PIB Headquarters

ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை – அனைவருக்கும் உணவு பாதுகாப்பை உறுதிசெய்யும் தொலை நோக்கு கொண்ட நடவடிக்கை.

Posted On: 02 JUN 2020 7:34PM by PIB Chennai

கோவிட்-19 பொது முடக்கம் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சிகளிலிருந்து இந்தியா மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறது. கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுவதன் காரணமாக இது நிகழ்கிறது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மிக முக்கியமான சவாலாக இருப்பது உணவு பாதுகாப்பாகும். ஏனென்றால், பொதுமுடக்கக் காலத்தின் காரணமாக மிகவும் பாதிப்படைந்துள்ளது விவசாயம் மற்றும் விவசாயம் தொடர்பான துறைகளைச் சார்ந்த மக்களே ஆவர். பல்வேறு துறைகளிலும் உள்ள மக்கள் வேலை இழந்து விட்டார்கள். வருமானமும் இல்லை. அனைத்துத் துறைகளையும் சார்ந்த, இன்னலுக்கு ஆளாகியுள்ள மக்களை மீட்டெடுப்பதற்காக மத்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாய் உதவித்தொகையை ஆத்ம நிர்பார் பாரத்  சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் அறிவித்தது. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா திட்டம் பொதுமுடக்கத்திற்குப் பிறகு உடனடியாக அறிவிக்கப்பட்டது. பிரதமர் ஜன் தன் திட்டத்தின் கீழ்  கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு 500 ரூபாய் வழங்குதல்; ஒவ்வொரு குடும்பத்துக்கும் மூன்று இலவச எரிவாயு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்குவது; பிரதமர் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் முன்கூட்டியே 2000 ரூபாய் கடன் வழங்குவது; ஆகியவை பிரதமர் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகள் ஆகும். இவை அனைத்திலும் மிக முக்கியமான முடிவு, ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசியும் இதர அத்தியாவசியப் பொருள்களும் வழங்குவதாகும். தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, எண்ணெய், பருப்பு மற்றும் 1000 ரூபாய் பண உதவி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் பணிபுரிந்து வந்த பிற மாநிலத் தொழிலாளர்கள் வேலை இந்ததால் மாவட்ட நிர்வாகம், தொண்டு நிறுவனங்கள் போன்றோர் அளிக்கும் ஆதரவைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. தமிழக அரசு உறுதி அளித்திருந்த போதிலும், உதவி முகாம்கள் நடத்தி இருந்த போதிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் இல்லம் திரும்பத் தொடங்கினர். இந்த நிலையை அகற்ற வேண்டும் என்பதற்காக மதிய உணவு அமைச்சகம் ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை என்ற திட்டத்தை மார்ச் 2021க்குள் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது ஏற்கனவே கேரளா, ஆந்திரா, கர்நாடகா உட்பட 17 மாநிலங்கள், நாட்டில் எங்கும் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய ரேஷன் அட்டை திட்டத்தை நடைமுறைப்படுத்தி விட்டன.

இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகள் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தங்களுடைய தேசிய ரேஷன் அட்டையைக் காண்பித்து நாட்டின் எந்த இடத்திலிருந்தும் எந்த ரேஷன் கடையில் இருந்தும் உணவு தானியங்களைப் பெற்றுக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் மாநிலம் முழுமைக்கும் ஒரே ரேஷன் அட்டைத் திட்டம் ஏப்ரல் 1 முதல்  நடைமுறைப்படுத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று நிலைமை காரணமாக இது ஒத்திவைக்கப்பட்டது. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 6.74 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன், 2 கோடியே 8 லட்சத்து 22 ஆயிரத்து 411 குடும்ப அட்டைகள் உள்ளன. 34 ஆயிரத்து 773 நியாய விலைக்கடைகள் உள்ளன. தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் அட்டைகளும், டிஜிட்டல் ஸ்மார்ட் அட்டைகளாக 2017ஆம் ஆண்டில் மாற்றப்பட்டுவிட்டன. இந்த டிஜிட்டல் அட்டைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுவிட்டன. தேசிய அளவிலான இணைப்புக்கு இது அவசியமாகும். பாயின்ட் ஆஃ சேல் கருவிகளைப் பயன்படுத்தியே பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

 

ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை என்ற முறை அரசின் தொலைநோக்குப் பார்வையை தெரிவிக்கும் ஒரு திட்டம் என்று மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற திரு.ராதாகிருஷ்ணன் கூறினார். அவர் கேரளாவை சேர்ந்தவர். கடந்த 30 வருடங்களாக தமிழ்நாட்டில் வசித்து வருவதாக அவர் கூறினார். அவரிடம் தற்போது தமிழ்நாட்டின் ரேஷன் அட்டை உள்ளதாகவும், தமது சொந்த மாநிலமான கேரளாவில் சென்று வசிக்க எண்ணி உள்ளதாகவும் அவர் கூறினார். ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் நாட்டில் அவர் எங்கு தங்கினாலும் அந்த ரேஷன் அட்டையை உபயோகித்துக் கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

 

அரசுப் பணியாளரான திருமதி. சித்ரா, அடிக்கடி பணியிடமாற்றம் செய்யப்படுகின்ற அரசு ஊழியர்களுக்கு, ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை என்ற திட்டம் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும், பல நேரங்களில் பணியிட மாற்றங்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கும், சில சமயங்களில் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு இருக்கும் என்று கூறினார்.

[

பெரம்பலூரைச் சேர்ந்த திருமதி நீலா, எந்த நியாய விலைக்கடையில் இருந்தும் ரேஷன் பொருள்களை வாங்கிக்கொள்ள முடியும் என்ற வகையில், இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளது என்று கூறினார். ஒரே நகர்ப்புறத்தில் வசித்தாலும், ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு மாறும் போது முகவரி மாற்றம் தேவையாக இருந்து வந்தது. ஆனால் ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை என்ற திட்டம் வந்த பிறகு நாம் ரேஷன் அட்டையில் முகவரி மாற்ற வேண்டிய அவசியமில்லை.

 

திருச்சியைச் சேர்ந்த திரு. அனந்த கிருஷ்ணன், கோவிட் பொதுமுடக்கக் காலத்தின் போது புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்த பரிதாப நிலையைச் சுட்டிக்காட்டினார். ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்கி, அவர்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப அரசு வகை செய்தது என்றாலும் அவர்களுக்கான ரேஷன் கார்டுகளை உபயோகித்து அவர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் உணவுப்பொருள்களை பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலை இருந்திருந்தால் அவர்கள் தாங்கள் எங்கே தங்கி இருந்தார்களோ, அங்கேயே தொடர்ந்து தங்கி இருந்திருப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு நிலையான வருமானம் கிடையாது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை இணைப்பு வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் எங்கு பணிபுரிகிறார்களோ, அங்கு அந்த அட்டையை அவர்கள் உபயோகித்துக் கொள்ளலாம். இது கணினிமயமாக்கப்பட்டு விட்டது இதைத் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பில்லை.

 

பொது விநியோக அமைப்புக் கடைகளிலிருந்து பொருள்களை வாங்கும் போது பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்திகள் வந்துவிடுகின்றன என்று திரு. ருள் கூறினார். இதனால் கள்ளச்சந்தையில் ரேஷன் பொருள்ள் விற்கப்படுகின்றன என்ற புகார்கள் இருக்காது. எல்லாம் கணினிமயமாக்கப்பட்ட ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டு விடுகின்றன என்றும் அவர் கூறினார்

 

உணவுப் பொருள்கள் தங்கு தடையின்றி வழங்கப்படுவதை உறுதிசெய்ய இந்திய ரெயில்வே அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. நீடாமங்கலம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற இடங்களில் இருந்து, மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கும் பொதுவிநியோக முறை கடைகளுக்கும் இதர கடைகளுக்கும் வழங்கப்படுவதற்காக, சரக்கு ரயில்களில் உணவு தானியங்கள் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டன. ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை என்பது உணவுப்பாதுகாப்பை நடைமுறைப்படுத்துவதற்கு நிச்சயம் உதவியாக இருக்கும். குறிப்பாக பொதுமுடக்கக் காலத்தின்போது தங்கள் சொந்த நகரங்களிலிருந்து வேறு இடங்களில் உள்ள சிக்கித்தவிக்கும் மக்களுக்கு இது பேருதவியாக இருக்கும்.

 

 

நீலா   பெரம்பலூர்

 

திருச்சி ரேஷன் கடையொன்றின் முன் ரமேஷ் பாபு

திருமதி சித்ரா


 

மயிலாடுதுறையில் ஏற்றப்படும் அரிசி மூட்டைகள்

 



(Release ID: 1628745) Visitor Counter : 255