு, காஷ்மீர் மற்றும் இமாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மொத்தம் 71 பேர் இணைப்பு ரெயிலில் சேர்ந்து கொள்வதற்காக பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

இரண்டாவது ஷ்ரமிக் சிறப்பு ரெயில் ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு இயக்கப்பட்டது. 29-5-2020ல் அதிகாலை 2 மணிக்குப் புறப்பட்ட இந்த ரெயிலில் புதுச்சேரியில் இருந்து 691 பேரும் காரைக்காலில் இருந்து 269 பேரும் என மொத்தமாக 960 பேர் பயணப்பட்டனர். 

 

மூன்றாவது ஷ்ரமிக் சிறப்பு ரெயில் நேற்று (4-6-2020) இரவு மேற்கு வங்கத்திற்கு புறப்பட்டுச் சென்றது.  இதில் மேற்கு வங்கத்திற்கும் அசாமிற்கும் செல்ல வேண்டிய புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 1119 பேர் பயணம் மேற்கொண்டனர்.  காரைக்காலில் இருந்து 291 பேரும் புதுச்சேரியில் இருந்து 828 பேரும் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டு இருக்கின்றனர். 

 

நேற்று புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புலம்பெயர் தொழிலாளர்கள் பேருந்துகள் மூலம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கத்திற்கு அழைத்து வரப்பட்டு கோவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.  பிறகு அவர்களுக்கு இலவச ரெயில் பயண டிக்கெட், இ-பாஸ், முகக்கவசம், உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.  பிறகு இவர்கள் அனைவரும் புதுச்சேரி ரெயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறப்பு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.  முதலமைச்சர் திரு வே.நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் அவர்களை வழியனுப்பி வைத்தனர். 

 

நேற்று பயணப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் சிலரிடம் நாம் கலந்துரையாடினோம்.  பலரும் சிறிது காலம் சென்ற பிறகு புதுச்சேரிக்கு வேலைக்காகத் திரும்பி வருவோம் என்று உறுதிபடக் கூறினர். 

 

மேற்குவங்கம் மைதான்பூரைச் சேர்ந்த ரஞ்சன் மைத்தி நான் நிச்சயம் திரும்பி வருவேன் என்றும் நான் சொந்த ஊருக்குச் திரும்பிச் செல்ல உதவுகின்ற அரசுக்கு நன்றி என்றும் தெரிவித்தார்.  அதே ஊரைச் சேர்ந்த பிக்காஸ் ஹஜிரா நான்கு ஆண்டுகளாக தான் இங்கு வேலை செய்வதாகவும் மீண்டும் திரும்பி வந்து இங்கு வேலையில் சேர்வேன் என்றும் கூறினார். அசாம் மாநிலம் கௌகாத்தியைச் சேர்ந்த நர்ஜுல் இஸ்லாம் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் போய்விடுமோ என்று பயந்து கொண்டு இருந்த சூழலில் அரசே எங்களை அனுப்பி வைப்பதில் மகிழ்ச்சி எனத் தெரிவித்தார்.  அசாமைச் சேர்ந்த மற்றொரு புலம்பெயர் தொழிலாளி ஜோஹுர் அலி புதுச்சேரிக்கு தான் நிச்சயம் திரும்பி வந்து விட்ட வேலையைத் தொடர்வேன் என்று உறுதிபடக் கூறினார்.

 

சொந்த மாநிலம் செல்ல விரும்பும் எஞ்சியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்கின்றன.

*

ரஞ்சன் மைத்தி, மைதான்பூர், மேற்கு வங்கம்

பிரகாஷ் ஹஸ்ரா, மைதான்பூர், மேற்கு வங்கம்

நர்ஜுல் இஸ்லாம், கவுஹாத்தி, அசாம்

ஜோஹூர் அலி, அசாம்

நேற்று இந்திராகாந்தி விளையாட்டரங்கத்துக்கு வந்து சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பதிவு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் நடைபெறுகின்றன.

முதலமைச்சர் திரு. வே. நாராயணசாமி  மேற்கு வங்கம் செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களைச் சுமந்து செல்லும் ரெயிலைக் கொடியசைத்து அனுப்பி வைக்கின்றார்.



(Release ID: 1629868) Visitor Counter : 199