PIB Headquarters

பொது முடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கொவிட்-19 பரவாமல் தடுக்க தீவிர தனிநபர் சுகாதாரத்தில் கவனம் திரும்பியுள்ளது.


பொது இடங்களில், கைகளால் தொடாத , சோப்புத் தண்ணீர் வாஷ் பேசின்களை பொருத்த அரசு அமைப்புகள் திட்டம்.

Posted On: 01 JUN 2020 6:38PM by PIB Chennai

ஞாயிறு அன்று  மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், தண்ணீரை சேமிப்பது பற்றி வலியுறுத்தினார். நாடு முழுவதும் கடும் கோடை நிலவி வரும் சூழலில் தண்ணீர் சேமிப்பு மிகவும் முக்கியமானதாகும். அத்துடன், கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக நாடு போராடி வரும் நிலையில், தொற்று பரவாமல் தடுக்க, கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் அடிக்கடி கழுவுமாறு  அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் இருக்கும் சாதாரணமான தண்ணீர்க் குழாய்களைத் திறக்கும் போதும் , மூடும்போதும் நாம் கைகளைப் பயன்படுத்துவதால், நோய்த்தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது. தண்ணீர் வீணாவதைத் தடுத்து அதைச் சேமிப்பதற்கு,  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், பாதுகாப்பான கருவிகளை உருவாக்க முடியும்.

கைகளால் தொட வேண்டிய அவசியம்  இல்லாத வகையில் சோப்பும், தண்ணீரும் வரும் உபகரணத்தை திருச்சி ரயில் பெட்டி டிப்போவும், சரக்கு டிப்போவும் உருவாக்கியுள்ளன. இது, கொவிட்-19 பரவுவதைத் தீவிரமாகத் தடுக்கும். ரயில்வே தொழிலாளர்கள் கைகளைக் கழுவ தண்ணீர் குழாய்களை அடிக்கடித் தொடவேண்டி இருப்பதால், இந்த எந்திரத்துவம் தொற்றுப் பரவலைத் தடுக்க பெரிதும் பயன்படும். இது தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், விலையும் குறைவானது. தூய்மைத் திட்டத்தின் கீழ், சோப்புத் தண்ணீரை வெளியேற்ற, காலால் இயக்கும் இரட்டை பேசின் மாதிரிப் பெடல் ஒன்றை திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை வடிவமைத்துள்ளது. பணிமனையில் கிடைக்கும் மறுபயன்பாட்டுப் பொருள்களைக் கொண்டு, குழாயுடன் கூடிய தண்ணீர் வெளியேற்றும் இந்த உபகரணம் தயாரிக்கப்பட்டுள்ளது. காலால் இயக்கும் பெடல் மூலம் சோப்பு கலந்த தண்ணீர் வெளிவருவதால், கைகளைப் பயன்படுத்துவது தவிர்க்கப்படுகிறது. கைகளைப் பயன்படுத்த தேவையில்லாத, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த வாஷ் பேசின்கள், பல்வேறு வடிவங்களில், ரயில்வே மருத்துவமனைகள், ரயில்வே காவல் நிலையங்களுக்கு பொன்மலை ரயில்வே பணிமனை விநியோகித்து வருகிறது.

இதேபோல, திருச்சியைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனம், ஒரு மின்சாதன நிறுவனத்துடன் சேர்ந்து காலால் இயக்கும் கைகழுவும் அமைப்பை வடிவமைத்துள்ளது. தன்னார்வ அமைப்பின் இயக்குநர் சுப்புராமன், இதில் வெளியாகும் தண்ணீர் தோட்டத்துக்குப் பயன்படுத்தப்படுவதால், அது வீணாகாது என்றார். திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களில், இந்த உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் இது பெரும் பயனைத் தரும். எனவே, திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்டத்தின் 14 வட்டார அலுவலகங்களிலும் கைகளால் தொடாத வாஷ் பேசின்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. சுயசார்பு இந்தியா என்னும் நமது பிரதமரின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், பரவலாக பொது இடங்களில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இது போன்ற அமைப்புகளைப் பொருத்த பலரும் முன்வந்துள்ளனர்.

பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற புதுமையான உபகரணங்களைக் கண்டுபிடிப்பதற்கு  சுயசார்பு இந்தியாவின் நோக்கமே காரணமாகும். திருச்சி நகரில், கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சாலைகளில் கிருமிநாசினி தெளிக்க உயர் ஆற்றல் கொண்ட தெளிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. ராணிப்பேட்டை பிஎச்இஎல் நிறுவனத்திடம் இருந்து இந்தத் தெளிப்புக் கருவிகளை திருச்சி மாநகராட்சி வாங்கியுள்ளது. மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்க இவை பயன்படுத்தப்படுகின்றன.

சிகிச்சையை விட தடுப்பு முறையே சிறந்தது என்ற குறிக்கோளை அடைய, கொவிட்-19 பரவலைத் தடுத்து நிறுத்துவது அவசியமாகும். தடுப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த உள்நாட்டு முறைகள் மற்றும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பொது முடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், முகக்கவசங்களை அணிதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல் ஆகிய இரண்டு விதிமுறைகள் தொற்று பரவாமல் தடுப்பதற்கு பெரிதும் உதவும் என்பதால், இது குறித்து தீவிர விழிப்புணர்வு உருவாக்கப்பட்டு வருகிறது.

 

 

என்ஜிஓ இயக்குநர் சுப்புராமனுடன் டிஆர்டிஏ திட்ட இயக்குநர் சங்கர்

திருச்சியில் பொது இடத்தில் அமைக்கப்பட்டுள்ள காலால் இயக்கும் வாஷ் பேசின்

 

ரயில்வே கோச்சிங் டிப்போவில் பெடல் வாஷ் பேசின்

திருச்சி டிஆர்டிஏ திட்ட இயக்குநர் சங்கர் பெடல் வாஷ் பேசினை இயக்குகிறார்



(Release ID: 1628402) Visitor Counter : 214


Read this release in: English